சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா

என்.சொக்கன்

இந்தியா

ரசகுல்லா எந்த மாநில இனிப்பு தெரியுமா?

ரசகுல்லாவை ‘பெங்காலி ஸ்வீட்’ என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சில வருடங்களுக்குமுன் ஒடிஸா மக்கள், ‘ரசகுல்லா எங்க ஊரில்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, அது ஒடிஸா இனிப்பு என்றார்கள்.

இதைக் கேட்ட வங்காளிகள், நீதிமன்றத்துக்குச் சென்றார்கள்.

GI Tag எனப்படும் Geographical Indication முத்திரைக்காக இந்த இரு மாநிலங்களும் போட்டிபோட்டன. அதாவது, ‘புவியியல்ரீதியில் ரசகுல்லா எங்களுக்குத்தான் சொந்தம்’ என இரண்டு மாநிலங்களுமே உரிமை கொண்டாடின.

பல மாதங்களாகத் தொடர்ந்த இந்தப் பிரச்னையில்  இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.ரசகுல்லாவுக்கான GI Tag-ஐ மேற்கு வங்காள மாநிலம் பெற்றுள்ளது.

இந்தியா

INS கல்வாரி!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியக் கப்பற்படையில் ஒரு புதிய நீர்மூழ்கிக்கப்பல் சமீபத்தில் இணைந்துள்ளது. ‘INS கல்வாரி’ என்ற அந்தக் கப்பல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு.

இந்தக் கப்பலைத் தொடர்ந்து, இதே வகையைச் சேர்ந்த இன்னும் ஐந்து நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமாகத் தயாராகிவருகின்றன. அவையும் விரைவில் இந்தியக் கப்பற்படையில் இணைந்து நம் கடல் எல்லையைப் பாதுகாக்கும்.

அது சரி, கல்வாரி என்றால் என்ன?

ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் ஒருவிதமான சுறாவைத்தான் ‘கல்வாரி’ என்கிறார்கள். இதை, ஆங்கிலத்தில் Tiger Shark என்றும் தமிழில் ‘புலிச்சுறா’ என்றும் அழைக்கிறார்கள். கடலுக்கடியிலிருந்து நம்மை காக்கக்கூடிய கப்பலுக்குப் பொருத்தமான பெயர்தான்!

இந்தியா

முதல் இடம்!

புகழ் பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் ஒவ்வோராண்டும் உலக, ஆசியப் பணக்காரக் குடும்பங்களைப்   பட்டியலிடுகிறது. சமீபத்தில் வெளியான அந்தப் பட்டியலில் ஆசியாவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது ஓர் இந்தியக் குடும்பம்; அது ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் குடும்பம்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டு ‘ஜியோ’ மொபைல் சேவையை அறிமுகப்படுத்திப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. இதனால், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.அதன் தலைவரும் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்தியா

வாழத் தகுதியற்ற நகரம்!

நம் நாட்டின் தலைநகரம் டெல்லி,  இப்போது, ‘மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக’ மாறிக்கொண்டுவருகிறது.  காரணம், காற்று மாசு.

குளிர்காலத்தில், பக்கத்து மாநிலங்களான  பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவற்றில் பல்லாயிரம் கிலோ வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன.இதனால் ஏற்படும் புகை, டெல்லிக்கும்  பரவி காற்றை மாசுபடுத்துகிறது. இத்துடன் வாகனங்கள், கட்டுமானப்பணிகள் போன்றவையும் சேர்ந்துகொண்டு பிரச்னையைப் பெரிதாக்குகின்றன.

இதையடுத்து, தில்லி அரசு உடனடியாகச் செயல்பட்டு மாசை அதிகப்படுத்தக்கூடிய விஷயங்களுக்குத் தடை விதித்தது.

ஆனால், இவையெல்லாம் தாற்காலிக ஏற்பாடுகள்தான். மாசுபாட்டுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து மாற்று நடவடிக்கைகளை எடுத்தால்தான் தலைநகர்வாசிகள் சுதந்திரமாகச் சுவாசிக்க இயலும்!

இந்தியா

தோசையின் விலை!

ஒரு தோசையின் விலை நூறு ரூபாய், GST 18%, அதாவது, 18 ரூபாய். மொத்தம் 118 ரூபாய்.

சமீபத்தில் அரசாங்கம், உணவகங்களுக்கான GST-ஐ 5%ஆகக் குறைத்தது. அப்படியானால், தோசையின் விலை என்னவாகும்?

இது ஒரு பெரிய விஷயமா? ஐந்தாம் வகுப்பு மாணவன்கூட இந்தக் கணக்கைப் போட்டுவிடுவானே: தோசை 100 ரூபாய், GST 5%, அதாவது 5 ரூபாய். மொத்தம் 105 ரூபாய்.

அப்படித்தான் மக்கள் நினைத்தார்கள். ஆனால், சில உணவகங்களில் தோசை சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்தால், அதே 118 ரூபாய்தான் வந்திருந்தது.

100 ரூபாய் தோசைக்கு 5% GST சேர்த்தால் எப்படி 118 ரூபாய் வரும்? பில்லைக் கவனமாகப் பார்த்தால், உணவக உரிமையாளர்கள் செய்த ஊழல் புரியும்.

தோசை: ரூ112
5% GST: ரூ6
மொத்தம்: ரூ118

அதாவது, 100 ரூபாய் தோசையைத் திடீரென்று 112 ரூபாயாக விலை ஏற்றிவிட்டார்கள், ஆகவே, அரசாங்கம் GST-யைக் குறைத்தும் மக்களுக்குப் பயன் இல்லை. அவர்கள் அதே பழைய 118 ரூபாயைச் செலுத்தவேண்டியிருந்தது.

மக்களில் பலர் இதைக் கவனித்து, பழைய பில், புது பில் இரண்டையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பிரசுரித்து, இதைப் பரப்பினார்கள்.

இதையடுத்து, அரசாங்கம் இதில் தலையிட்டது, தவறு செய்யும் உணவகங்களைக் கண்டித்தது. இதனால், எல்லா உணவகங்களும் நியாயமாக விலையைக் குறைத்திருக்கும் என நம்புவோம்.

இந்தியா

தலையாய பிரச்னை..!

எந்த ஒரு பிரச்னை என்றாலும், பெரியவர்களிடம்தான் கருத்துக் கேட்பார்கள். அவர்களுடைய சிந்தனைகளின் அடிப்படையில்தான் நாடுகள்கூட தங்களுடைய திட்டங்களை, கொள்கைகளை வடிவமைக்கும்.

இந்தியா


நாளைய உலகம் குழந்தைகள் கையில்தானே, இந்த உலகத்தைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாமே.

இப்படி நினைத்த யுனிசெஃப் நிறுவனம், சமீபத்தில் இந்தியக் குழந்தைகளிடையே ஒரு கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. அவர்கள் எந்தெந்தப் பிரச்னைகளைப் பற்றிக் கவலைகொண்டிருக்கிறார்கள், எதையெல்லாம் விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கேட்டிருக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பின்படி, இந்தியக் குழந்தைகளைக் கவலைப்படுத்தும் முக்கியமான மூன்று பிரச்னைகள்: தீவிரவாதம், வறுமை மற்றும் கல்வி.

தீவிரவாதமும் வன்முறையும் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்பதைக் குழந்தைகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். வறுமையைப் போக்கும் நடவடிக்கைகளை எடுத்து கல்வித்தரத்தை உயர்த்தினால் அதன்மூலம் நாடு முன்னேறும் என்று நம்புகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தியா இன்னும் வேகமாக, இன்னும் சிறப்பாக வளர வேண்டுமென்றால், எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? இதுபற்றி உங்கள் நண்பர்கள், ஆசிரியர்களுடன் உரையாடுங்களேன்.

இந்தியா

உலக அழகி

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவ மாணவியான மனுஷி சில்லார் வெற்றிபெற்றார். இந்தக் கௌரவத்தைப் பெறும் ஆறாவது இந்தியப் பெண்மணி இவர்.

மனுஷியின் தந்தை ஓர் ஆராய்ச்சியாளர். தாய், பேராசிரியர். குச்சுப்புடி நடனம், மேடை நாடகம்  ஆகிய  கலைகளில் ஆர்வம் கொண்டவர்.

அழகு என்பது வெளியில் மட்டும் இல்லை. மனுஷி, பல சமூகப்பணிகளில் பெரிய ஆர்வம்காட்டிவருபவர். குறிப்பாக, சாதாரணப் பின்னணியிலிருந்து வரும் பெண்களின் முன்னேற்றத்துக் காகக் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறவர். ‘உலக அழகி’ பட்டம், இவருடைய சேவைப்பணிகளை இன்னும் பல படிகள் முன்னெடுத்துச் செல்லும்.

இந்தியா

தெரியுமா?

* கல்பனா சால்வா, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் எனும் ஊரில் பிறந்தவர்.