Published:Updated:

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!
News
அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

அவரின் கொள்கைப்படி சாதியை எது முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார் அது வேதமானாலும் சரி, புராணமானாலும் சரி, தமிழனாலும் சரி, கடவுளேயானாலும் சரி.

Published:Updated:

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

அவரின் கொள்கைப்படி சாதியை எது முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார் அது வேதமானாலும் சரி, புராணமானாலும் சரி, தமிழனாலும் சரி, கடவுளேயானாலும் சரி.

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!
News
அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

`பெரியார்' இந்த ஒற்றைப் பெயரைக் கேட்டால் ஒட்டுமொத்த ஆதிக்க வர்க்கத்தினரும் நடுங்கிப்போவார்கள். ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு வெள்ளையர்கள் ஆட்சி செய்தாலும் மனு தர்ம அடிப்படையின் முதன்மை சாதிய வருணமான பார்ப்பனர்களே முழு அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டிருந்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருந்து வந்தது. அவ்வளவு ஏன், அரசு வேலை என்பதெல்லாம் பெரிய வார்த்தை, அவர்களை மனிதனாகக்கூட மதிக்காமல், அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. ``கடவுள்தான் தீண்டாமையைப் படைத்தவர் எனில் கடவுளை ஒழித்து விட்டே மறுவேளை" என்று பேசியவர் பெரியார்.

பெரியார் இந்து மதத்தையும் இந்து மதக்கடவுள்களையும்தாம் அதிகம் விமர்சித்துள்ளார். அவ்வளவு ஏன் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமே நடத்தியிருக்கிறார். மொத்த இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அதிலும் தமிழ்நாட்டில் 87 சதவிகிதம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். ஆனாலும் ``பெரியார் சிலையை உடைப்போம்" என்று தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் கருத்து தெரிவித்தபோது ஒட்டுமொத்த தமிழகமே வெகுண்டெழுந்தது. நிலைமை தீவிரமடைய சட்டென்று அது என் அட்மின் தெரிவித்த கருத்து என்றார் எச்.ராஜா. இந்து மதத்தின் கொள்கைகளை தூக்கிப்பிடிக்கும் தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர், `இந்து மதமே வேண்டாம் மக்களை அது அடிமையாக்குகிறது' என்று உரைத்த, கடவுளர் சிலை உடைப்பு போராட்டம் நடத்திய நாத்திகரின் சிலையை உடைப்போம் என்று சொன்னதற்கு ஏன் `இந்து பெரும்பான்மை தமிழகம்' கொந்தளிக்க வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை தேடினாலே போதும் அவர் யாரென்று தெரிந்துவிடும். 

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

கோயிலில் பட்டியலின மக்கள் நுழையப் போராடி அனுமதி வாங்கித்தந்தது கடவுளை அனுதினமும் ஆராதிக்கும் ஆத்திகவாதிகள் இல்லை. `கோயில் என்பது பொது இடம், அங்கே பட்டியல் இன மக்கள் நுழைந்தால்தான் சாதி வித்தியாசம் ஒழியும்' என்று கோயிலில் அனைத்து மக்களும் நுழையக் காரணமானவர் கடவுள் மறுப்பு பேசிய பெரியார்தான். இந்து மதத்துவத்தைத் தூக்கிப்பிடிக்கும் யாரும் பட்டியலினத்தவருக்கான உரிமைகளைப் பேசவில்லை. அவர்கள் இந்து மதமாகவே இருந்தாலும் பார்ப்பனிய சனாதனத்தையும் பிறப்பின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்றுள்ள வருணாசிரம தர்மத்தையே தூக்கிப்பிடித்தார்கள். அவர்களுக்கான அடிப்படை உரிமை, பொது இடங்களில் புழங்கும் உரிமைகளைப் போராடி வாங்கியவர் பெரியார்.

இப்படியிருக்கப் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார், எதனால் சொன்னார், என்று அறியாமல் அவர் செயலை மேம்போக்கான தர்க்கம் பேசுபவர்கள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு என்னவெனில் கடவுள் மறுப்பாளர் பெரியார் ஏன் கோயிலில் நுழையும் அனுமதிக்காகப் போராடினார் அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கலாமே என்பார்கள். அவருக்குத் தெரிந்திருக்கிறது எவராவது வருங்காலத்தில் இப்படித் தன் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி திசைத்திருப்பி விடுவார்களென்று. அவர் அன்றே அவர்களுக்குத் தந்த பதில் இது.


``சாதி வித்தியாசத்துக்கு ஆதாரமாக உள்ள சாலை, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி முதலியவை எல்லாம் ஒருவிதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருப்பதனாலும் இந்தக் கோயில்கள்தான் சிறிதும் மாற்றுவதற்கு இடம் தராமல் சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது. ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோயிலுக்குள் போய்த்தீர வேண்டும் என்று கூறுகிறேனே ஒழிய , பக்திக்காகவோ மோட்சத்துக்காகவோ அல்லவே அல்ல. கோயிலில் சமத்துவம் அடைந்துவிட்டால் மற்றக் காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோயிலில் நாம் பிரவேசிக்க செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை." என்று பெரியார் `குடி அரசில்'  27-10-1929 ல் எழுதியுள்ளார்.

அதிகாரங்களுக்கு எதிரானவர்... அடக்குமுறைக்கு எதிரானவர்... ஏனெனில் அவர் பெரியார்!

பூஜை வேலையில் தமிழ் பேசக்கூடாது, அது நீஷப் பாஷை என்று கூறுபவர்களும், அவர்களை ஆதரிப்போர்களும் வைக்கும் குற்றச்சாட்டு பெரியார் தமிழை `காட்டுமிராண்டி மொழி' என்றார் என்பது. தமிழுக்காக அவர் கைதாகி சிறையிலிருந்த கதை யாருக்காவது தெரியுமா? 

1937 ம் ஆண்டு காங்கிரஸின் ஆட்சியில் இராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோது இந்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாகக் கற்பிக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டபோது பெரியாரும் நீதிக்கட்சியும் முதல் குரலாக எதிர்த்தார்கள். சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டங்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு நீடித்தது. 1938 ம் ஆண்டு நவம்பர் 13 அன்று ஒற்றைவாடைத் திரையரங்கில் நடந்த பெண்கள் மாநாட்டில் பேசியவர் பெண்கள் உணர்ச்சியைத் தூண்டினார், இதனால் அடுத்த நாள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி முன்பு பெண்கள் 5 பேர் ``இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்று கோஷமிட்டனர். இதனால் ஆசிரியரும் மாணவர்களும் உள்ளே புக முடியவில்லை. இதன் விளைவாக டிசம்பர் 5 , 1938 ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். பெரியாருக்கு மூன்று வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால் மே 22 ,1939 அன்று விடுதலை செய்யப்பட்டார். தமிழ் அழியாமல் இருக்க தமிழறிஞர்களைத் திரட்டி மூன்று வருடம் போராடியவரை, 6 மாதம் சிறையில் இருந்தவரை `தமிழ் விரோதி' என்கிறார்கள்.

உண்மையில் தமிழ் குறித்து அவர் என்ன சொன்னார். ஏன் காட்டுமிராண்டி மொழி என்றார். புதுமைகளை ஏற்க மறுக்கும் மொழியாகத் தமிழ் இருக்கிறதென அதைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். மேலும் குடி அரசில் 1936 ம் ஆண்டு ஜனவரி 26 எழுதியவர் ``தமிழ் உலகப் பாஷைகள் வரிசையில் முன்னிற்க வேண்டுமெனில் மதத்தையும் தமிழையும் பிரிக்கவேண்டும் " என்று எழுதினர். உயர்ந்த மொழியாக இருந்த தமிழில் ஆரிய கலப்பால் வருணங்கள் அதில் நுழைந்ததென்றும் அதை அகற்ற மறுக்கும் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்தார். ஆனால் இதே பெரியார் தானே தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அவரின் கொள்கைப்படி சாதியை எது முன்னிறுத்தினாலும் அவர் எதிர்ப்பார் அது வேதமானாலும் சரி, புராணமானாலும் சரி, தமிழனாலும் சரி, கடவுளேயானாலும் சரி. அவர் பார்ப்பனியத்தை மட்டுமே எதிர்க்கவில்லை, எவரொருவர் சுயசாதிப்பெருமையைத் தூக்கிப்பிடித்து ஆதிக்கத் திமிரோடு இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் எதிர்த்தார். சாதி அடையாளங்களை யாரும் தூக்கிப்பிடித்தல் கூடாதென வலியுறுத்தினார்.

பகுதிப் பகுதியாக பெரியாரை படித்தால் அவரோடு முரண் ஏற்படுவது போல தோன்றும். உண்மையில் அவர் ஏன், அப்படிச் சொன்னார், எதற்கு, எப்போது, அதைச் சொன்னார் என்று தேடினால், அவரைப் படித்தால் அவர் யாரென்று தெரியும். முழுதாகப் பெரியாரைப் படித்தால் மட்டுமே அவர் யாருக்கானவர் என்பதை அறிய முடியும். அவர் அடக்குமுறைக்கு எதிரான பெரியார், ஆதிக்கங்களுக்கு எதிரான பெரியார் , அதிகாரத்தை என்றும் மிரட்டும் பெரியார். ஏனேனில் அவர் பெரியார்!