
தமிழ்ப்பிரபா, படம்: பார்த்திபன் செல்வராஜன்
``எனக்கு 85 சதவிகிதம் பார்வை தெரியாது. இந்தப் பார்வைக்குறையால சின்ன வயசிலிருந்தே நான் சந்திச்சது கேலியும் அவமானங்களும்தான். எங்க ஏரியாவுல என்னை `புட்டிக்கண்ணா’னுதான் கூப்பிடுவாங்க. இந்தச் சமூகத்து மேல எனக்கு இருந்த கோபம்தான் என் திறமையா வெளிப்பட்டதுன்னு நம்புறேன். அதனாலதான் சண்டைபோடுற இந்த விளையாட்டை அவ்ளோ வெறியா கத்துக்கிட்டேன்” - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த மனோகரனின் வார்த்தைகள்தாம் இவை. மனோகரன் இந்தியாவின் ஜூடோ சாம்பியன். 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரின் பதக்கப்பட்டியல் மிக நீளமானது.
சரியான பார்வைத்திறன் கொண்டவர்கள்கூட, மனோகரனின் வேகமும், அவர் எதிரியைத் தடுக்கும் லாகவமும் கைகூடாமல் வியந்துபோய்ப் பேசுகிறார்கள். `கராத்தே’ எனும் தற்காப்புக் கலையை ஐந்து வருடங்களாகப் பயின்றவர், பிளாக் பெல்ட் உட்பட அனைத்தும் வாங்கிய பிறகு, தன் பயிற்சியாளரின் அறிவுரைப்படி 2010-ம் ஆண்டு முதல் ஜூடோ கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். தீவிரப் பயிற்சியாலும் தன்னம்பிக்கையாலும் `விழி சவால் கொண்டவர்’ பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து கலந்துகொள்ள ஆரம்பித்த மனோகரன் பதக்கங்களை வாரிக் குவிக்கிறார்.

தான் மட்டுமன்றி, தன்னைப்போலவே தன் கிராமத்துச் சிறுவர்களும் சாதனை படைக்க வேண்டும் என, தொடர்ந்து 30 சிறுவர்களுக்கும் மேல் ஜூடோ பயிற்சி கொடுத்துவருகிறார் மனோகரன். அவரின் மாணவர்கள், மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஜூடோவில் பதக்கங்களை வென்றுவருகிறார்கள்.
`ஏஷியன் பாரா கேம்’ போட்டியில் வென்ற பரிசுத்தொகையான பத்து லட்சம் ரூபாயில், தன் தங்கையின் திருமணத்தை நடத்திமுடித்திருக்கிறார் மனோகரன். காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மனோகரனுக்கு, மத்திய அரசு 50,000 ரூபாய் பரிசாகக் கொடுத்திருக்கிறது. மாநில அரசு எப்போதும்போல் மெளனம் சாதிக்கிறது.
``ஒலிம்பிக்ல கலந்துகிட்டு, இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித்தரணும். இதுதான் சார் என் லட்சியம். ஆனா, எங்க ஊர்ல இருந்து தினமும் நான் நேரு ஸ்டேடியத்துக்குப் பயிற்சிக்குப் போகணும். அதுவும் காலைல நாலு மணிக்கெல்லாம் எழுந்துபோகணும். என்னால நிச்சயமா அது முடியாது. `அங்கேயே ஹாஸ்டல்ல தங்கி பிராக்டீஸ் பண்றேன்’னு சொன்னேன். `அந்த அளவுக்கெல்லாம் ஃபண்ட்ஸ் இல்லை’னு திருப்பி அனுப்பிட்டாங்க. 2018-ல ஏஷியன் பாரா கேம் நடக்குது. அதுக்கும் பயிற்சி எடுக்கணும். இப்போ எங்கிட்ட இருக்கிற வசதியை வெச்சு, மேட் இல்லாம வீட்டுப்பக்கத்திலயே பிராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். பார்வை எனக்குப் பிரச்னையில்லை. நிச்சயமா, இன்னும் பெருசா ஜெயிப்பேன் சார். அப்போ, நீங்கதான் என்னைப் பேட்டி எடுக்க வரணும்” என்று உற்சாகமாய்ச் சிரிக்கும் மனோகரனுக்கு 28 வயது. மனோகரனின் ஒளிமிகுந்த கண்களில் பல கனவுகள் தெரிகின்றன. கனவு மெய்ப்பட வேண்டும்!