
தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி
“2005-ம் வருஷம், சிவகங்கை மாவட்டத்தில வெள்ளைக்குளம்னு ஒரு கிராமத்துக்கு சமூகப் பணிக்காகப் போனேன். அந்த கிராமத்தைச் சேர்ந்த நிறைய குழந்தைகளைத் தொழிலாளர்களாக ஆந்திராவிலுள்ள வாரங்கல் மாவட்டத்துக்குக் கூட்டிட்டுப் போனதாகத் தகவல் சொன்னாங்க. ஒரு சின்னப்பையன் அங்கிருந்து அனுப்புன போஸ்ட் கார்டுல இருந்த ரப்பர் ஸ்டாம்ப்ப வெச்சு, நானும் என் நண்பரும் அங்க போனோம். அந்தக் குழந்தைகள் அங்குள்ள முறுக்கு கம்பெனில வேலை செஞ்சிட்டிருந்தாங்க. அங்க இருந்தவங்ககிட்ட வியாபாரம் பேசுறது மாதிரி பேசி, ரெண்டு மூணு நாள் அங்க தங்கியிருந்தோம். பத்துக்குப் பத்து ரூம்ல பதிமூணு குழந்தைங்க. அங்க அந்தப் பிள்ளைகளைப் பாத்த நிலைமையை இப்ப நினைச்சாலும் கண்ணு கலங்குது” - ஆந்திராவிலுள்ள காவல் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தமிழகத்தைச் சேர்ந்த பதிமூன்று குழந்தைகளையும் மீட்டெடுத்த தேவநேயனின் குழந்தைகள் நலப்பணி அங்கிருந்துதான் தொடங்குகிறது. தேவநேயன் கடந்த இருபது ஆண்டுகளாக மனித உரிமைத் தளத்தில் இயங்கி வருபவர். குறிப்பாக, குழந்தை உரிமைகள் சார்ந்து தொடர்ந்து போராடி வருகிறார்.
“குழந்தைகளைக் கருணையுடன் அணுகாம, அவர்களுக்குச் சலுகை கொடுப்பதுபோலச் செயல்படாம, அவர்களுக்கான உரிமையுடன் பிள்ளைகளை அணுகணும்” என அழுத்திச் சொல்லும் இவர், தமிழகம் முழுக்க குழந்தைகள் சார்ந்து இயங்கும் பெருவாரியான விடுதிகளுக்குச் சென்று சிறுவர்களை எப்படி நடத்த வேண்டுமென, காப்பாளர்களுக்குக் கற்றுத்தருகிறார். எல்லா விடுதிகளும் தர ஆய்வு செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததன் பேரில் அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான விடுதிகள் இவரால் இனங்காணப்பட்டுள்ளன.

வகுப்பில் பிள்ளைகளை நடத்தும் விதம் குறித்து ஆசிரியர்களுக்கும், குழந்தைகள் பற்றிய வழக்குகள் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமெனக் காவல்துறை உயரதிகாரியிலிருந்து கான்ஸ்டபிள் வரைக்கும், குழந்தைகள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் எவ்வளவு கவனமாகக் கையாண்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமெனப் பத்திரிகையாளர்களுக்கும், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் என, சமூகத்தில் இயங்குகிற அனைவருக்கும் குழந்தைகள் உரிமை குறித்து வகுப்பெடுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார் தேவநேயன். தமிழகம் முழுக்க இதுவரை முப்பத்தைந்து பெண் குழந்தைகளைக் குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் தேவநேயன்.
“ஆரம்பத்துல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உசிலம்பட்டி போன்ற இடங்கள்லதான் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும். இப்போ சென்னையிலேயே அது நடக்க ஆரம்பிச்சுடுச்சு. காரணம், இங்க இருக்கிற பூர்வீகக்குடிகளைக் கட்டாய இடமாற்றம் செய்ததுதான். அந்தப் பிள்ளைகளோட பெற்றோர்கள் வெகுதூரம் வேலைக்குச் சென்று திரும்புறதால வீட்டிலிருக்கிற பெண் குழந்தைகள் எளிதில் பாலியல்ரீதியிலான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். விஷயம் வீட்டுக்குத் தெரிஞ்சவுடனே, குற்றம் பண்ணவனுக்கே கட்டிவெச்சிடுற கொடுமையும் நடக்குது. சென்னையிலேயே இந்த நிலை என்றால் கிராமங்களில் எப்படி இருக்கும். இந்த நிலையை மாற்றத்தான் நாங்கள் தொடர்ந்து இயக்கிவருகிறோம்’’ என்கிறார் தேவநேயன்.
``மனித உரிமை என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியதுன்னு இந்தச் சமூகம் உணரணும். அதுக்கு ஒரு கல்வி தேவைப்படுது. அந்தக் கல்வியை மக்கள்கிட்ட கொண்டுபோற வேலையைத்தான் நாங்க செஞ்சிட்டிருக்கோம்” என்கிற தேவநேயனின் குரலில் தெறிக்கிறது நம்பிக்கை!