மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!

தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: ப.சரவணக்குமார்

``நாலு வருஷங்களுக்கு முன்னாடி, என் மகளோடு பைக்ல போயிட்டிருந்தேன். அப்ப ஒரு தம்பி, பைக்ல வேகமா வந்து எங்களை மோதிட்டார். அவர் மோதின வேகத்துல என் மகள் கீழ விழப்போக, பைக்கைக் கன்ட்ரோல் பண்றதை விட்டுட்டு என் மகளைப் புடிச்சேன். பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகலை. எனக்குத்தான் அங்கங்க காயம். `குறைபாடு உள்ள நானே வண்டியை சரியா ஓட்டிட்டுப் போறேன். இவங்களுக்கு எல்லாம் நல்லாதானே இருக்கு. ஏன் இப்படி ஓட்டுறாங்க?’னு ஆச்சர்யம்தான் வந்துச்சு’’ என்று புருவம் உயர்த்திச் சிரிக்கும் வீரமணிக்கு, பிறவியிலேயே செவித்திறன் இல்லை. அவரால் பேசவும் முடியாது.

``ஏன் சாலை விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்யணும்னு தோணுச்சு” என நான் கேட்ட கேள்விக்கு, காற்றில் ஓவியம் வரைவதுபோல, தன் சைகை மொழியால் அவர் என்னிடம் பேச, அருகில்   இருந்து அதை  விவரித்துக்கொண்டிருந்தார், வீரமணியின் நண்பர் ராதாகிருஷ்ணன்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!

வீரமணி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மைம் குழுவினர் வந்து `மைம்’ நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள். ஒரு பார்வையாளராக ஓரத்தில் நின்று அதைக் கவனித்துக்கொண்டிருந்த வீரமணி தன்னிச்சையாக, அவர்கள் மேடையில் செய்ததைத் தன் முகத்தைக்கொண்டும் கைகளைக்கொண்டும் செய்துபார்க்க, கூட்டம் இவர் பக்கம் திரும்பிக் கைதட்டியிருக்கிறது. தன்னால் பேச, கேட்க முடியாமல்போனாலும், பாவனைகளின் மூலம் தன் உணர்வை உயிர்ப்புடன் வெளிப்படுத்துவதற்கு இது பொருத்தமான கலையாக இருக்கும் என உணர்ந்தவர், மைம் கோபியின் குழுவில் சேர்ந்து முறையாக மைம் கற்றுக்கொண்டார். தற்போது அந்தக் குழுவில் உள்ள முக்கியக் கலைஞர்களுள் வீரமணியும் ஒருவர்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!

வார விடுமுறை நாள்களில் முகத்தில் மேக்கப் போட்டுக்கொண்டு, காவல்த்துறை அனுமதியுடன் சாலையில் இறங்குகிறார்.  சென்னையின் முக்கியமான சாலைகளைத் தன் இலக்காகக்கொண்டு வலம்வருகிறார் வீரமணி. வாகனங்கள் சிக்னலில் நிற்கும்போது ஓட்டுநர்களைப் பார்த்து `ஹெல்மெட் போடுங்க’, `சீட் பெல்ட் போடுங்க’, `குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீங்க’, `ட்ரிபிள்ஸ் போகாதீங்க’ எனப் பல கோரிக்கைகளை, குரலின்றி சாப்ளினின் உடல்மொழியில் நிகழ்த்தி, மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - சாலையில் சாப்ளின்!

பெட்ரோல் டாங்க்மீது ஹெல்மெட் வைத்திருப்பவர்களிடம் சென்று, ஹெல்மெட்டை எடுத்து அவர்களிடம் கொடுக்கிறார். அதை அவர்கள் மாட்டிக்கொண்டதும் தன் இரண்டு கரங்களையும் குறுக்காக மடக்கித் தலைகுனிந்து நன்றி தெரிவிக்கிறார். தொடர்ந்து மூன்று வருடங்களாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்துவரும் வீரமணி, ``மத்தவங்களைக் காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் இந்தச் சமூகத்துக்கு முன்னுதாரணமா இருக்கும்போதுதான் அது பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டுபண்ணும்’’ என்று மைம் மொழியிலேயே பேசி, கட்டைவிரலால் வெற்றிக் குறியீடு காட்டுகிறார்.

தனக்குத் தெரிந்த வித்தையை மேடையில் மட்டுமே செய்துகொண்டிருக்காமல், அதை மாற்றத்துக்கான கருவியாக மக்கள் முன் கொண்டு செல்கிற தருணத்திலிருந்துதான் ஒரு மகத்தான கலைஞன் உருவெடுக்கிறான். வீரமணி அவர்களில் ஒருவர்!