மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!

தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: வீ.நாகமணி

கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஊருக்குள்ளே பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது எளாவூர். அங்கிருந்து சுண்ணாம்புக் குளம் என்கிற கிராமத்துக்குச் சென்று ‘இருளர் காலனி’ எங்கே இருக்கிறது எனக் கேட்டால்  ஊருக்கு  ஒதுக்குப்புறமாக  இருக்கும் குடியிருப்புக்குத் தெலுங்கு தமிழில் வழிகாட்டுகிறார்கள் கிராமவாசிகள். மருத்துவர்  அனு ரத்னா அங்குதான் எங்களை வரச் சொல்லியிருந்தார். `சென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு பகுதியா?’ கண்முன் விரியும் காட்சிகளை என் கண்கள் நம்பமறுத்தது.

மெட்டி அணிந்த சிறுமிகள் கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. 20 வயதுப் பெண் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். வீங்கிய முகத்துடன் இருந்த 2 வயதுக் குழந்தைக்கு மூன்று நாள்களாக கடுமையான ஜுரம். அந்தக் குழந்தையின் பெற்றோர் பெரியபாளையத்துக்கு மரம் வெட்டும் வேலைக்குப் போக நான்கு வயது அண்ணன்தான் அந்தக் குழந்தையின் கேர்டேக்கர். ஒரு குழந்தையிடம் ``காலையில் என்ன சாப்பிட்ட?’’ என்று கேட்டால் ``பழ்து’’ என்றது. மதியம், இரவு என்று கேட்டால் ``பழ்து’’ என்கிற பதிலே திரும்பத் திரும்ப வந்தது.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!

இந்த இருளர் குடியிருப்புக்கு அனு ரத்னா மூலமாகத்தான் மருத்துவம் போய்ச்சேர்கிறது.  இவர் பொன்னேரியிலுள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் தலைமை மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். வாரத்தில் ஒருநாள் தனக்குக் கிடைக்கும் விடுமுறையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடியமர்த்தப்பட்டிருக்கும் இருளர் சமூகத்துக்கு மக்களுக்கும், திருநங்கைகளுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச மருத்துவ சேவையும் ஆலோசனையும் செய்துவருகிறார்.

 கூச்சமும் தயக்கமும் ஒன்றுசேர்ந்தபடி மருத்துவர் முன் கூடியமர்கிறார்கள் காலனிவாசிகள். அவர்களுக்கு அடிப்படை மருத்துவ விழிப்பு உணர்வுத் தகவல்களையும், நோய்க்கான மருத்துவம் குறித்தும் எளிமையாக எடுத்துச்சொல்கிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!

அந்தக் குடியிருப்பில் உள்ள பெரும்பான்மைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென அவசியத்தை உணர்த்துகிறார் மருத்துவர் அனு ரத்னா. “இங்க பெண்குழந்தைகளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சிடுறாங்க. முப்பது வயசுக்குள்ளயே மூணு நாலு குழந்தைங்களைப் பெத்து, பலகீனமாகிப்போய் செத்துப்போயிடுறாங்க” என்று அவர் சொல்லும்போது வேறு யாரையோபற்றிக் பேசுவதுபோல அந்தச் சிறுமிகள் அவரையே  பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 “ஊருக்கு  ஒதுக்குப்புறமாக  வைக்கப்பட்டிருக்கிற இந்த மக்களுக்கு குடிக்கச் சரியான தண்ணி இல்ல. இவங்களுக்குன்னு இருக்கிற தனிக் கிணறு எப்படி இருக்குனு பாருங்க” என்று என்னை அழைத்துச் சென்றார். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து போனோம். பாசியும் பூச்சியும் ஆக்கிரமித்திருந்த அந்தச் சிறிய கிணற்று நீரைத்தான் இவர்கள் குடித்து நோய்வாய்ப்படுகின்றனர்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - புனிதப் பயணம்!

“என்னோட சொந்த ஊர் சிவகங்கைல குன்றக்குடி. எந்தப் பதவிக்குப் போனாலும், எந்த வேலை செஞ்சாலும் நம்முடைய அக்கறை சாதிய சமூகத்தின் விளிம்புநிலை மக்களையொட்டித்தான் இருக்கணும். சம உரிமையோட மனிதர்களை அணுகணும்னு  என் அப்பா அம்மா சின்ன வயசுலேயே எங்களுக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. ஒரு மருத்துவரா இல்லாம வேற துறையில இருந்திருந்தாலும் இவங்களுக்காகத்தான் நான் இருந்திருப்பேன். தங்களுக்கு இலவசமாக மருத்துவ வசதிகளும் மற்றவையும் கிடைக்கும்னாலும் அதைத் தேடிப்போய் வாங்குறதுக்குகூட இந்த மக்களுக்கு அவ்ளோ தயக்கம் இருக்கும். காரணம், இந்தப் பொதுச்சமூகம் இவங்களுக்குள்ளே அவ்ளோ தாழ்வு உணர்ச்சியை வளர்த்து விட்டிருக்கு. சரி, அவங்க வரலன்னா என்ன, நான் தேடிப்போறேன்” என்கிற அனு ரத்னாவின் கால்தடங்கள் பதியாத திருவள்ளூர் கிராமங்கள் இல்லை.

அனு ரத்னாவின் புனிதப் பயணத்தைப் பின்தொடர்வோம்!