மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - மாற்றும் திறனாளி!

தெய்வத்தான் ஆகாதெனினும்! - மாற்றும் திறனாளி!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - மாற்றும் திறனாளி!

தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்

``ஏழாங்கிளாஸ் படிக்கும்போது என்னையும் வேடந்தாங்கல் கூட்டிட்டுப் போறேன்னு ஸ்கூல்ல சொன்னதும் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ஒன்பது மாசத்துல இருந்தே எனக்கு நடக்க வரலைங்கிறதால வீட்ல எங்கயுமே கூட்டிட்டுப் போக மாட்டாங்க. முதன்முறை வெளியுலகத்தைப் பார்க்கப் போறேன்னதும் அவ்ளோ சந்தோஷப்பட்டேன்.  பஸ்ல ஏறப்போற நேரத்துல ஒரு டீச்சர் ‘தீபக் வந்தா எல்லோருக்கும் கஷ்டமா இருக்கும்னு சொல்லி என்னை இறக்கி விடச் சொன்னாங்க. அப்போ எங்கம்மாதான் என்னைவிட ரொம்ப அழுதாங்க. என்னைத் தூக்கி அழுதுகிட்டே அங்க இருந்து நடந்து வந்தாங்க. நான் சாகுற வரைக்கும் அந்த நாளை மட்டும் மறக்கவே முடியாது!” என்று சொல்லும் தீபக் இன்று மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போராளி!

தெய்வத்தான் ஆகாதெனினும்! - மாற்றும் திறனாளி!

குடும்பம், நண்பர்கள், வேலை கேட்டுச் சென்ற இடங்கள் என எங்குமே புறக்கணிப்பு. என்னவாகினும் படிப்பை மட்டும் மகன் விட்டுவிடக்கூடாதென்று எண்ணிய தீபக்கின் அம்மா, அவரை ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறார். `தொடர்ந்து தன்னைப் புறக்கணிக்கும் சமூகத்தின் முன் கல்வியின் மூலம் கர்வத்தோடு நிற்பதுதான் பெருமை’ என்று வைராக்கியத்துடன் படிக்க ஆரம்பித்த தீபக், பி.பி.ஏ முடித்தார். அதற்குப் பிறகு லயோலோ கல்லூரியில் எம்.எஸ்.டபிள்யூ படித்துமுடித்து, சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் மனோதத்துவ மற்றும் மருத்துவ சமூகப்பணி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவர் சிறப்பாகப் பணிபுரிந்ததால் அவரின் பேராசிரியர்களின் உதவியோடு லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சைக்கியாட்ரிக் ரிசர்ச் படித்து இந்தியா திரும்பியவர், இன்று லயோலா கல்லூரியில் மனோதத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.

படிப்பு, வேலை என்று எல்லாமே கிடைத்துவிட்டபோதிலும், தன்னைப்போன்ற மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகவும் கடந்த பத்தாண்டுகளுக்கும்மேல் உழைக்கிறார் தீபக்.

“நான் பயணம் செய்த வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக அங்கே இருக்கிற அரசுகள் உருவாக்கித்தந்திருக்கிற உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபோது பிரமிப்பாகவும் கூடவே ஏக்கமாகவும் இருந்தது. நம்ம நாட்டுலயும் இதையெல்லாம் செய்ய பணம் கொட்டிக் கிடக்கு. ஆனா பணத்தைத்தாண்டி வேற ஒண்ணு வேணும். அரசாங்கத்துக்கு அந்த மனசு இல்ல. எங்கமேல அக்கறை இல்ல. அடிப்படை உரிமைகளையே போராடிப்பெற வேண்டியிருக்குறது இங்க மட்டுந்தான் என்பதை உணர்ந்தேன்” என்று சொல்லும் தீபக், திமுக ஆட்சியில் இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலனை முன்வைத்து வைக்கப்பட்ட 19 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர். மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் இருக்கைகளில் முறைகேடு நடப்பதைத் தடுக்க, தண்டவாளத்திலும் தலைவைக்கத் தயங்கியதும் இல்லை.

தற்போது விளிம்புநிலை மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகப் போராடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். “மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கிற சுயம்வரத்துல, இந்தந்த சாதிகள்ல வரன் வேணாம்னு கவனமா சொல்றாங்க. இது தவிர அரசாங்கம் கொடுக்கிற நலத்திட்டங்களை வழங்குவதுல சாதிரீதியான பாகுபாடுகள் இருக்கு. இதுல அதிகம் பாதிக்கப்படுறது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள்தான். அடித்தட்டில் இருக்கும் அவங்களுக்கான தேவைகளை சரி செய்யறது ரொம்ப முக்கியம். அது தவிர மாற்றுத் திறனாளிகள் எல்லோருக்கும் பெரியாரையும் அம்பேத்கரையும் சின்னச் சின்னக் கதைகள் மூலமா அறிமுகப்படுத்திட்டிருக்கேன்’’ எனும் தீபக், தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் எதற்கும் அஞ்சாமல் தனி ஆளாக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு இன்றும் சிறை சென்றுகொண்டிருக்கிறார்.

தடைகள் எதுவாக இருந்தாலும் அதை உடைத்துப் பாய்கிறது தீபக்கின் உரிமைக் குரல்!