
தள்ளாடி மேலெழும் தலைமுறை!சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்
ஒருத்தனின் கதை வழியாக ஒட்டுமொத்தத் தலைமுறையும் தப்பிப் பிழைக்க எத்தனிப்பதைக் கடத்த விழைகிறேன். கடந்த மூன்று தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் துயரம் இது. வெக்கையில் உழலும் எருக்கம்பூக்களும் தப்ப முடியவில்லை இதில். மலைக் குளுகுளுப்பில் வளரும் காட்டுச் சேம்பு இலைகளும் தப்பவில்லை. உதிர்ந்து வாடிய காட்டுச் சேம்பு இலையொன்றைப் போல எனக்கு முன்னால் அமர்ந்திருந்தான் விக்டர்; என் கல்லூரிக்கால நண்பன். அவன் அரும்பு மீசை துருத்திக்கொண்டிருந்த காலத்தில், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை கிதாரில் இசைத்ததை என் கண்முன்னால் கொண்டு வந்து பார்த்தேன். குதூகலமாய் இருந்த காலத்தின் சாட்சியமாய் இப்போது சிறு இசைகளை மட்டுமே அவனால் கிதாரில் மீட்க முடிந்தது. வாடி வதங்கியிருந்த முகமெங்கும் துயரத்தின் ரேகைகள்.
கடந்த இருபது வருடங்களாகக் காணாமல் போயிருந்தான். வெளிச்சம் ஒளிக்கற்றைகளாக உள் விழும், பழைய பிரிட்டிஷ் மலை பங்களாவில் மனம் திருந்திய மைந்தனாய் அமர்ந்திருந்த போது, அவனுக்கு முன்னால் இருந்த பியானோவை திடீரென வாசிக்க ஆரம்பித்தான். மறுபடி அவன் உற்சாக மனநிலைக்குத் தாவிய போது தூறலைச் சுமந்துகொண்டிருக்கும் மேகம் பனித்திரை போல எங்களிருவருக்குள்ளும் புகுந்து கடந்து போனது. அவனையறியாமல் சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் அந்த நூறாண்டுக்காலப் பழைமையான பியானோவின் மீது விழுந்தது. வயதான ஒற்றைக் காட்டு யானையின் பிளிறல் சத்தம் அந்தப் பியானோவிலிருந்து மேலெழுந்து வந்தது.

``அந்தக் காலத்திலேயே நான் 1124 மார்க் எடுத்தேன் மக்கா. எங்கப்பா ரிசல்ட் வந்தன்னைக்கு உனக்கு என்ன வேணும்னு கேட்டார். என்ன கேட்கறதுன்னே தெரியலை. எனக்கு பரோட்டா வாங்கித் தருவீங்களான்னு கேட்டேன். அந்தளவுக்கு அப்பாவியாக இருந்தேன்” என்றபடி அவனுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அதற்கடுத்து அவன் கராத்தே வகுப்புக்குப் போனான். கால்பந்து விளையாடப் போனான். கல்லூரி அணிக்கு விளையாடினான். ``போதையில உடம்பையும் மனசையும் விட்டுட்டேன் மக்கா” என்று சொல்லிவிட்டு, அவனுடைய பழைய குடும்பப் பெருமிதங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ``அந்தக் காலத்திலயே ஊர்ப் பொதுக் காரியத்துக்கு எங்க குடும்பம் ஐம்பது ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. நான் சின்னப் பையனா இருந்தாலும் உனக்கும் கொடுக்க சம்மதமான்னு பெரிய மனுஷன் போல நினைச்சுக் கேட்டாங்க. நானும் சம்மதம்னு சொன்னேன். இன்னைக்கு என் கையில வெறும் நாற்பது சென்ட் நிலம் மட்டும்தான் இருக்குதுன்னா அதுக்குக் காரணம் நான் கையில் எடுத்துக்கிட்ட போதைதான்” என்று அவன் சொல்லச் சொல்ல அவனது பழைய பெருமிதம் கலந்த வாழ்க்கை என் கண்முன்னால் விரிந்தது.
அவன் அப்பா இருந்தவரை முடிந்தளவுக்கு எல்லாவற்றையும் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருக்கிறார். இவனையும்கூட ஒரு நிலத்தைப் பக்குவப்படுத்துவதைப்போலத்தான் உழுது கிளறி மேலே கொண்டு வரப் போராடியிருக்கிறார். போதை எல்லா நம்பிக்கைகளையும் அடித்துச் சாய்த்து விட்டது. போதை ஒரு பூரான் மாதிரி அவர்கள் வாழ்க்கையில் ஊர்ந்துவிட்டது. எல்லாச் சொத்துகளையும் விற்றுக் குடித்து அழித்துவிட்டான். பரோட்டா கேட்ட அறியாத வயது சின்னப் பயலின் குடி அழிந்ததைப் பார்த்துப் பொறுக்க முடியாத அப்பா துயரைத் தாங்க முடியாமல் செத்துப்போனார்.
``என் பையன் அன்னைக்கு `அப்பா இவ்ளோ மார்க் எடுத்திருக்கேன்’னு வந்து நின்னான். என் அப்பா மாதிரியே நான் என்னை நினைத்துக்கொண்டு உனக்கு என்ன வேணும்னு கேட்டேன். `போதைய விட்டுருங்கப்பா’ன்னு சொன்னதும் கொஞ்சம் ஆடிப்போயிட்டேன் மக்கா. ஒரு வாழ்க்கையை முழுசா போதையோட பிடிக்குக் கொடுத்திட்டேன். இப்ப வாழணும்னு ஆசை வந்திருச்சு மக்கா. ஆனா உடம்பும் மனசும் கைவிட்டுருச்சு” எனக் குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான். விக்டர் மட்டுமன்று, சென்னையில் விளம்பரக் கம்பெனி நடத்தும் பார்த்தசாரதியும் இதே விஷயத்தைத்தான் அவனது வட்டார வழக்கில் சொன்னான். “யாராச்சும் கடவுள் வந்து என்னை இதிலிருந்து தூக்கி வெளியே போட மாட்டாங்களா” எனக் கதறியழுதான். நாளொன்றுக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிற திராணியுள்ளவன் கைகள் நடுங்க ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்குத் தெருத் தெருவாகக் கையேந்திக்கொண்டிருந்தான்.
``வெக்கத்த விட்டுச் சொல்றேங்க. இவன் துடிக்கிறதப் பாத்துப் பொறுக்க முடியாம, வேலை பாக்குற வீட்டுல கெஞ்சிக் கூத்தாடி இருநூறு ரூவா வாங்கிட்டுப் போயி ஒயின்ஷாப்ல பிராந்தி வாங்கி சேலைக்குள்ள மறைச்சு எடுத்துட்டு வந்து குடுப்பேன்” என எழுபது வயதுள்ள அந்தத் தாய் கண்ணீர் விட்டுச் சொன்ன போது அவன் தாயை இழுத்துப் பிடித்து போதையில் முத்தம் கொடுத்தான். மகாராணிபோல வாழ வேண்டிய அந்த ஏழைத் தாய் அவனைத் தள்ளி விட்டுவிட்டு சிரித்துக்கொண்டே, ``இந்தப் பாசம்தாங்க என் கண்ணை மறைச்சிருது. அவங்கப்பா சாகும்போது இவனுக்குப் பத்து வயசு. அவர் செத்த வீட்டுக்குள்ள வந்து இப்படித்தான் அழுதுகிட்டிருந்த எனக்கு முத்தம் கொடுத்துட்டு ஓடினான். சில நேரங்கள்ல மருந்தக் கலக்கி சோத்துல போட்டு இவனையும் கொன்னுட்டு நானும் செத்துரலாம்னுகூட தோணுச்சு” என்றார்.
விக்டரும் பார்த்தசாரதியும் என்னுடைய தலைமுறையின் பிரதிநிதிகள். எங்களுக்கு முன்பிருந்த தலைமுறையும் இப்படித்தான் இருந்தது. பெருஞ்சொத்துகள் இருந்த குடும்பத்தில் பிறந்த மூத்த மகனான என் மாமா இப்படித்தான் குடித்து அழிந்தார். இரண்டு கிட்னிகளும் பழுதாகி, கடைசியில் கோவை ரயில்நிலைய பிளாட்ஃபாரத்தில் செத்துக் கிடந்தார். ``எதைன்னாலும் தொடு மாப்பிள்ளை. போதைய மட்டும் தொட்டுராத” என ஒருசமயம் குடியினூடே அவர் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. என்னுடன் பள்ளியில் படித்த ராஜேஷ் பாண்டியனின் அப்பாவை தினமும் சாக்கடையிலிருந்து தூக்கிக்கொண்டு வருவார்கள். காலையில் வெள்ளை வெளேர் டெரிகாட்டன் உடைகள் அணிந்து கிளம்புகிறவர் இரவு இப்படித்தான் சாக்கடையில் தோய்த்து அவற்றைத் திரும்பக் கொண்டு வருவார். பள்ளியில் பையன்களின் கிண்டலைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்து நாடி நெஞ்சை முட்டுகிற மாதிரி அமர்ந்திருப்பான் ராஜேஷ். கடைசியாய் ஒருதடவை பார்த்துப் பேசிக் கொண்டிருந்தபோதுகூட அவன் அப்படித்தான் அமர்ந்திருந்தான். அவன் அப்பா பரிசளித்த தொட்டில் பழக்கத்தை இன்னமும் தூக்கிக் கடாச முடியவில்லை. அந்த அவமானத்தை ஆண்டுகள் கடந்தும் கடக்க முடியவில்லை அவனால்.
வயற்காட்டு வேலைக்கு வந்த அம்மா ஒருத்தர் தயங்கித் தயங்கி ஒருதடவை நூறு ரூபாய் கேட்டார். அதை அவமானகரமான சமிக்ஞைகளுடன் வாங்கிக்கொண்டு, ``பிச்சையெடுக்கிறோம்னு நெனைச்சிராத மகனே. எங்களுக்கும் பதினாறு குழி நிலமிருந்துச்சு. இவர் போதை வெறியில இருந்தப்ப இவரோட பங்காளிக எழுதி வாங்கி ஏமாத்திட்டாங்க” என்றார். அவரின் பையனைப் பார்த்திருக்கிறேன். அவனும்கூட ராஜேஷ் பாண்டியன் மாதிரியே நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். படிக்கவே செய்யாத அந்தப் பையனும் இப்போது காட்டு வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறான். விக்டரின், பார்த்தசாரதியின், ராஜேஷ் பாண்டியனின் அப்பாக்களின் தலைமுறைக்கு முந்தைய அவர்களுடைய தாத்தாவின் தலைமுறை இதிலிருந்து தப்பி விட்டது. `இந்தச் சனியன விட்டுத்தொலைக்க மாட்டீங்களாப்பா’ என அறிவுறுத்தும் ஆட்களைப் பார்த்தால் அனைவரும் எழுபது வயது கடந்த முதியவர்கள்.
இப்படி இந்தச் சுழலில் மாட்டிக்கொண்ட அத்தனை பேருமே ஒரே விஷயத்தையே மறுபடி மறுபடி சொல்கிறார்கள். ``ஏதாவதொரு ராட்சதக் கை இதிலிருந்து எங்களை வெளியே இழுத்து விடாதா” என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கையைப் பதம் பார்த்த போதை எங்களது அடுத்த தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம்கூட தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன். பஞ்சர் ஒட்டப் பயன்படும் திரவத்தை போதைக்காகத் தண்ணீரில் கலந்து குடித்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் குடிப்பார்கள், புகைப்பார்கள். குறைந்தபட்சம் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளாவது உண்டு.
ஆனால், எங்களுடைய அடுத்த தலைமுறை வித்துக்கள் இப்போது சர்வ சாதாரணமாகக் குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள், குத்துகிறார்கள், நுகர்கிறார்கள், சப்புகிறார்கள். விதம் விதமான போதைகள் இங்கே வரிசை கட்டுகின்றன. நாக்கின் அடியில் ஒட்டுகிற, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் விலையுள்ள விரலடக்க ஸ்டிக்கர்கள் சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. ஐயாயிரம் ரூபாய் விலையுள்ள நுகரும் பவுடர்களை இலவச ஹோம் டெலிவரி செய்கிற அளவிற்கு வலைப் பின்னல் வந்துவிட்டது. அறுவை சிகிச்சைகளின்போது மட்டுமே குத்த வேண்டிய ஊசி மருந்துகளை இங்கே சர்வசாதாரணமாகப் போய் வாங்கிக் கொண்டு வந்துவிட முடியும். சென்னையும் கோவையும் இந்த விஷயத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டியவர்களுக்கும் இந்த விஷயங்களெல்லாம் தெரிந்தே இருக்கின்றன என்பதுதான் இதிலுள்ள வேதனை. நுணுக்கமாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமெனில், போதையின் நிமித்தமாக காமம் உடலெங்கும் ஊராத தலைமுறையாக அவர்கள் மட்டுப்பட்டு வருகின்றனர்.
முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு போதை சம்பந்தமான ஆழ்ந்த குற்றவுணர்வு இருந்தது. அதை உட்கொள்ளும் போதுகூட குற்றவுணர்வோடுதான் அணுகுவார்கள். எங்களுக்கு அடுத்த தலைமுறை அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குப் போனதோடு மட்டுமல்லாமல், தேவையில்லாத சுமையெனக் கருதி, கடைசி வாய்ப்பாக இருக்கும் குற்றவுணர்வையும் தூக்கி எறிந்திருக்கிறது. பதினெட்டு வயதுப் பையன் ஒருத்தனை அவன் அப்பா அழைத்து வந்திருந்தார். ``இது என் வாழ்க்கை. இது எனக்குப் பிடித்திருக்கிறது. இதிலிருந்து நான் ஏன் வெளியே வர வேண்டும். எங்கப்பாவும்தான் டெய்லி பத்து தடவை காபி குடிக்கிறார். அதுமாதிரிதான் எனக்கிது” எனத் தெளிவாகப் பேசினான். எதைத் தொலைத்தாலும் மீட்டுவிடலாம். குற்றவுணர்வைத் தொலைத்து விட்டால் எந்த ராட்சதக் கை வந்தாலும் மீட்டெடுக்க முடியாது.
நாற்பது வயதில் நாடி தளர்ந்த பிறகுதான் விக்டர் உடைந்தழுதான். எங்களது அடுத்த தலைமுறைக்கு இப்படியே போனால் முப்பது வயதிலேயே நாடி தளர்ந்துவிடும். உடல் வலுவே இல்லாதவர்களாக ஒரு தலைமுறை போதையின் பிடியில் சிக்கி வளர்வதைக் கண்டும் காணாமல் கடந்து போகிறோமா?

அடுத்த தலைமுறையின் மீது ஒளிபாய்ச்சிப் பார்க்கிறபோது இது ஒரு சிறுகூட்டம்தான் என்பதையும் உணர முடிகிறது. எட்டுக் கோடி ஜனங்கள் இருக்கிற ஒரு கூட்டத்தில் சிறுகூட்டம் என்பதே லட்சங்களைத் தாண்டும். இன்னொரு பக்கம் இதே தலைமுறை நம்பிக்கையான சித்திரத்தையும் வரைந்து காட்டு கிறார்கள். அவர்கள்தாம் முன்னால் போய் நின்று அரசாங்க மதுக் கூடங்களை உடைக்கிறார்கள். அந்தப் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துப் பார்த்திருக்கிறேன். உடைத்தவர்களில் ஒருத்தர்கூட பயன்பாட்டிற்கென அதிலிருந்து ஒரு பாட்டிலைக்கூட எடுத்துப் போகவில்லை.
தைப்பூசத்திற்காக நடைப்பயணம் போகும் இளைஞர்கள் சிலரின் உடல்களைப் பார்த்தேன். முறுக்கேறிய உடலோடு வேக நடை போட்டவர்களை அழைத்து நிறுத்திக் கேட்டேன். ``போதும்ணா போதை. எங்க அப்பாக்கள் காலத்தில விதைச்சத இப்ப அறுவடை பண்ணிக் கிட்டிருக்கோம்” என்றான் ஓர் இளைஞன். இரண்டு தலைமுறைகளாகத் தொட்டுத் தொடர்ந்த பாவத்தை, மீண்டு வாழ நினைக்கும் அடுத்த தலைமுறைக்கும் கடத்திவிடக் கூடாது. பாவம் ஒரு பூரானைப் போல ஊர்ந்து மேய்ந்து விடும். அறிந்தும் தெரிந்தும் அறத்தினை உள்ளங் கைகளுக்குள் பொத்தி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது பொறுப்பான ராட்சதக் கை!
- அறம் பேசுவோம்!