Published:Updated:

சர்வைவா - 1

சர்வைவா - 1
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 1

டெக்னோ தொடர்அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

சர்வைவா - 1

க்காரக் காதலியின் அடுத்தடுத்த அபாயகரமான காய்நகர்த்தல்களைக் கணிக்கிற அல்காரிதங்கள்

சர்வைவா - 1

இன்னமும் உலகில் உருவாக்கப்படவில்லை. அதை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எந்தக் கொம்பனாலும் உருவாக்கிவிட முடியாது. எதிர்காலமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்! எவ்வளவு முயன்றாலும் முன் நோக்க முடியாது. அடுத்த ஐம்பதாண்டுகளில் என்ன நடக்கும் என்பதை இன்றே சொல்கிற ப்ரடிக்‌ஷனோ மீட்டர்கள் ஒன்று நம் கைகளில் இருக்குமானால், எலான் மஸ்க்கையும் மார்க் சக்கர்பெர்க்கையும் லாரிபேஜையும் ஒரே எத்தில் எத்திவிடலாம். ஆனால் அந்த எத்து அத்தனை எளிதில்லை.

எதிர்காலம் நம் ஆழ்மன எதிர்பார்ப்புகளால் கட்டமைக்கப்பட்டவை. எதிர்பார்ப்புகளின் ஆழத்தில் அச்சுறுத்துகிற நரகம் ஒன்று எப்போது`ம் காத்திருக்கிறது.

நரகம் மட்டுமன்று, இன்று அனுபவிக்கிற துன்பங்கள் மறைந்துவிடும் என்கிற சொர்க்கபுரிக்கான நுழைவுச்சீட்டும் இருக்கிறது. எங்குமே நிற்காத எதிர்கால சைக்கிளுக்கு பிரேக்குகள் கிடையாது. அது மாற்றங்களால் சுழல்வது!

பத்தாண்டுகளுக்கு முன்பு நாம் நினைத்துப்பார்த்திருப்போமா... கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் விளையாட்டாகத் தொடங்கிய இணையதளத்திற்கு உலகமே அடிமைப்பட்டுக் கிடக்கும் என்று, நம் குடும்பங்கள் பஞ்சாயத்துப்பண்ணுகிற இடமாக வாட்ஸ்அப் குரூப்புகள் மாறும் என நினைத்திருப்போமா? எல்லாத் தருணங்களிலும் குனிந்த தலை நிமிராத அடக்க ஒடுக்கமான மொபைலன்களாக மாறிவிட்டோம். யாருடைய உதவியும் இல்லாமல் பாஷை தெரியாத ஊரிலும்கூட கூகுளாண்டவர் உதவியோடு முகவரிகளைக் கண்டுபிடிக்கிறோம். அரைலட்ச ரூபாய் மொபைல் போனோடு எந்நேரமும் பவர் பேங்க்கையும் தூக்கிக்கொண்டு அலைகிறோம்.  ஒரு போன் காலில் வீட்டுக்கே பார்டர்கடை பரோட்டாவும் சால்னாவும் சுடச்சுட டோர் டெலிவரி ஆகிறது. டிவிக்குப் போட்டியாக யூடியூபும் நெட்ஃபிளிக்ஸும் வந்து நிற்கின்றன. ஒரே ஒரு புகைப்படத்தில், ஒரே ஒரு வீடியோவில் ஜூலிகளின்... ஷெரில்களின்...  ப்ரியா வாரியார்களின் வாழ்க்கைகள் மாறுகின்றன. ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் ஒருநாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்க உதவுகிற கருவியாக மாறியிருக்கின்றன. க்யூவெல்லாம் செத்துக்கொண்டிருக்கிறது. சுடுகாட்டில்கூட ஆன்லைன் புக்கிங் வந்துவிட்டது. தொலைந்துபோன காதலிகளைக்கூட சமூகவலைதளங்களில் அரைமணிநேரத்தில் கண்டுபிடிக்கலாம். பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணலாம், உடற்பயிற்சி கற்கலாம், தனித்திறமைகளை வெளிப்படுத்தலாம்...  கல்தோன்றி மண்தோன்றா காலத்து மொழிகளின் எழுத்துருக்கள் எல்லாம் அழிந்து, எமோஜிகளோடு தூங்கி எழுகிறோம்! வெறும் பதினைந்து ஆண்டுகளில் நம் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறியிருக்கிறது!

இப்படியெல்லாம் நடக்கும் என்று 2000மாவது ஆண்டில் நோக்கியாவுக்கும், மைக்ரோசாஃப்ட்டுக்கும் தெரிந்திருந்தால், அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருக்காது.

சர்வைவா - 1

நம் எதிர்காலக் கனவுகள் எப்போதும் மிகையாகத்தான் இருந்திருக்கின்றன. பறக்கும் கார்கள், மிதக்கும் நகரங்கள், லேசர் துப்பாக்கிகள், செக்ஸ் ரோபோக்கள்,   பறந்துவரும் விண்கற்கள், விண்வெளிப் பயணங்கள் என கலர்ஃபுல்லாகக் கட்டமைக்கப்பட்டவை நம் எதிர்காலப் புனைவுகள்! நூறாண்டுகளாக அப்படித்தான் அறிவியல்புனைகதைகள் எழுதப் படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன்பு என்ன கற்பனை செய்து கொண்டிருந்தோமோ அதையேதான் இப்போதும் செய்கிறோம். ரோபோட் காதலிகள், ஏலியன் வில்லன்கள்,  கால எந்திரக் கனவுகள், அதே கற்பனைகள். 

எதிர்காலம் எப்போதும் புனைவுகளைப் போல இருப்பதில்லை. ஜார்ஜ் ஆர்வெல்லும், ஐசக் அசிமோவும் கணித்தவற்றில் கோட்பாடுகளும் அரசியலும்தான் நிறையவே உண்மையாகி இருக்கின்றன. ஜார்ஜ் ஆர்வெல் `1984’ நாவலில் குறிப்பிட்டபடி இன்று நாம் அரசினால் அணு அணுவாக ஆதார்களோடு அதிநவீன முறையில் கண்காணிக்கப்படுகிறோம்.  ஐசக் அசிமோவ் கணித்தபடி கண்ணுக்குப் புலப்படாத எந்திரங்கள் ஞானம்பெறத் தொடங்கிவிட்டன! 

எதிர்காலம் நம்முடைய தேவைகளினால் உருவாகியிருக்கிறது. நாம்தான் வரிவரியாக எதிர்காலத்தைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறோம்! நம்முடைய இப்போதைய தேவை பறக்கும் கார்கள் இல்லை, பெட்ரோல் இல்லாமல் ஓடுகிற கார்கள்தான். அதை நோக்கித்தான் உலகம் ஓடுகிறது! நம்முடைய அவசர அவசியம் வேலை செய்கிற எந்திர வேலைக்காரர்கள் இல்லை, தானாகவே `ஸ்மார்ட்’டாக வேலை செய்கிற எந்திரங்கள்.

இப்படி எதிர்காலத்தைத் திருத்தி எழுதுகிற எந்த மாற்றமும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. அந்த மாற்றம் முதலில் மறுக்கப்படும், பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். இங்கே மாற்றங்களை யாருமே விரும்புவதில்லை!  எல்லா மாற்றங்களும் முதலில் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.  இதோ நமக்கு மிக அருகில் வரப்போகிற புதிய மாற்றங்களும்கூட அப்படித்தான் அச்சுறுத்துகின்றன.
கணினிகள் முதன்முறையாக நம் அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்தபோது அதை எதிர்த்து ஸ்ட்ரைக் செய்த உலகின் மூத்தகுடி நம் குடிதான்! இதோ இப்போதும் ஆட்டோமேஷன் என்றதும் சில கோடித் தொடைகள் நடுங்குகின்றன!

உலக வரலாற்றில் உருவான எல்லா மாற்றங்களும் யாருக்கும் காத்திருப்பதில்லை. அது யாருடைய வீழ்ச்சிக்காகவும் வருந்துவதில்லை. முதன்முதலாகக் கற்களால் வேட்டையாட முடியும் எனக் கற்றுக் கொண்டவனை எல்லோருமே கேலியாகப் பார்த்திருக்கலாம், அவனைச் சுற்றியுள்ள வர்களால் அவன் பைத்தியக்காரன் என வசைகளுக்கு ஆளாகியிருக்கலாம். ஆனால், அந்த மாற்றம் அவசியமாக இருந்தது. காலத்தின் கட்டாயம் அது. நாட்பட அவனுடைய புதிய முறை வேட்டையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள், மக்கள் அப்படித்தான்... தொடக்கத்தில் அஞ்சிப் பின்வாங்குவார்கள், பிறகு பயன்களை அறிந்துகொண்டு அவர்களே நெருங்குவார்கள். தங்களுடைய வாழ்வை எளிதாக்குகிற எதையுமே அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கணினியில் பணத்தை அனுப்பவும் பெறவும் அஞ்சிய கூட்டம்தான் இன்று மொபைலையே வங்கியாகப் பயன்படுத்துகிறது!

மாற்றம் துப்பாக்கியிலிருந்து கிளம்பிவிட்ட தோட்டாவைப்போன்றது... ஏற்றுக்கொள்ள மறுத்து நடுவில் எத்தனை பெரிய பலசாலி நின்றாலும் பாரபட்சம் பார்க்காமல் துளைத்துக்கொண்டுதான் செல்லும்!
நம்மைச் சுற்றி நடந்த சமீபத்திய மாற்றங்களில் ஒன்று `IOT’  என்கிற இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். (இணையமும் இணையம் சார்ந்தும் இயங்குகிற புதுத்திணை) இந்த IOT சொல்கிற செய்தி ஒன்றுதான்: இணையம் சாராத எதுவுமே இங்கே பிழைக்காது. `வலிமையானதே பிழைக்கும்’ என்கிற டார்வின் விதியின்படி பார்த்தால் இன்றைய தேதியில் மனிதகுலத்தின் புதிய வலிமை இணையம்தான்! இணையம்தான் இங்கே சர்வைவலுக்கான நம்பிக்கை.

இணையத்தை மறுக்கிற யாருமே மாற்றத்தின் வலுவான பாதங்களில் நசுங்கி மடியவேண்டியதுதான்! அதை உணர்ந்துதான் கடலைமிட்டாய் வியாபாரம்கூடக் கணினிமயமாகிறது. இது வியாபாரங்களுக்கு மட்டுமன்று, இணையமயமாகாத மனிதர்களும் கூட இங்கே தப்பிப்பிழைக்க முடியாது!

நமக்கெல்லாம் எதிர்காலம் குறித்த ஆசைகளைவிட அச்சங்களே ஏராளமாய் இருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசாகிவிட்டது. நினைத்துப்பார்க்கவே முடியாத தண்ணீர்ப் பஞ்சம் நெருங்கிவிட்டது. சுவாசிக்கிற காற்றைக்கூடக் குமிழிகளில் அடைத்து, குறைந்தவிலைக்கு விற்கப்போகிறார்கள்.வடகொரியாவிலும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உலகையே அழிக்கிற அணுகுண்டுகளின் பொத்தான்கள் அழுத்துபவனின் ஆணவத்திற்கென ஆவலோடு காத்திருக்கின்றன. மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. உணவுப்பஞ்சம் அச்சுறுத்துகிறது. விளைநிலங்கள் விவசாயத்திற்கு விடைகொடுக்கத் தொடங்கிவிட்டன. நகரமயமாக்கத்தில் எல்லாமே அழியப்போகின்றன. உணவு நஞ்சாகிவிட்டது. வாதைகள் நம்மை நெருங்கிவிட்டன... The end is here... the end is near...  என்று உலக அழிவைக் கணிக்கிற Doomsday நாஸ்டர்டாம்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.

அழியும்... நிச்சயமாக எல்லாம் அழியும்! உலகில் தோன்றுகிற எல்லாமே அழியக்கூடியவைதாம். அதற்கு உலகம்கூட விதிவிலக்கன்று. ஆனால், மனிதன் தப்பிப்பிழைப்பதில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற உன்னத உயிர். அவன் இந்த சவால்களையும் எதிர்கொள்வான். பத்தாயிரம் ஆண்டுக்கால மனிதகுல சரித்திரம் தருகிற நம்பிக்கை அது.

தொழில்நுட்ப வளர்ச்சிதான் நம் எதிர்காலத்திற்கான நம்பிக்கை. எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனக் காத்திருக்கிறது தொழில்நுட்பங்களின் படையொன்று. நம்மிடம் தொழில்நுட்பம் இருக்கிறது. அதுதான் நம் அத்தனை சிக்கல்களுக்குமான தீர்வு என்கிறார்கள் எதிர்காலத்தின் ஆர்ட் டைரக்டர்கள்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை வைத்துதான் சொல்கிறார்கள்...  நுட்பமான உபாயங்களுடன் தேவதூதர்கள் நம்மைக் காக்க வருகிறார்கள்... கூடவே ஆபத்துகளும் வருகின்றன... தப்பிப் பிழைப்போமா?
பெரியோர்களே தாய்மார்களே, மூர்-இன் சொர்க்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது...

- காலம் கடப்போம்