
மெனு கார்டுவெ.நீலகண்டன், படம்: பா.காளிமுத்து
பரோட்டா, குடல் வறுவல், தலைக்கறி, எண்ணெய் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ், பெப்பர் சிக்கன், சிக்கன்

லெக் பீஸ், காடை ரோஸ்ட், கரண்டி ஆம்லெட், சிக்கன் பிரியாணி, சோறு, மீன் வறுவல், நண்டு மசாலா, ரத்தப் பொரியல், சிக்கன் பிரட்டல், மட்டன் சிக்கன் மீன் குழம்புகள், ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், இனிப்பு இவை அனைத்தையும் ஒரு தலைவாழை இலையில் நிரப்பித் தந்தால் எப்படி இருக்கும்? “போதும் பாஸ், படிச்சதே சாப்பிட்டமாதிரி இருக்கு” என்கிறீர்களா? நிஜம்தான்!
‘மதுரை ஸ்பெஷல் கறி விருந்து’ என்ற பெயரில் 25 வகை உணவுகளை இலையில் பரப்பிப் பரவசப்படுத்துகிறார்கள் சென்னை, பெரும்பாக்கம் - மேடவாக்கம் நெடுஞ்சாலை, கைலாஷ் நகரில் இருக்கும் ஏ.பி. ஃபுட் பேரடைஸ் உணவகத்தில்.
செயற்கை நெடியில்லாத மதுரை மசாலா மணமே வயிற்றையும் மனதையும் நிறைத்துவிடும். மிளகாய், மல்லியோடு, சீரகம், சோம்பு, மஞ்சள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், பட்டை என சகலத்தையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, குறிப்பிட்ட பதத்தில் காயவைத்து அரைத்தால் மதுரை மசாலா ரெடி! ஏ.பி. ஃபுட் பேரடைஸுக்கு மதுரையிலிருந்து மசாலா வருவதுதான் இதன் ‘ருசிமூலம்.’
“இன்னைக்கும் அம்மாதான் மசாலா அரைச்சு அனுப்புவாங்க. இதுக்குன்னே , மதுரையில எங்க வீட்ல ஏழு பேரை வேலைக்கு வெச்சிருக்கோம். எந்தப் பதார்த்தத்துக்கு என்ன அளவுல போடணும்னு ஆலோசனை கொடுக்கிறதும் அம்மாதான்...” என்கிறார் விமல். விமலும், வினோத்தும் சகோதரர்கள். இருவருமே பொறியாளர்கள். சாலையோரக் கடையாகத் தொடங்கப்பட்ட ஏ.பி.பேரடைஸ், நான்கே ஆண்டுகளில் இந்த உயரத்தை எட்டியிருக்கிறது என்றால் மணமணக்கும் மதுரை சமையல்தான் காரணம்.

இரண்டு பேருக்கான மதுரை ஸ்பெஷல் கறி விருந்து...
“இந்தப் பகுதியிலதான் நானும் தம்பியும் வேலை செஞ்சுக்கிட்டிருந்தோம். வழக்கமா ஒரு ரோட்டுக்கடையில சாப்பிடுவோம். ஒருநாள், சாலை விரிவாக்கத்துக்காக அந்தக் கடையை இடிச்சுட்டாங்க, அங்கே வேலை செஞ்சவங்க வேலை இல்லாம நின்னாங்க. இவங்களை வெச்சு பகுதிநேரமா ஒரு உணவகம் ஆரம்பிக்கலாமேன்னு அனகாபுத்தூர்ல ஆரம்பிச்சோம். தொடக்கத்துல பரோட்டாவும், ஃபாஸ்ட்புட் வகைகளும்தான்.
பரோட்டா எல்லா இடத்திலேயும் கிடைக்குதுதான். ஆனா, மதுரை பரோட்டாவுக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கும். பூ மாதிரி மென்மையா இருக்கும். வாழைப்பழம், முட்டைன்னு மாவுலயே சில சூட்சுமங்களைக் கலந்திருவாங்க. பெப்பர் சிக்கன் சால்னா சைடு-டிஷ்ஷா கொடுத்தோம். வடியல்னு மதுரை ஸ்பெஷல் டிஷ் ஒண்ணு இருக்கு. முட்டையை உடைச்சு ஊத்தி நாலஞ்சு வெங்காயச் சீவலைப் போட்டு சிக்கன் சால்னாவை ஊத்தி முக்கால் வேக்காட்டுல பெரட்டி எடுக்கிறது. அதுக்குன்னே நிறையபேர் எங்க உணவகத்துக்கு வருவாங்க. அதேமாதிரி, முட்டை செட், லாப்பா, கறிதோசைன்னு மதுரை ஐட்டங்களா கொடுத்தோம்.
ஆறு மாசத்துல இன்னொரு உணவகம் ஆரம்பிக்கிற அளவுக்கு நல்ல வரவேற்பு. அப்புறம் என்ன, ஒரு நல்ல நாளில் சில நண்பர்களின் பொருளுதவியோட இந்த உணவகத்தை ஆரம்பிச்சோம். அந்த நேரத்துலதான் எனக்குக் கல்யாணமாச்சு. எங்கூர்ல இருந்து சமையல்காரர்களைக் கொண்டுவந்து சமைச்சோம். சாப்பிட்ட எல்லோருமே கல்யாண விருந்தை சிலாகிச்சுப் பேசினாங்க. அப்போதான் மண்டைக்குள்ள பல்பு எரிஞ்சுச்சு. அந்தச் சமையல்காரர்களையே வேலைக்குச் சேர்த்துக்கிட்டோம். என் திருமணத்துல என்னென்ன ஐட்டமெல்லாம் செஞ்சமோ, என்னென்னெல்லாம் செய்ய நினைச்சமோ அதையும் சேர்த்துத்தான் இந்த மதுரை ஸ்பெஷல் கறி விருந்தை வடிவமைச்சோம்.
நெருக்கமான நண்பர்கள் 40 பேரை மட்டும் கூப்பிட்டு முதல்ல சாப்பிட வெச்சோம். ரொம்பத் திருப்தியா போனாங்க. சின்னச்சின்னதா சில ஆலோசனைகளும் சொன்னாங்க. அதையெல்லாம் சேர்த்து இப்போ ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்துட்டோம்” என்கிறார் விமல்.
சிக்கன், மட்டன், முட்டை, காடை, மீன், நண்டு வகையறாக்களில் 12 தொட்டுக்கைகள் (சைடுடிஷ்). மட்டன் சுக்கா, லெக்பீஸ், நண்டு, மீன் வறுவல், ஸ்வீட் தவிர மற்ற அனைத்துமே அன்லிமிடெட். மட்டன், சிக்கன், மீன், மட்டன் கழுத்துக்கறி ரசம் என நான்கு வகைக் குழம்புகள். நல்லி எலும்பு, கொழுப்பு, ஈரல் எனக் குழம்புகளே விருந்தாக இருக்கின்றன.
சைடு-டிஷ்ஷில் மீன் வறுவல் ஆசம். உறுத்தாத காரம். கட்லா, ரோகு மீன்களைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். பல இடங்களில் மட்டன் சுக்காவில், மட்டனைவிட வெங்காயம்தான் அதிகமிருக்கும். இங்கே பூண்டு, முந்திரிப்பருப்பு போட்டு செக்கு எண்ணெய் வாசனையோடு போன்லெஸ் சுக்காவாகத் தளும்பத் தளும்ப அள்ளி வைக்கிறார்கள்.
ஒரே பிரச்னை, இடநெருக்கடி. அதிகபட்சம் 20 பேர்தான் உட்கார்ந்து சாப்பிட முடியும் என்பது இந்த உணவகத்தின் மைனஸ்.
உணவு வணிகமாக மட்டு மல்லாமல் உணர்வுபூர்வமாகவும் சில நல்ல விஷயங்களைச் செய்கிறார்கள். ராணுவத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் வாங்குவதில்லை. அவர்களது குடும்பத்தினர்களுக்கு 25 சதவிகிதம் விலை குறைவு. அதேபோல, 5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பாதி விலைதான்.
ஓகே... ஓகே... ‘மதுரை ஸ்பெஷல் கறிவிருந்து’ என்ன விலை என்றுதானே கேட்கிறீர்கள்... ஜஸ்ட் 499 ரூபாய்!
- பரிமாறுவோம்
செரிமானம் சரியாக..!
‘வெளுத்துக்கட்டேய்’ என்று இப்படி ஒரு வெயிட்டான சாப்பாட்டைச் சாப்பிடும்போது, சிலருக்குச் செரிமானமாகாது. மறுநாள் வரைக்கும் வயிறு மந்தமாக இருக்கும். அவர்களுக்காக...
* சாப்பிட்டு முடித்ததும் சீரகத்தைத் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம்.
* கொஞ்சம் ஓமத்தைக் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
* சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வது ரொம்பத் தப்பு பாஸ்! சாப்பிட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும்.
* சிலர் செரிமானத்துக்காக சாப்பிட்டவுடன் நடப்பார்கள். அதுவும் நல்லதல்ல. குறைந்தது 3 மணி நேரம் கழித்தே நடக்க வேண்டும்.