மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

விகடன் பிரஸ்மீட்: “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

விகடன் பத்திரிகையாளர்ளுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. முதல் வி.ஐ.பி... விஜய் சேதுபதி

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

சார்லஸ்:

``விகடன் விருதுடன் தொடங்கியிருக்கிறது 2018. இந்த வருடத் திட்டம் என்ன?’’


``திட்டம்னு எதுவும் இல்லை. இன்னைக்குத் தேதிக்கு மனசுக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்படுது. எடுக்கலாம்னு ஆசைப்படறேன். ஆனா ஓய்வெடுக்க முடியாது. காரணம், கமிட்மென்ட்ஸ்.  காலையில் எழுந்தா வேலை ரெடியா இருக்கு. அதனால இந்தக் கேள்விக்குத் ‘தெரியலை’ன்னே பதில் சொல்ல வேண்டியிருக்கு.’’

சுஜிதா சென்

``சிக்ஸ் பேக் வைக்கணும்னு ஆசைப் பட்டதுண்டா?’’


``கனவுல சிக்ஸ் பேக்லாம்கூட வெச்சிருக்கேன். ஆனா, என்ன பண்றது, சாப்பாட்டை கன்ட்ரோல் பண்ண முடியலை. சமயத்துல ரசிகர்கள் பிரியாணி, பீட்சான்னு வாங்கிட்டு வந்திடுறாங்க. பீட்சா வந்தா மட்டும், `நம்மூர்ச் சாப் பாட்டைக் கொண்டு வாங்கப்பா’ன்னு சொல்வேன். எனக்குப் பழையசோறு, பச்ச மிளகாய், தேங்காய்த் துவையல்னா ரொம்பப் பிடிக்கும். பழைய சோறு சாப்பிட்டா தொப்பை வந்திடும்னு திட்டுறாங்க. ஆனா அந்த நீச்சத் தண்ணியில இருக்கற சுகம் இருக்கே, அது தனி!’’

கலைச்செல்வன்

‘‘நல்ல என்டெர்ட்டெய்னரா இருக்கீங்க. ஆனா படங்கள்ல சமூக அரசியலைப் பேச யோசிக்கிற மாதிரி தெரியுதே?’’


``சினிமாங்கிறது முதல்ல மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி இருக்கணும். அதேபோல, பெரும் தொகை முதலீடா போடப்படுற ஒரு தொழில் இது. போட்ட பணம் திரும்ப வரணும். இது இரண்டையும்தான் முதல்ல நான் கவனிக்கிறேன். பிறகுதான் எனக்குன்னு இருக்கிற எத்திக்ஸ். என் படங்கள்ல தேவையில்லாத கவர்ச்சியை நான் விரும்ப மாட்டேன். ‘கருப்பன்’ படத்துல முதலிரவுக் காட்சி. ‘இன்னசன்ட்டான ரெண்டு பேர் முதன்முதலா சந்திக்கிற அந்தக் காட்சியில எதுக்கு இடுப்பு தெரியுற சீன்’னு இயக்குநரிடம் கேட்டேன். இதுவும் ஒரு சமூக அக்கறையே. கணவனை இழந்த பெண்ணைப் பொட்டு வைக்க வலியுறுத்தின காட்சிகள் என் படத்துல பார்த்திருப்பீங்க. இதெல்லாமே அரசியல்தான். சின்னச் சின்னதா தெரிஞ்சாலும் பேசிட்டேதான் வந்திட்டிருக்கேன்.

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

உ.சுதர்சன் காந்தி

``நீங்க ஒரு ஃபேன்டசி கதை வச்சிருக்கீங்க; அதை டைரக்ட் பண்ணப்போறீங்கன்னு ஒரு தகவல், உண்மையா?’’


``என் பிள்ளைங்களுக்கு நிறைய ஃபேன்டஸி கதைகள் சொல்லிருக்கேன். ராத்திரி தூங்காம சேட்டை செஞ்சிட்டிருந்தா, தூங்க வைக்கறதுக்காகச் சொல்லுவேன். வேற ஒரு உலகத்துக்கு அவங்களைக் கூட்டிட்டுப் போற மாதிரியான கதைகள் அவை. ஒருமுறை தர்மம் பத்தி ஒரு கதை சொன்னதா ஞாபகம். ஒரு ராஜா போர்ல ஜெயிச்சுட்டு காட்டு வழியா நாடு திரும்பிட்டிருக்கார். கொலைப்பசி. வழியில் அழகா ஒரு மான் தென்படுது. வில் எடுக்கிறார். அந்தப் பக்கமா ஒரு புலி. ‘ராஜா என் வீட்டுல என் குட்டிக எனக்காகக் காத்திருக்கு’னு மான் சொல்லுது. யோசிச்ச ராஜா புலி மேல அம்பை விட்டுட்டார். கீழே சாஞ்ச புலி ராஜாவிடம் கேட்டது, `எனக்கு மட்டும் குடும்பம் குட்டிகள் இல்லையா?’னு. இங்கே எது தர்மம்னு கதை முடியும். ‘புலிதானே மனுஷனை அடிச்சுச் சாப்பிடும்? ராஜா எப்படிப் புலியைச் சாப்பிடுவார்’னெல்லாம் கேக்கக் கூடாது. அந்தக் கேள்வியைக் குழந்தைகள் கேக்கறாங்களானு பார்க்கணும்.’’

நா.சிபிச்சக்கரவர்த்தி

``தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து உங்க கருத்து என்ன?’’

``குழந்தைகளுக்கு ஒரு பிரச்னைன்னா அப்பா அம்மாகிட்ட போய்ச் சொல் வாங்க. ‘அப்பா பார்த்துக்குவார்’னு நம்புவாங்க. நாட்டுலயும் பிரச்னை நிறைய இருக்கும். கேக்கறதுக்கு ஆள் இருக்கணும். தமிழ்நாட்டு மக்கள் இப்ப அநாதைகளா விடப் பட்டிருக்கறாங்க. பிரச்னைகளைப் போய்ச் சொல்லணும்னா கேக்க நாதி இல்லை. நல்ல தலைவன் இல்லை. என்ன ஒரு லாபம்னா, வேற வழி இல்லாம மக்களே போராடத் தெருவுக்கு வந்திருக்காங்க. தூத்துக் குடியில ஒரு தொழிற்சாலையை எதிர்த்துப் பெண்கள்லாம் திரண்டிருக்காங்க. விழிப்பு உணர்வு வந்து மக்கள் வலுவாகி ஒண்ணு சேர்ந்திருக்காங்க. இது ஒரு வகையில் நல்லதுதான்.

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

ஆர்.சரண்’’

`` நீங்க ரசிகர்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறதைப் பார்த்தா எம்.ஜி.ஆர் ஞாபகத்துக்கு வர்றார். ரசிகனிடம் இப்படி அன்பு பாராட்டுவது உங்கள் இயல்பா... அல்லது எம்.ஜி.ஆர் பாதிப்பா?’’


‘`நேசிக்கிற மாதிரி சினிமாவில் நடிக்கலாம். இயல்பு வாழ்க்கையில் அது முடியாது. நான் யாரையும் இழுத்துப் பிடிச்சு முத்தம் தர்றதில்லை. என்னை நேசிக்கிறவங்க கேக்குறாங்க. கேக்குறவங்களுக்குக் கொடுக் கிறேன். இப்படிக்கூடக் கேள்வி வரும்னு தெரிஞ்சுதான் இப்பெல்லாம் முத்தம் கொடுக்கிறப்ப போட்டோ எடுக்க அனுமதிக்கிற தில்லை. ‘முத்தம்தானே வேணும்; தனியே வான்னு போட்டோ எடுத்து முடிச்ச பிறகு தந்துட்டுப் போயிடுறேன்.’’

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

சார்லஸ்

``நடிகர்கள் அரசியலுக்கு வரும் சீஸன் இது. நடிகர்களின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்? யாரோட அரசியல் வருகை உங்களை அதிகம் ஈர்த்திருக்கு?’’

 
``முதல்ல, ரெண்டாவது கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுனு சொல்லிடுறேன். முதல்ல கருத்து சொல்லுங்களேன்னு கேப்பீங்க, அப்புறம்... ஆதரவு யாருக்குனு கேப்பீங்க. நல்லா வருவீங்க பாஸ். ஆனா நான் வர மாட்டேன், நீங்க இழுக்கிற இழுப்புக்கு! நடிகர்கள் அரசியலுக்கு வர்றதை பூதாகரமா பேசறது மீடியாதான். ஏன் அரசியலுக்கு வர்றீங்கன்னு ஒரு நடிகனை யாரும் கேள்வி கேட்க முடியாது. வர்ற நடிகர்கிட்ட ‘என்ன கொள்கை வச்சிருக்கீங்க’ன்னு கேளுங்க. ஏன் வர்றீங்கன்னு கேக்கறது தப்பு ப்ரோ!’’

விகடன் பிரஸ்மீட்:  “பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை!” - விஜய் சேதுபதி

தார்மிக் லீ

``ஃபாலோ பண்ணணும்னு நினைச்சு, இதுவரைக்கும் முடியாததுன்னா எது?”


``வாயை அடக்கணும்னு நினைக்கிறேன். முடியலை. மனசை அடக்கணும்னு நினைச்சு முடியாமத் தோத்திருக்கேன். தொழில் சார்ந்து, வாழ்க்கை சார்ந்து நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லாமே சாத்தியமாகுறது இல்லை.’’

- விஜய் சேதுபதி வருவார்...