மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே!”

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே!”
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே!”

தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி

“அப்பாவுக்கு ஒரு காலால மட்டுந்தாண்ணே நடக்க முடியும். முசிறில  சின்ன ஜவுளிக்கடையில வேலை செய்றாரு. கடுமையான வியாதியிலிருந்து இப்போதான் அம்மா மீண்டு வந்துட்டிருக்காங்க. அவங்களால சரியா நடமாட முடியாது. எனக்கு ஒரு தங்கச்சி”  என, தன் குடும்ப நிலவரத்தை நவீன் சொல்லும் போதே அவரை மீறிக் கண்கள் கலங்குகின்றன. “எப்டியாவது நல்லா படிச்சு ஒரு பெரிய கவர்மென்ட் ஆபீசரா ஆகணும்னு வீட்ல ஆசைப்பட்டாங்க. அப்டி ஆவேனான்னு தெரியாது. ஆனா அவங்களைப் பெருமைப்படுத்துற மாதிரி நடந்துட்டு வரேன்னு நினைக்கிறேன்” என்று புன்னகைத்தபோதுதான் நவீன் இயல்புநிலைக்குத் திரும்பினார். 

 சிறந்த சமூக சேவைக்கான இந்திய அரசின் ‘தேசிய இளைஞர் விருது’ பெற்றிருக்கிறார் நவீன். ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களின் தெருக்களில், சாலையோரங்களில் ஆதரவற்றுச் சுற்றியலைந்த 193 பேருக்கு மறுவாழ்வு அளித்து அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் 24 வயது இளைஞர் நவீன்.

 “பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்ண்ணே. நம்மோட டெய்லி லைஃப்ல நாமளும் யார்கிட்டயோ எதுக்காகவோ பிச்சை எடுத்துட்டுத்தானே இருக்கோம். என்ன அவங்க நேரடியாக கேக்குறாங்க. நாம மறைமுகமா கேக்குறோம் அதுதானே வித்தியாசம்’’ என மிகப்பெரிய தத்துவத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டு சேவைப் பணியைத் தொடங்கிய கதையைச் சொல்கிறார் நவீன்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - "பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே!”

``கேட் எக்ஸாமுக்குப் படிக்கிறதுக்காக நண்பர்களோடு சேலம் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல சின்னதா ரூம் எடுத்திருந்தோம். படிச்சுட்டிருக்கிறப்போ வீட்டு ஞாபகம் வந்து மனசை  ரொம்ப ஒருமாதிரி பண்ணும். புத்தகத்தை மூடி வெச்சுட்டு வெளிய பஸ் ஸ்டாண்டு பக்கம் சும்மா நடந்துட்டிருப்பேன். அப்போதான் நம்மளைவிட எவ்ளோ மோசமான நிலைமையில் மனுஷங்க இருக்காங்கன்னு தெரிஞ்சது. ஒரு பாட்டிக்கு ரொம்பப் பசி போல இருக்கு. குப்பைத்தொட்டில இருக்கிற ஒரு சப்பாத்தியைத் தூசி தட்டிட்டிருந்தாங்க. என் கையில பத்து ரூபாய்தான் இருந்தது. அவங்களைக் கூட்டிட்டுப்போய்,  ரெண்டுபேரும்  இட்லி வாங்கி சாப்பிட்டோம். அதுக்கு அப்புறம் என் நண்பர்கள்கிட்ட காசு கலெக்ட் பண்ணி அங்க சுத்திக்கிட்டிருந்த ஒவ்வொருத்தருக்கும் வாங்கித் தர ஆரம்பிச்சேன்’’ என அறிமுகம் சொல்கிறார் நவீன்.

தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் நவீன் தனியொருவனாக ஆரம்பித்துப் பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருக்கிறார். கோயில்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் எனச் சுற்றி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன், அவர்களின் உற்றார் உறவினர்களின் முகவரியைக் கேட்டு வாங்கி, பலரை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். வயிற்றுப்பசிக்குக் கையேந்திக்கொண்டிருந்த பலர் நவீனின் உதவியால் தற்போது செக்யூரிட்டியாக ஈரோடு மாவட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“முதல்ல நம்மகிட்ட பேசமாட்டாங்க. ஆனா தொடர்ந்து பேசணும். கொஞ்ச நேரத்துல தன் கதையைச் சொல்லி அழ ஆரம்பிச்சுடுவாங்க. நண்பர்களோடு சேர்ந்து அவங்களுக்கு முடிவெட்டி, குளிக்க வைப்போம். டிரஸ்ஸிங் பண்ணுவோம். பிள்ளைங்க பக்கத்து ஊர்லதான் இருக்காங்கன்னா பெத்தவங்க எந்த நிலைமையில இருக்காங்கன்னு பிள்ளைங்க பாக்கணும்னு அப்டியே அவங்களைக் கூட்டிட்டு வந்து நிறுத்துவோம். அதுதாண்ணே பெற்றோர்களை அநாதைகளா விட்டுட்டுப் போற பிள்ளைங்களுக்குக் கொடுக்கிற தண்டனை.

பிச்சைக்காரர்கள் என்ற சமூகமே ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் என் கனவு. என்னைப்போல இளைஞர்களும் அவங்க அவங்க மாவட்டத்துல இதைச் செய்யணும்ண்ணே. அதுக்கு முதல்படியா தர்மம்ங்கிறது பணம் கொடுத்து உதவுறது மட்டுமில்லைன்னு நாம புரிஞ்சிக்கணும்” என்கிறார் தீர்க்கமாக.

கனவு நனவாகட்டும்!