
எங்கே தொலையக் கொடுத்தோம்?சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்
அதிகாலை நான்கு மணிக்கு அந்த மீன் சந்தைக்கு, நாள்தவறாமல் கடலுக்கு மேலே துள்ளி வரும் சிறு மத்தி மீன் மாதிரி வந்துவிடுவார் அந்த முதியவர். வெள்ளை வேட்டி, சட்டை அந்த நேரத்திலும் மொடமொடப்பாக இருக்கும். சென்னையில் உள்ள நடுத்தர உணவகம் ஒன்றின் உரிமையாளர் அவர். வாங்குவது என்னவோ ஐந்தாறு கிலோவிற்குள்தான் இருக்கும். ஒருதடவை அவரிடம், “இந்த அஞ்சாறு கிலோ வாங்குறதுக்கு ரெண்டு லிட்டர் பெட்ரோலப் போட்டு இந்தக் குளிரிலும் வர்றீங்க. வெளீல யார்ட்டயாவது ஆர்டர் கொடுத்தா அவங்களே வந்து ஹோட்டல்ல தந்துடுவாங்களே” என்றேன். இடமும் வலமுமாகத் தலையை அழுத்தமாக ஆட்டிவிட்டு, “எங்க ஹோட்டல நம்பி சாப்பிட வர்றாங்க. பொருள் தரமா இருக்கும்னு நம்புறாங்க. தரத்திலே ஒரு துளிகூடக் குறைஞ்சிரக்கூடாது தம்பி. நானே நேர்ல வந்து வாங்கினாத்தான் ராத்திரில நிம்மதியாத் தூக்கம் வரும்” என்றார்.
வஞ்சிர மீன் சில நேரங்களில் ஒரு கிலோ வாங்கும் விலையே ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரும். பல பெரிய ஹோட்டல்களிலேயே விலை கூடுகிற சமயங்களில் வஞ்சிர மீன் என்று சொல்லி அரைக் கோலா மீனைப் போடுவார்கள். ரங்கூன் வஞ்சிரம் என்றுகூட அதைச் சொல்வார்கள். மூக்கு நீண்டு வால் குட்டையானால் ரங்கூன். மூக்கு குறுகி வால் நெட்டையானால் வஞ்சிரம். கறுத்தவன் ரங்கூன். கொஞ்சம் வெளுத்தவன் வஞ்சிரம். மனிதர்களைப் போலத்தான் எல்லாவற்றையும் வகை பிரித்துவிட முடியும். வஞ்சிரம் என்று சொல்லித் தட்டில் வைத்தால் கண்டுபிடிக்கவே முடியாது. வறுத்த பிறகு கறுப்பேது, வெளுப்பேது? அதுவும் சாப்பிட உகந்ததுதான்.

ஆனாலும், ஒருபோதும் அவர் அதைச் செய்ததில்லை. இத்தனைக்கும் மீன் உணவு விலையை எப்போதும் ஒரே மாதிரிதான் அவருடைய உணவகத்தில் வைத்திருப்பார். விலை கூடுகிறதே என்பதற்காகக் கூட்டியதில்லை. ஒருநாள்கூட அவர் சிநேகிதமாக அரைக் கோலா பக்கமாகத் திரும்பிச் சிரித்ததில்லை. ``எங்கிட்ட சாப்பிட வர்றவங்க வஞ்சிரம்னு நெனைச்சுத்தான் ஆர்டர் பண்றாங்க. தப்பு பண்ணக்கூடாது. அடுத்தவங்களை ஏமாத்தக்கூடாது. யாராவது ஒருத்தர் கண்டுபிடிச்சிட்டாகூட இதுநாள் வரை சேர்த்து வெச்ச பெருமையெல்லாம் மண்ணாயிடும். மத்தவங்களை விடுங்க... இலையில வைக்கும்போது நமக்குள்ள இருக்கிற குறுகுறுப்பு நம்மயே உறுத்துமில்லையா? பயந்து பயந்து வியாபாரத்தில நடமாட முடியாதில்ல?” என்றார் எளிமையாக.
அவர் மட்டுமன்று, தரத்தை மட்டுமே நம்பியவர்கள் இங்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். தரம் என்பதைப் பொருளில் மட்டும் பொருத்திப் பார்க்காமல் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க விழைகிறேன் இங்கே. நெடுஞ்சாலைப் பயணமொன்றில் போர்டு கூட இல்லாத ஒரு கடையில் நல்ல சிக்கன் குழம்பு கிடைத்தது. தரத்தில் அடித்துக்கொள்ளவே முடியாது அக்குழம்பை. ``ஏண்ணே, போர்டு வைக்கலாம்ல... நிறைய பேர் வருவாங்கல்ல?” என்று கேட்டபோது அவர் அலட்டிக்கொள்ளாமல், ``போர்டு மாட்டுற செலவு வெட்டியா எதுக்கு தம்பி? தரத்தில கவனம் வச்சோம்னா அதெல்லாம் தேடி வருவாங்க. ஏன், நீங்க நாலு பேர்ட்ட போய்ச் சொல்ல மாட்டீங்களா?” என்றார். வாழ்விலும் தரத்தில் கூடி நிற்பதுதான் கம்பீரமோ என்றுகூட எனக்கு உடனடியாகத் தோன்றியது.
உணவகம் என்றில்லை, இப்போது எல்லாத் துறைகளிலுமே இந்தத் தரத்துக்காக உயிரை விடும் போக்கு மெள்ளக் குறைந்தபடியே இருக்கிறது. மேலே சொன்ன ஆள்கள் எல்லாம் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவார்களோ என்கிற அச்சம்கூட எழுகிறது. தும்பிலி என்கிற மீனை, கூசாமல் ‘கிழங்கான்’ என்று சொல்லி விற்கிறார்கள். மீனின் செவுளுக்குள் வெற்றிலை எச்சிலைத் துப்பி ‘ஃப்ரெஷ் பிளட் இருக்கு, பாருங்க’ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். மீனில் மட்டுமா கலப்படம்? சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரே இருக்கும் தெருக்களில் கிடைக்காத பொருள்களே இல்லை. சோப்பில் தொடங்கி மருந்து மாத்திரை வரை அத்தனை பொருள்களையும் மொத்த விலையில் அங்கே வாங்க முடியும். உள்ளே போய் எனக்குப் பத்தாயிரம் சோப்புக் கட்டிகள் வேண்டும் என்று கேட்டால் உடனடியாக, `அசியா, அட்டா?’ என்பார்கள். வேறொன்றுமில்லை. அசி என்றால் தரமானது; அட்டு என்றால் டூப்ளிகேட். சோப்பை விடுங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலைவலித் தைலங்கள் தொடங்கி மாத்திரை வரை அட்டுகள் மனசாட்சியே இல்லாமல் கலந்துவிட்டன.
இவை பெரும்பாலும் மக்கள் ஒரே தடவை மட்டும் வந்து கூடி விட்டுச் செல்லும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படுகின்றன. திரும்பிப்போய் யாரும் புகார் அளிக்கப்போவதில்லை என்கிற தைரியம்தான் இந்தத் தொழில்களுக்குப் பின்னால் இருக்கிற முதலீடு. சூப்பர் மார்க்கெட்டுகளில்கூட இந்த அட்டுகள் திருடித் தின்று கொழுத்த பெருச்சாளிகள்போல முகத்தை நுழைத்து எட்டிப்பார்க்கின்றன. உடனடியாகப் பணம் திரட்டுவதற்காக எதையும் செய்யலாம், யாரையும் ஏமாற்றலாம் என்கிற மனநிலை மெள்ள மேலெழுந்து வருவதைத்தான் இவை காட்டுகின்றன.
தமிழகத்தை ஒரு கோடு போட்டுப் பிரித்தால், அசலுக்கு நிகராக அட்டுகளும் எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெருச்சாளிகளைப்போலப் பெருகிவிட்டனர். வியாபாரத்தில் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட வாழ்வில் பக்கத்தில் இருப்பவனிடம் அடித்துப் பிடுங்கக்கூடாது என்கிற ஒட்டுமொத்த அடிப்படையான அறம் சார்ந்த மனநிலையை மெள்ள தமிழர்கள் கைவிட்டு வருகின்றனரோ?
அதிகாலையில் கதவைத் தட்டி வந்து நின்ற தம்பியொருத்தன், அவசரமாகப் பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றான். ``பேங்க்ல லோன் வாங்கித் தர்றதுக்கு அக்கா ஒருத்தங்க முன்பணமாகக் கட்டச் சொன்னாங்க” என்றான். ``அப்படியெல்லாம் கட்டச் சொல்ல மாட்டார்களே?’’ என விசாரித்துப் பார்த்தால், அத்தனையும் ஏமாற்று வேலை. இந்தப் பையன் மாதிரியே பலரிடம் இப்படி ஏமாற்றிப் பணம் வாங்கி, அதை நான்கு வட்டிக்கு விடுகிறார் அந்த அக்கா. மூன்று மாதம் கழித்து, சுழற்சியில், “உனக்கு லோன் வாங்க முடியலை” என்று சொல்லித் திருப்பித் தந்துவிடுகிறார். இடையில் அவருக்கு ஏதாவது பிரச்னையென்றால் அத்தனை பேர் பணமும் அதோகதிதான். பென்ஷன் வாங்கும் முதியவர் ஒருத்தரிடம் கிடைக்கிற ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். ``என்னோட அஞ்சு நாள் சோத்தப் புடுங்கிட்டுப் போறான். அப்படிப் போறது தப்புன்னுகூட அவனுக்குத் தோணலை” என்றார் முதியவர் ஒருவர். மாடு வாங்க லோன் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஒரு கிராமத்தில் நூறு பேரிடம் தலைக்கு ஐந்நூறு ரூபாயை வாங்கிக்கொண்டு ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
நகரத்தில் எந்த வேலையென்றாலும் முடித்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள். புகழ்பெற்ற பள்ளியில் இடம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி, பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்தவர்களே கமிஷன் வாங்கிக் கொள்கிறார்கள். பெரிய மென்பொருள் நிறுவனங்களில் சேர்வதற்காக போலியாக இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்த்த மாதிரி சர்ட்டிபிகேட் தருவதற்கு இருபதாயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அப்படி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என ஐம்பது பேர் சில வருடங்களுக்கு முன்பு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குவிந்த காட்சியைப் பார்த்திருக்கிறேன். சாலையோரத்தில் பூ விற்கும் அம்மாவிடம் தினமும் பத்து ரூபாய் பிடுங்குகிறார்கள். விட்டால் எல்லாத் துறைகளிலும் நடைபெறும் இப்படியான மோசடிகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
முன்பெல்லாம் தெருவில் அந்தத் துறையைச் சேர்ந்தவர் நடந்து வந்தால், எல்லோரும் ஒதுங்கி நின்று கும்பிடுவார்கள். ``அவர் கைபட்டால் அதிர்ஷ்டம். பிள்ளைகுட்டிக நல்லா வருவாங்க” என்பார்கள். ஆனால், இப்போது அவரே பிள்ளை குட்டிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறவராக இருக்கிறார். வம்பு வழக்கென்றால் துணிந்து அவரிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வரலாம் என்பார்கள். இப்போது ஏமாற்றி அடித்துப் பிடுங்குபவர்களே அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
நீதி வழங்கும் அமைப்புகளில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றியெல்லாம் இங்கே பேசிவிடவே முடியாது. நீதி, நேர்மையெல்லாம் நம்முடைய வசதிக்குத் தகுந்தாற்போல ஏற்படுத்திக் கொண்டது. எளியவர்களின் கடைசிப் புகலிடம் கடவுள் என்பார்கள். சாமிக்கு அபிஷேகத்துக்கு எண்ணெய் பாக்கெட் வாங்கித் தருகிறார்கள். அது பிரிக்காமலேயே மறுபடி கடைக்கு வந்துவிடுகிறது. மறுபடி சாமிக்குப் போய் மறுபடி கடைக்கு வந்துவிடுகிறது. ஐம்பது எண்ணெய்ப் பாக்கெட்டுகள் ஒரு நாள் முடிவதற்குள் ஐயாயிரம் பாக்கெட்டுகளாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
‘முருகன் கட்டிய கோவணம் என்று சொல்லி, பழைய கசங்கிய துணியைக் கொடுத்து அப்பாவி பக்தர் ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாயை ஆட்டையைப் போட்டுவிட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஒருத்தரை அடிவார டாஸ்மாக் பாரில் பார்த்திருக்கிறேன். கருவறைக்குள் எட்டிப்பார்த்தால் சகல விதிமீறல்களும் சங்கடமில்லாமல் நிகழ்கின்றன. சமூகத்தில் சகல துறைகளிலும் இப்படி அடுத்தவனை ஏமாற்றும் மனிதர்கள் அசல்களுக்கு நிகராக நிறைந்திருக்கிறார்கள். பணத்துக்காக எதையும் செய்யலாம், யாரையும் ஏமாற்றலாம் என்பது ஒரு காலகட்டத்தின் மனநிலையாக மெள்ள உருண்டு திரண்டு வந்துகொண்டிருக்கிறது.
சொந்தத் தம்பியொருத்தருக்கு அரசாங்க அலுவலகத்தில் ஒரு வேலை. அங்கே ஐந்து லட்சம் கேட்டிருக்கிறார்கள். அதில் ஒரு லட்சம் சேர்த்துச் சொல்லி ஆறு லட்சம் என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் இந்த விஷயமே தம்பிக்குத் தெரிய வந்திருக்கிறது. நிலங்களின் மீது கமிஷன் தொகையை ஏற்றி வைத்து விற்றுப் பழகிய கைகளுக்கு, குடும்பம், சொந்தம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியவா போகிறது? அசலைவிட அட்டுகளுக்கு இச்சமூகம் நிரம்பவே மதிப்பு கொடுப்பதால், அவர்களின் செய்கைகள் அவர்களுக்குத் தவறாகக்கூட உறைப்பதில்லையோ?
ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தில் இருக்கிற எல்லாத் துறைகளும் மதிப்பீடுகளின் வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருப்பது நல்லதற்கன்று. இங்கே எதையும் எவருக்கும் அறிவுறுத்திவிட முடியாது. ``நீங்க மட்டும் யோக்கியமா” என உடனடியாகப் பதில் கேள்வி வந்து விழும். எல்லோரும் ஒரே குட்டையில் அறம் தவறிய மட்டைகளாக இரண்டறக் கலந்துவிட்டால் அப்புறம் யார் சொன்னால்தான் மதிப்பார்கள்? இல்லையெனில் யார்தான் எடுத்துச் சொல்வது? இப்படி தங்களுக்குள்ளேயே அட்டுகளை நடமாட விட்டுக்கொண்டிருக்கும் சமூகம், தங்களை ஆள்பவர்கள், ஆளத் துடிப்பவர்கள் மட்டும் அசலானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் எப்படி?
சிறுநகரொன்றில் உள்ள 47 வருடப் பழைமையான உணவகம் ஒன்றிற்குப் போயிருந்தேன். கல்லாவில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியின் கணவர் ஆரம்பித்த உணவகம் அது. இப்போதும் அப்பகுதி மக்களிடையே செல்வாக்கு பெற்றதாகத் திகழ்கிறது. அவரின் கணவர் ஆறேழு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதற்கடுத்து அந்தம்மாவின் மேற்பார்வையில் உணவகம் நடக்கிறது. இத்தனைக்கும் அந்த அம்மா மூன்றாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியவர். எழுதப் படிக்கத் தெரியவே தெரியாது. எல்லாமே மனக்கணக்குதான்.
ஒருதடவை அவரிடம் ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்தபோது, போகிற போக்கில் ``யாரையும் ஏமாத்தணும்னு நெனைக்கவே மாட்டோம். மளிகை, மசாலா, கறி, காய், எண்ணெய்னு எல்லாப் பொருளும் தரமானதுதான். யாராவது செக்கிங் வந்தாகூட, `இந்தா பாருங்க சாமி, கதவெல்லாம் தொறந்துதான் கிடக்குது. போயி என்ன வேணும்னாலும் செக் பண்ணிக்கோங்க’ன்னு வெளியில வந்து உக்காந்துக்குவேன். யாரையும் ஏமாத்தாம உழைச்சுச் சாப்பிட்டா என்ன எழவுக்குப் பயந்து கிடக்கணும்?” என்றார்.
படிக்காத அந்த அம்மாவுக்கு இருக்கும் இந்தத் தெளிவு படித்தவர்களில் பலருக்கு இருப்பதில்லை. படித்தவர்கள் நிறைந்த சமூகம் என்று மார்தட்டுகிறோம். படிக்காதவர்களிடம் இருக்கும் சிறு அறத்தைக்கூட எங்கே தொலையக் கொடுத்தோம்? அசலையும் அட்டையும் பிரித்துப் பார்க்கிற சூட்சுமத்தை ஒரு சமூகம் தொலையக் கொடுத்துவிட்டால், திரும்பவும் பழையதை விரட்டிப் பிடிக்கப் பல்லாண்டுகளைப் பணயமாக வைக்க வேண்டியிருக்கும். பல்லாண்டுகள் என்கிற சக்கரம் சுழன்று முடிக்கையில், அதில் பல கோடி வாழ்வுகள் முடிந்து மடிந்து காணாமல் போயிருக்கும். இங்கே விலைபோகாத மத்தி மீன்களே மிகச் சிறந்தவை என உலகெங்கும் சொல்கிறார்கள்.
- அறம் பேசுவோம்!