பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சமூக நீதிபதி!

சமூக நீதிபதி!
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக நீதிபதி!

ப.திருமாவேலன்

ட்டப்புத்தகங்களை மட்டுமே பார்த்துத் தீர்ப்பளித்த நீதிபதிகளின் மத்தியில் சமூகப் பார்வையுடன் தீர்ப்பளித்த நீதிபதி அவர். நீதிக்கு இலக்கணம் வகுத்த நீதிபதிகளுக்கு மத்தியில் நீதிபதிகளுக்கும் இலக்கணமாக வாழ்ந்த நீதிபதிகளில் ஒருவர் அவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர் கிராமத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன்பிறகு டெல்லி உச்சநீதிமன்றத்திலும் நீதிநெறிமுறை வழுவா ஆட்சி நடத்திய எஸ்.ரத்தினவேல்பாண்டியன் தனது 89வது வயதில் இறந்துபோனார். ஓய்வு பெற்று கால்நூற்றாண்டு ஆனபிறகும் உற்சாகம் குறையாத மனிதராக வலம் வந்தார்.   முக்கியமான தீர்ப்புகளின் மூலம் வரலாற்றில் வாழும் மனிதர் ரத்தினவேல்பாண்டியன்.

1980-ம் ஆண்டு  ‘மத்திய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு தரவேண்டும்’ என்று பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் ஆணையம் அறிவித்ததை, தொண்ணூறுகளில் வி.பி.சிங் பிரதமர் ஆனபோது ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் அளித்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. 27 சதவிகித இட ஒதுக்கீடு என்ற ஒரே ஒரு விஷயத்தைத்தான் அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனியாகத் தீர்ப்பு எழுதி அதில் பெரியார் பெயரையும் வி.பி.சிங் பெயரையும் பொறித்தவர் ரத்தினவேல்பாண்டியன். சட்டநீதி மட்டுமல்ல, சமூகநீதியையும் காப்பாற்றத் தனது பதவியைப் பயன்படுத்தியவர் அவர்.

கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான ஜனதா அரசு கலைக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்கும் மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் 11 வரையறைகளைச் செய்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அந்த அமர்விலும் ரத்தினவேல்பாண்டியன் இருந்தார். ‘356வது பிரிவு என்பது இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் கட்டற்ற அதிகாரத்தைத் தரவில்லை, ஆட்சியைக் கலைத்தது சட்டவிரோதம் என்று தெரிந்தால் அந்த ஆட்சிக்கலைப்பை ரத்துசெய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு’ என்று அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டது. அதன்பிறகுதான் ஆட்சிக் கலைப்புகள் நடப்பது குறைந்தது. சட்டநீதி மட்டுமல்ல, சமூக நல்லிணக்க நீதியைக் காப்பாற்றவும் தனது பதவியைப் பயன்படுத்தியவர்.

சமூக நீதிபதி!

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு காஷ்மீர் பரக்புரா பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். பொதுவாக இதுமாதிரியான விசாரணைகளில் அரசுக்குச் சாதகமாகத்தான் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், காவல்துறை செய்தது குற்றம் என்று தவறுகளைப் பட்டியலிட்டுக் கொடுத்தவர் ரத்தினவேல் பாண்டியன். சட்டநீதி மட்டுமல்ல, சத்தியநீதியைக் காப்பாற்றவும் தனது பதவியைப் பயன்படுத்தியவர்.

‘`தன் குழந்தைகளை மனைவி கடத்திச் சென்றுவிட்டதாகக் கணவன் வழக்குத் தொடுத்தார். குழந்தைகளோடு மனைவியை ஆஜராக உத்தரவிட்டார் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன். இரண்டு முறை நோட்டீஸ் போன பிறகும் அந்தப் பெண் ஆஜராகவில்லை. அதன்பிறகு போலீஸை வைத்து அழைத்துவர வைத்தார். ஏன் இரண்டு முறையும் வரவில்லை என்று நீதிபதி கேட்டபோது, ‘என்னிடம் பணம் கிடையாது ஐயா, இப்போது போலீஸ் வேன்லதான் வந்தேன். போலீஸ் வேன்லயே கொண்டுபோய் விடச் சொல்லுங்கய்யா’ என்று அந்தப் பெண் சொன்னபோது, ‘நான்தானம்மா தப்பு செய்துவிட்டேன்’ என்று சொல்லி, தனது சொந்தக் காசை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தவர்” என்று வழக்கறிஞர் அ.அருள்மொழி சொல்கிறார். சட்டநீதியை மட்டுமல்ல, மனிதாபிமான நீதியையும் காப்பாற்றியவர்.

1960களில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தென்மாவட்டத்தில் வளர்த்தவர் ரத்தினவேல்பாண்டியன். அவர் இல்லை என்றால் வைகோ இல்லை. தான் செல்லும் கூட்டத்துக்கு எல்லாம்  அன்றைய மாணவர் ‘வை.கோபால்சாமி’யை அழைத்துச் சென்றவர் இவர். சீனியர் ரத்தினவேல்பாண்டியனிடம் நெல்லையில் ஜூனியராக இருந்தவர் வைகோ. 1971, சேரன்மாதேவி தொகுதியில் 193 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். தோல்வியிலும் ஒரு நன்மையே. அவரை அரசு வழக்கறிஞர் ஆக்கிய அன்றைய முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆக்கினார். ‘ஓர் அரசியல் கட்சியிலிருந்து சென்றவர் என்றாலும் தனது பணிக்காலத்தின் எந்த இடத்திலும் அரசியல் கட்சி சார்பு நிலைப்பாடுகள் எடுக்காதவர்” என்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். சட்டநீதியை மட்டுமல்ல, நீதிநெறிமுறை விழுமியங்களையும் காப்பாற்றியவர்.

நெல்லை மாவட்டத்தில் இவர் வழக்கறிஞராக இருந்தபோதுதான் சீவலப்பேரி பாண்டி வழக்கு நடந்தது. சீவலப்பேரி பாண்டிக்கு வழக்கறிஞராக இருந்தவர் இவர். பாண்டி கதையை ஜூனியர் விகடனில் பத்திரிகையாளர் செளபா எழுதியபோது அவரைச் சந்தித்துப் பேசினார். ‘`உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆனபிறகும் ஒரு கிராமத்து வெள்ளந்தி மனிதனாகத்தான் அவர் வாழ்ந்தார்” என்கிறார் செளபா. தனது கிராமத்தில் இருந்த நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அந்த நிலத்தில் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்கே கொடுத்த ரத்தினவேல்பாண்டியனை நினைக்கும்போது, அவரை நீதிபதியாக மட்டுமல்ல, ‘மனிதபதி’யாகவே வணங்கத் தோன்றுகிறது!