Published:Updated:

பணம் பழகலாம்! - 2

பணம் பழகலாம்! - 2
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் பழகலாம்! - 2

சொக்கலிங்கம் பழனியப்பன்

‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிற ட்ரெண்ட், துணியில் ஆரம்பித்து இப்போது வீடுகள் வரை

பணம் பழகலாம்! - 2

வந்துவிட்டது. கடந்த சில வருடங்கள் டல்லாக இருந்த ரியல் எஸ்டேட் துறை 2018-ல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையாகாமல் தேங்கியிருந்த பல வீடுகள், அப்பார்ட்மென்ட்டுகள் இந்த ஆண்டு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதனால் 2018-ஐ வீடு வாங்க சிறந்த ஆண்டாகச் சொல்கிறார்கள்.

வீடு வாங்க வேண்டும். ஆனால் எப்போது வாங்க வேண்டும், எவ்வாறு வாங்கவேண்டும், சொந்தமாகக் கட்டலாமா அல்லது, கட்டிய வீட்டை, ஃப்ளாட்டை வாங்கலாமா, மல்ட்டி ஸ்டோரி அப்பார்ட்மென்ட்டா, சிறிய அப்பார்ட்மென்ட்டா என சில குழப்பங்கள் எல்லோருக்குமே இருக்கின்றன.

செலவழிக்கும் இன்றைய தலைமுறையைப் பார்க்கும்போது, சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே வீட்டில் முதலீடு செய்வதுதான் நல்லது என்று சொல்வேன். சம்பாதிக்கும் பணத்தை நெறிப்படுத்த இதைவிடச்  சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இன்று நாம் வீட்டில் செய்யும் முதலீடு, பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது மிகச்சிறந்த முடிவாகத் தெரியும்.

இடம் வாங்கி வீடுகட்டுவதுதான் சிறந்த வழி என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் இது பெரும்பான்மையானோருக்கு எட்டாக்கனியே. ஆகவே, பணத்தோடு இருக்கும்பட்சத்தில் தனி வீடு கட்டிக்கொள்ளுங்கள். பட்ஜெட் இல்லாதபட்சத்தில் அப்பார்ட்மென்ட் வாங்கிக்கொள்ளுங்கள். ஸ்கூல், ஜிம், பார்க், ஸ்விம்மிங் பூல் என சகல வசதிகளும் வசிக்கும் வளாகத்துக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பவர்கள் மல்ட்டி ஸ்டோரி அப்பார்ட்மென்ட்டுகளில் வீடு வாங்கலாம்.

பணம் பழகலாம்! - 2

வெளிநாடுகளில் வீடு வாங்கும்போதே, ‘ஒருவேளை இந்த வீட்டை விற்க நேர்ந்தால், வாங்குபவர் என்னென்னவெல்லாம் எதிர்பார்ப்பார்’ என்பதை மனதில்கொண்டு வாங்குவார்கள். உதாரணத்துக்கு, அருகில் சிறந்த பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கடைகள், அகலமான சாலைகள், சட்டத்தை மதித்துக் கட்டப்பட்ட வீடுகள், மழை வந்தால் வெள்ளம் சூழாத பகுதி, குடிநீர் வசதி, ஆக்டிவ்வாக இருக்கும் குடியிருப்போர் சங்கம் போன்றவை இருக்கின்றனவா என்பதை மிக முக்கியமாகப் பார்ப்பார்கள். இதே தேடல் உங்களுக்கும் வேண்டும்.

வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்போது, மொத்த வீட்டுமதிப்பில், நம்மை 20 – 25 சதவிகிதம் முன்பணமாக வங்கி செலுத்தச் சொல்லும். இது தவிர பதிவுக்கட்டணம், கிரகப்பிரவேசச் செலவு மற்றும் புது வீடு சென்றவுடன் ஆகும் ஃபர்னிச்சர் செலவுகளுக்கு ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒருவர் 40 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குகிறார் என்றால், 8-10 லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தைப் போட வேண்டும். மீதி  30-32 லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர பதிவுக்கட்டணச் செலவு 2-3 லட்சம் ரூபாய் ஆகும். உங்கள் முன்பணத்தைச் சேர்ப்பதற்கு மியூச்சுவல் ஃபண்டுகள் நடத்தும் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் அல்லது ரெக்கரிங் டெப்பாசிட்டில் சில ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

குறைந்த வட்டிவிகிதம், குறைந்த ப்ராசஸிங் கட்டணங்கள் மற்றும் கடனை எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி உள்ள வங்கிகளிடமே கடன் வாங்குங்கள். அதுபோல், ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்து ஆவணங்கள் அனைத்தும் சட்டப்படி உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சொந்தமாக வீடு கட்டும்போது, சட்டத்தை மதித்துக் கட்டுங்கள். பக்கத்து வீட்டுக்காரர் அதிக ஏரியாவில் கட்டியுள்ளார் என்பதற்காக, நீங்களும் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டாதீர்கள்! அதேபோல், வீடு வாங்கும்போது தெரு 40 அடி அகலத்துக்குமேல் இருந்தால் நல்லது.

எல்லாம் செய்த நீங்கள், உங்கள் வீட்டுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க மறந்துவிடாதீர்கள். அதேபோல, கடன் யார் பெயரில் உள்ளதோ அவருக்கு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க மறக்காதீர்கள். இவை இரண்டும் மிக மிக அவசியம்.

விரைவில் வீடு வாங்க வாழ்த்துகள்!

- வரவு வைப்போம்...