
தேர்தல் நலனா, தேச நலனா?
தமிழகத்துக்குச் சேரவேண்டிய 14.74 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் குறைத்தபோதும், ‘ஆறு வாரங்களுக்குள்

நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரி நீர்ப்பங்கீட்டைக் கண்காணிக்கும் அமைப்பை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று அதே தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததுதான், நமக்குக் கிடைத்த ஒரே ஆறுதல். ஆனால், இந்தத் தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் மத்திய அரசிடம் எந்த அசைவும் இல்லை.
‘மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்ட’த்தைத் தொடங்கிவைப்பதற்காகச் சென்னை வந்த பிரதமரிடம், விழா மேடையிலேயே ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனாலும், பிரதமர் மோடியிடமிருந்து எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியோ, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகக் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய மத்திய அரசு சார்பில் முன்முயற்சிகள் எடுக்க வேண்டிய நீர்வளத்துறை அமைச்சரே இப்படித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
`காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கெடு விதிக்க முடியாது’ என்று ஒரு மத்திய அமைச்சரே சொல்வது சட்டப்படியும் தார்மிகரீதியாகவும் சரியானதுதானா? இதற்குப் பிரதமரின் பதில் என்ன? ஏன் காவிரி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது? தமிழகத்தின் நலனைக் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை இல்லையா?
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக இருந்தாலும், தமிழக அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய ஒற்றுமை ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களுக்குள் இருந்த அரசியல் வேறுபாடுகளை எல்லாம் மறந்து, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி, காவிரி விஷயத்தில் `மேலாண்மை வாரியம் வேண்டும்’ என ஒரே குரலில் வலியுறுத்தியது தமிழகத்தின் ஒற்றுமையைத் தேசத்துக்கு உணர்த்தியிருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால்தான் காவிரி நீரில் நமது உரிமையை நிலைநாட்ட முடியும். அதனால், தமிழக சட்டசபையைக் கூட்டி, உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதேபோல, சட்ட ரீதியாகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு முடிவெடுக்க நினைக்கலாம். ஆனால், தேர்தல் நலனைவிடவும் தேச நலன் முக்கியமானது. மாநிலங்களுக்கான நியாயம் வழங்கப்பட்டால்தான் தேச நலன் காப்பாற்றப்படும். இதை உறுதியான குரலில், ஒற்றுமையான குரலில் தமிழகம் உணர்த்த வேண்டிய தருணம் இது.