பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தெய்வங்கள் மீதான போர்!

தெய்வங்கள் மீதான போர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வங்கள் மீதான போர்!

மருதன்

யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை என்பதால் வீதியின் ஓரத்தில் நின்றபடி இரு கைகளையும் நீட்டிக்கொண்டு, போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் கதறிக்கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. ‘`என் அப்பாவையும் அம்மாவையும் திருப்பிக் கொடுங்கள்!’’

இன்னொரு குழந்தை நடுவீதியில் அமர்ந்து தனியே அழுதுகொண்டிருக்கிறது. கடந்துசென்றுகொண்டிருந்த ஒருவர் கீழே முழங்காலிட்டு அமர்ந்து, தன்னிடமிருந்த ரொட்டியைப் பிய்த்துக் கொடுக்கிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தக் குழந்தை தயக்கத்துடன் கேட்கிறது. ‘`இனி பசியே எடுக்காமல் இருப்பதற்கு உங்களிடம் ஏதாவது மாத்திரை இருக்கிறதா?’’ அவர் குழந்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஓவென்று வெடித்து அழுகிறார்.

சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸுக்கு வெளியில், 15 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது கிழக்கு கவுட்டா என்னும் பகுதி. 2013-ம் ஆண்டு முதலே போரில் உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பகுதி இப்போது மரண ஓலங்களில் புதையுண்டு கிடக்கிறது. உடைந்த கட்டடங்களின் பகுதிகளும் மனித உடற் பகுதிகளும் பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றுகலந்து கிடக்கின்றன. ரத்தம் சொட்டச் சொட்டத் துடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை  எங்களிடம் கொண்டுவர வேண்டாம் என்று அலறுகிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலான மருத்துவமனைகள் இடிந்து கிடக்கின்றன, அல்லது மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன. ஆக்ஸிஜன் இல்லை. வலியை மறக்கச் செய்ய மயக்க மருந்துகள் இல்லை. வலி நிவாரணிகள் இல்லை. ஊசிபோட முடியாது. ஓர் ஆக்ஸிஜன் மாஸ்க்கை ஒன்பது குழந்தைகள் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

தெய்வங்கள் மீதான போர்!

கவுட்டாவை எப்படியாவது பணியவைத்து வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக  அப்பகுதிக்குள் எரிபொருள் எதையும் கொண்டு செல்ல முடியாதபடிக்கு வெற்றிகரமாகத் தடுத்துவிட்டார் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்.

நான்கு லட்சம்  பேர் வசிக்கும் கிழக்கு கவுட்டாவில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 580 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை என்ன என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. அல் ஜசீரா அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி சிரியா முழுக்க இதுவரை 4,65,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பத்து லட்சம் பேர் காயமடைந்திருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையிலிருந்து கிட்டத்தட்ட பாதிப்பேர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

இது போதாது என்கிறார் ஆசாத். ``ஆம், மக்கள் அவதிப்படுகிறார்கள் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால், எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது, சொல்லுங்கள். ரஷ்யாவும் எனது அரசும் இணைந்து போர் விமானங்களைப் பறக்கவிடும்போது குண்டு எங்கே வந்து விழுகிறது என்பதை நாங்கள் துல்லியமாகக் கணிக்க முடியாது அல்லவா? மக்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளும் பாலும் நீரும்போல் ஒன்றுகலந்து இருக்கும்போது எப்படி அவர்களைத் தனித்தனியே பிரித்து அழிப்பது? மையமாகத்தானே குண்டுகளை வீசவேண்டியிருக்கிறது? கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒருசில பிசகுகள் போக, அதிகமான எண்ணிக்கையில் பயங்கர வாதிகள்தானே அழிந்துபோயிருக் கிறார்கள்? மக்களே, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். சிரியாவில் ஜனநாயகம் திரும்ப வேண்டுமானால், பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டுமானால், அமைதிப் பூங்காவாக சிரியா மலர வேண்டுமானால் நாம் சில தியாகங்களைச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது’’ என, சொந்த நாட்டு மக்களையே கொன்றுவிட்டு நாட்டுப்பற்றுடன் பேசுகிறார் ஆசாத்.

தெய்வங்கள் மீதான போர்!

இருப்பதிலேயே அச்சமூட்டக்கூடியது என்ன தெரியுமா? ஐந்து வயது மாயா தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் இரு விழிகளைத் திறந்துவைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார். வீடுகள் இடிந்துவிழுவதை மாயா பார்த்துக்கொண்டிருக்கிறார். பொருள்கள் சிதறடிக்கப்படுவதை அவர் பார்க்கிறார். வீதிமுழுக்க இடிபாடுகள் குவிந்துகிடப்பதையும் அவற்றுக்கு  இடையில்  தெரியும் வண்ணங்களையும் அவர் ஆராய்ந்துகொண்டிருக்கிறார். பயங்கரவாதம், கிளர்ச்சிக் குழுக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ், ஆசாத், ரஷ்யா, ஈரான், துருக்கி, புவிசார் அரசியல் எதுவும் அவருக்குத் தெரியாது; சொன்னாலும் புரியாது. மாயாவுக்கு உறுதியாகத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்: ‘நான் வாழும் உலகம் பாதுகாப்பானதன்று. என் பொம்மைகளால் இங்கே நிம்மதியாக வாழ முடியாது!’

இந்த உணர்வு மாயாவை நிச்சயம் அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.  அதனால்தானோ என்னவோ அடிக்கடி விளையாடுவதை நிறுத்திவிட்டுத் தன் பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைத்து, ஒவ்வொன்றுக்கும் முத்தம் பதித்து, பத்திரமாக அணைத்துக்கொள்கிறார்.