பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அழுகை... சிரிப்பு... சைகை!

அழுகை... சிரிப்பு... சைகை!
பிரீமியம் ஸ்டோரி
News
அழுகை... சிரிப்பு... சைகை!

அ.சையது அபுதாஹிர், படம்: கே.ஜெரோம்

முதுமையடைந்த கருணாநிதி இப்போது குழந்தையாகிவிட்டார். சிரிப்பும் அழுகையுமே அவரது இப்போதைய மொழி. அரசியல் விளையாட்டில் தேர்ந்த கருணாநிதி, பேரனோடு கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்கிறார்.  ‘ஓய்வறியாச்  சூரியன்’ என்று தி.மு.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டவர் இப்போது கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட ஒவ்வாமைத் தொற்று, அதன்தொடர்ச்சியாக ஏற்பட்ட மூச்சுத்திணறல், அதனால் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை என ஒரே ஆண்டில் கருணாநிதிக்கு ஏற்பட்ட சோதனைகள் அதிகம். அவற்றிலிருந்து மீண்டிருக்கும் கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது என மகிழ்கிறார்கள் குடும்பத்தினர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், கருணாநிதியின் ஆத்மார்த்த நண்பர். வீட்டுக்கு அவர் வந்துவிட்டாலே கருணாநிதி உற்சாகமாகிவிடுகிறார். அன்பழகனைப் பக்கத்தில் அமரச்சொல்லி சைகை காட்டி, அவரின் கையைப் பிடித்துக்கொள்கிறாராம். அன்பழகன் பேசுவதைக் கூர்ந்து கவனிக்கிறார். அவரால் பதில் சொல்ல முடியாவிட்டாலும், தன்னுடைய உணர்ச்சிகளை சைகையாகப் பதிவு செய்கிறார் கருணாநிதி. அவர்கள் இருவரும்  சந்தித்தாலே அங்கே நெகிழ்வுக் காட்சிகள்தான்.

அழுகை... சிரிப்பு... சைகை!

கருணாநிதியையும், தயாளுவையும் அருகில் இருந்து பார்த்துகொள்வது அவர்களின் மூத்த மகள் செல்வி. ``அப்பா, என்ன வேண்டும்?” என்று செல்வி கேட்டால், சைகையாலே பதில் சொல்விடுகிறார். சில நேரம் பேசுவதற்கு முயன்றாலும், கழுத்தில் போடப்பட்ட துளையால் பேச முடியவில்லை.  அதேபோல்,  மு.க.தமிழரசு கருணாநிதியைப்  பார்க்க வந்தால், கருணாநிதி சைகையால் தமிழரசிடம் கேட்கும் முதல் கேள்வி ``பேரன் எங்கே?” என்பதுதான். தமிழரசின் பேரன் மகிழன்தான் இப்போது கருணாநிதிக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் மருந்து.

வீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் தயாளு அம்மாளும், கருணாநிதியும் பத்து நாள்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்கிறார்கள். கருணாநிதியை தயாளு அம்மாள் பார்த்ததுமே, கண்ணீர் வந்துவிடுகிறதாம். அதனால் இருவரையும் அடிக்கடி சந்திக்கவைப்பதில்லை. ஞாபக மறதியால் தயாளு அம்மாள், கருணாநிதிக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருக்கிறார்.

கருணாநிதியை மீண்டும் பேச வைப்பதற்கான சிகிச்சையை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார்கள். இப்போது சிறிய அளவில் முன்னேற்றமும் இருக்கிறதாம்.

அழுகை... சிரிப்பு... சைகை!

கருணாநிதியின் தற்போதைய பொழுதுபோக்கு என்றால் டிவி பார்ப்பது.  அதேபோல், பேப்பர் படிக்கவும் முயற்சி செய்கிறார். கண்பார்வை தெளிவாக இருப்பதால், எழுத்துகளை வாசிக்க முடிகிறது. அதைத்தாண்டி அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு அவருடைய பேச்சுகள் அடங்கிய சி.டிகளை டிவியில் போடுகிறார்கள். அவருடைய குரலை அவரே கேட்கும்போது, முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்கள் அவரின் குடும்பத்தார்.

அழுகை... சிரிப்பு... சைகை!

திரவ உணவு உட்கொள்வதால் உடல் எடை குறைந்துவிட்டது. ஆனால், மூளையின் செயல்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான், அடிக்கடி பார்த்த முகங்களை உடனே கண்டுகொண்டு ரியாக்ஷன் காட்டுகிறார் என்கிறார்கள்.

கரகரக் குரலால் தமிழகத்தைக் கட்டிப்போட்ட கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில் `பிடர்கொண்ட சிங்கமே பேசு’ என்று கவிதை எழுதியுள்ளார் வைரமுத்து. அவர் கவிதை உண்மையாகட்டும்!