
“அம்மா, இப்போ எனக்கு மகள்!”வெ.நீலகண்டன், படங்கள்: பா.காளிமுத்து
அவர் அருகில் அமர்ந்து “வணக்கம் காம்ரேட்” என்றேன். சாய்ந்த தலை லேசாக அசைகிறது. விழிகள் நிமிர்ந்து தேடுகின்றன. அடுத்த நொடி சலனமில்லாமல் கீழே பார்க்கத் தொடங்குகிறார். தொழிற்சங்கக் கூட்டங்களில் கம்பீரமாக ஒலித்த குரல்... இப்போது மௌனித்துவிட்டது. பெண்களின் உரிமைகளுக்காகக் களமாடிய கால்கள் சோர்ந்து விட்டன. ‘காம்ரேட்’ என்கிற வார்த்தை மட்டும் அவ்வப்போது அவருடைய புலன்களை லேசாக உசுப்புகிறது.
‘காம்ரேட்’ மைதிலி சிவராமனை இந்த நிலையில் பார்க்க, மனம் வலிக்கிறது.
சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர், ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்களில் ஒருவர், கீழவெண்மணி தொடங்கி வாச்சாத்தி வரை அடித்தட்டு மக்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர், உணர்வுபூர்வமான எழுத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை விதைத்தவர்... இப்போது ‘அல்சைமர்’ என்ற தீவிர ஞாபகமறதி நோயால் சிதைந்து போய்க் கிடக்கிறார். மைதிலியின் கணவர் கருணாகரனும், மகள் கல்பனாவும் குழந்தையைப்போல மைதிலியைப் பார்த்துக் கொள்கிறார்கள்.

மைதிலி பிறந்தது, ஆந்திர மாநிலம் காக்கிநாடா. வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில். ஒன்பது வயதில்தான் அவருக்குப் பள்ளிக்கல்வியே வாய்த்தது. டெல்லியில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ நிறுவனத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மைதிலிக்கு நியூயார்க்கில் உள்ள ‘சிரக்யூஸ் பல்கலைக்கழக’த்தில் முழு உதவித் தொகையோடு படிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க அரசின் நிதித்துறையில் பணிபுரிந்தார்.
1960-களில் வியட்நாம் போருக்கு எதிராக நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள், கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைகளுக் கான போராட்டங்கள் அவரின் கவனத்தை ஈர்த்தன. அந்த அரசியல் உணர்வின் மூலம் மார்க்சியத்தின் பக்கம் வந்துசேர்ந்தார்.
அமெரிக்க அரசு வேலையை உதறிவிட்டு, ஐ.நா-வால் உருவாக்கப் பட்ட ‘காலனியாதிக்க விடுதலைக் கமிட்டி’யில் ஆராய்ச்சி யாளராகப் பணியில் இணைந்தார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பன மாக விளங்கிய சோஷலிச கியூபாவைப் பார்க்க உந்துதல் ஏற்பட்டது. எவருக்கும் தெரியாமல், மெக்ஸிகோ வழியாகப் பயணித்து கியூபா சென்றடைந்தார். சோஷலிச கியூபாவின் நிர்வாக முறையும், மக்களின் வாழ்க்கை முறையும் மைதிலியின் சிந்தனையில் பல மாற்றங்களை உண்டாக்கின.
ஐ.நா. வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்த மைதிலிக்கு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி காத்திருந்தது. ஆனால், அதில் இணையாமல் பீகாரில் இருந்த வினோபா பாவேயைச் சந்தித்தார். அத்தருணத்தில் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. அன்று தொடங்கியது மைதிலியின் அரசியல் பயணம். கீழவெண்மணி அவலத்தைப் பல்வேறு இதழ்களில் எழுதியதோடு, கீழவெண்மணிப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப் பட்ட கணபதியாப்பிள்ளை கமிஷ னுக்குப் பல்வேறு ஆவணங்களைத் திரட்டியும் தந்தார். மைதிலியின் தீவிரத்தைப் பார்த்து வியந்த கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி.சிந்தன் மைதிலியை மார்க்சிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வந்தார்.
ஒரே நேரத்தில் சென்னையில் உள்ள ஆறு நிறுவனங்களின் தொழிற்சங்கங்களைத் தலைமை யேற்று வழி நடத்தினார். சி.ஐ.டி.யூ அமைப்பின் மாநிலப் பொறுப்புகளையும் வகித்தார்.

1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோரோடு இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தைக் கட்டியெழுப்பினார் மைதிலி. பல்வேறு பெண்கள் அமைப்புகளோடு இணைந்து பெண்களுக்கான கழிவறைப் பிரச்னை முதல் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை வரை அனைத்திலும் முன் நின்றார். சிதம்பரம் பத்மினி வழக்கு, பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி வழக்கு எனப் பெண்களுக்கு எதிரான பல பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமிருந்து சட்டப் போராட்டம் நடத்தினார். மக்கள் போராட்டங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மைதிலி, 2007-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக அல்சைமரால் பாதிக்கப் பட்டார்.
“தொடக்கத்துல அம்மாவுக்கு டெம்பரேச்சர் அதிகமாகிக் கிட்டே போச்சு. மருத்துவர் களால நேரடியா பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியலை. ‘இதய வால்வுல லீக் இருக்கு. அதனாலகூட இருக்கலாம்’ன்னு சொன்னாங்க. அதுக்காக ஒரு ஆபரேஷன் செஞ்சோம். கொஞ்சம் கொஞ்சமா அவங்க ஞாபகங்கள் பாதிக்கப்பட்டுச்சு. திடீர்னு, ‘நான் எங்கே இருக்கேன்’, ‘என் வீடு எங்கே’, ‘என்னை ஏன் இங்கே கொண்டுவந்து வச்சிருக் கீங்க’ன்னு கேட்பாங்க. ஒருநாள், எங்க எல்லோரையும் வீட்டுக்குள்ள வெச்சுப் பூட்டிட்டு கீழே இறங்கி இன்னொரு வீட்டுக்குள்ள போய் உக்காந்துட்டாங்க.
கடைசியா, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவ மனையில்தான் அம்மாவுக்கு வந்திருக்கிறது அல்சைமர் நோய்னு கண்டுபிடிச்சாங்க. இப்போ அம்மா குழந்தைதான். காலையில எழுப்பிக் குளிக்கவெச்சு, டிவி முன்னாடி உக்கார வெச்சிருவோம். கார்ட்டூன் சேனல்னா கொஞ்ச நேரம் நிமிர்ந்து பார்ப்பாங்க. மற்றபடி தூக்கம் தான்.
இப்படியொரு நிலையில அம்மாவைப் பார்க்க கஷ்டமா இருக்கு”- கல்பனாவின் விழிகளில் நீர் ததும்புகிறது. தன் அம்மாவைப் பற்றி ‘காம்ரேட் அம்மா’ என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் கல்பனா.
மைதிலியின் கணவர் கருணாகரன் எந்நேரமும் மனைவிக்கு நெருக்கமாகவே அமர்ந்திருக்கிறார்.
“மைதிலி எனக்கு அறிமுகமானது ‘Radical Review’ இதழ் மூலமாதான். கம்யூனிசக் கொள்கைகள்ல பிடிப்பு உருவான சமயத்துல ஒரு பெட்டிக்கடையிலதான் அந்த இதழைப் பார்த்தேன். அதன் ஆசிரியரா இருந்த மைதிலியைப் போய் சந்தித்தேன். அந்த ஆசிரியர் குழுவில நானும் இணைஞ் சேன். ஆக்கபூர்வமாத் தொடங்கின நட்பு, திருமண வாழ்க்கைல எங்களை இணைச்சது. ஒரு கட்டத்துல, என் செயல்பாடுகளைக் குறைச் சுட்டு அவளோட வேலைகளைப் பகிர்ந்துக்கி ட்டேன்.

மைதிலி, நினைவுகளை இழக்கத் தொடங்கின காலகட்டத்தை எங்களால அவ்வளவு சீக்கிரம் கடந்து வரமுடியலை. சில நேரங்கள்ல, நம்பமுடியாத அளவுக்கு அவளோட இயல்பு மாறுது. சீனாவுக்கு அழைச்சுட்டுப் போய், ‘முதல் மாநாட்டு மியூசிய’த்துல நிறுத்தினேன். மௌனமா நின்ன அவள் மாவோ படத்தைப் பார்த்ததும் ரெட் சல்யூட் வச்சா.
பிடல் காஸ்ட்ரோ இறந்த செய்தியை அவளிடம் சொன்னப்போ, கண்கள்ல இருந்து நீர் கொட்டுச்சு. ஆனா, முகத்துல எந்தச் சலனமும் இல்லை. போராட்ட குணமும், மார்க்சியமும் அவ ரத்தத்துல கலந்திருக்கு. உணர்வுகளால அதை மறக்கடிக்க முடியாது” என்கிறார் கருணாகரன்.
காம்ரேட் மைதிலி நினைவுகளை மறந்திருக்கலாம். ஆனால், மைதிலியை எப்போதும் தமிழக அரசியல் வரலாறு மறக்கப்போவதில்லை.