Published:Updated:

அன்பும் அறமும் - 3

அன்பும் அறமும் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 3

கூட்டாஞ் சோற்றுக் கணக்குசரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

கிராமத்திலிருந்து கிளம்பிப்போன, எல்லாம் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கின்றன என்கிற நம்பிக்கையில் உழலும் நகரத்தான் மனநிலையை அடித்து நொறுக்குகிற மாதிரியான வாழ்க்கைகளை வழியெங்கும் பார்க்கிறேன். நகரம் ஓர் எல்லை தாண்டியதும் தன் காதுகளை இறுக்க மூடிக்கொள்கிறதோ என்றும் தோன்றத் தொடங்கிவிட்டது. நகரத்தின் இயல்பே அதுதானோ என்கிற கேள்வியும் தன்னியல்பாக எழுகிறது.

பெரியவருக்கு எழுபது வயது இருக்கும். அவரின் மனைவியான அந்தம்மாவிற்கு அறுபது இருக்கும். ஒரே மகன் குடிகாரனாகிப் பிழைக்கத் தெரியாமல் கோவையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். பேரப் பிள்ளைகள் பற்றித்தான் எல்லாக் கவலையும் அவர்களுக்கு. எப்படியாவது மகனுக்கு ஒரு குட்டியானை வண்டி வாங்கிக் கொடுத்துவிட்டால் பிழைத்துக் கொள்வான் என கடுஞ்சீவனத்திற்கு இடையிலும் காசு சேர்க்கிறார்கள். என்ன நினைத்தாரோ பெரியவர், ஓர் அதிகாலையிலிருந்து என்னை அவரின் பையன் போல் நடத்த ஆரம்பித்தார். `தம்பிக்கு காபீ கொடுத்து எழுப்பு’ என அவர் மனைவியிடம் சொன்னது எனக்குக் கேட்டது. அந்தக் குரலில் ஒரு கனிவு இருந்தது. அவரது  அனுமதிக்காகத்தான் அந்தம்மா காத்திருந்ததோ என்னவோ? வெகு சீக்கிரமே தத்தெடுத்துக் கொண்டார்கள். ஒரு தடவை கோவையிலிருந்து கிளம்பும்போது நண்பர்கள் நகரத்தின் தலைசிறந்த கேக் என்று சொல்லி நான்கைந்தை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை அப்படியே கொண்டு போய் அந்தம்மாவிடம் கொடுத்தேன். குத்துக்காலிட்டு அமர்ந்து அந்த கேக்கை சோற்றுக் கவளத்தை உருட்டுவதுபோல உருண்டை பிடித்துச் சாப்பிட்டதைப் பார்த்த போது சப்பென்று யாரோ முகத்தில் அடித்தது போல இருந்தது. இன்னமும் கேக்கையே எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாத அப்பாவிகளாய் அவர்களைக் காலம் வைத்திருக்கிறதா?

அன்பும் அறமும் - 3

“ரெண்டு மூணு நாளா ஏதோ தட்டிக்கிட்டு இருந்தியே, அதைப் பண்ணலியா இப்ப?” என்பார் பெரியவர் போலியான கண்டிப்புக்குரலில். அக்கவுன்டன்சி பரீட்சைக்கு முதல் நாள் என் அப்பா இதேமாதிரியான குரலில்தான் கேட்டார். அந்தம்மா நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்கிறது. ரெண்டு நாள் சொந்த ஊர், ரெண்டு நாள் இங்கே எனக் காலம் தள்ளும். அந்தம்மா வந்தால் பெரியவருக்கும் எனக்கும் கொண்டாட்டம்.

அசைவச் சாப்பாடு கிடைக்கும். கருவாட்டைக் கொண்டு வந்து ஏற்கெனவே வைத்துப் பழகிய குழம்பில் போட்டால், அசைவக் குழம்பு தயார். மற்ற நாள்களில் பெரியவர் சமையல்தான். நாங்கள் சமைத்தாலும் விட மாட்டார். சமையலென்றால் ஏதோ ஒரு காயைப் போட்டுக் குழம்பு வைத்துச் சோறு, அவ்வளவுதான். கத்திரி, அவரை, சுரைக்காயைத் தவிர வேறெதையும் பார்த்ததில்லை. காலிஃபிளவர் வாங்கிக் கொண்டு வந்தபோது அதைச் சமைக்க அவர்களுக்குத் தெரியவில்லை. காடு கரைகளில் ஓசியாய்க் கிடைக்கும் மாம்பழங்களைக் கொண்டு வரும் அந்தம்மா.

இந்த இடத்தில்தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். கிராமங்களில் இருக்கும் வறுமைசூழ் மக்களுக்கு நாம் அநியாயம் செய்துகொண்டிருக்கிறோம். அதைப் பற்றி உரக்கப் பேச மறுக்கிறோம். அரிசிச் சாக்கைத் தைத்துப் போர்வை தயாரிக்கிறார்கள். எந்த பிராண்டு அரிசிச் சாக்கு அடுத்த குளிர்காலம் வரை தாங்கும் என்கிற முறைப்பட்ட ஒரு கணக்கே இருக்கிறது. காலம் கற்றுக்கொடுத்த கணக்கு அது. எளியவர்கள் மட்டுமே இப்படிப் போகிற போக்கில் எப்போதாவது கிடைக்கிற கணக்குகளைக் கப்பெனப் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஒருதடவை பழலோடு அடிக்கும் வண்டியிலிருந்து அடிபட்ட மாதுளம்பழத்தை எடுத்து வைத்திருந்தார். சென்னைப் பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் அவற்றைக் குப்பைத்தொட்டியில் மட்டுமே போடுவார்கள். பார்த்து பலமாகச் சத்தம் போட்டேன். வேறு பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து தருகிறேன் என்றேன். ``உன் சத்தியமா இனிமே சாப்பிட மாட்டேன்’’ எனச் சின்னப்பிள்ளை மாதிரி அவர் தலையில் அடித்துக்கொண்டார். ``நல்லா சொல்லு, புத்தி வர மாட்டேங்குது. கண்டதிலயும் வாய் வைக்கிற நாய்ப் பொழப்பாப் போயிருச்சு” என்று காலை நீட்டிக்கொண்டு வெற்றிலை போட்டபடி அந்தம்மா சொன்னது.

இவர்கள் மட்டுமல்ல இப்படி. கழித்துப் போட்ட பழங்களில், பிள்ளைகளுக்கு எடுக்கிறேன் என்று சொன்ன அக்காவை சத்தம் போட்டு, கூடைப் பழத்தை எடுக்கச் சொன்னேன்.

அவர்கள் படும் பாடுகளைச் சொல்வார்கள். நாள் முழுக்க ரயில்வே ட்ராக் பக்கத்தில் கார்களின் கண்ணாடிகளைத் தேடி, கைகளில் பழங்களை வைத்துக்கொண்டு விற்க ஓடுவார்கள். பல நேரங்களில் இறக்கப்படாத கார் கதவுகளில் அவர்கள் முகங்கள்தான் தெரியும். ஒருநாள் நின்று பார்த்தால் நாம் உச்சி வெயிலில் வதங்கிச் செத்துப்போய்விடுவோம். மிஞ்சிப்போனால் 250 ரூபாய் கிடைக்கும். அதற்கே காலையில் ஐந்து மணிக்கு ஏலம் எடுப்பதில் தொடங்கி வெயில் மங்குகிற வரை ஓட்டமும் நடையுமாய் இருக்க வேண்டும். ``ஓடியோடி கால் வலிக்குது தம்பி. மெட்ராஸில இருந்து சுர்ருன்னு பிடிக்கிற மாதிரி களிம்பு வாங்கிட்டு வந்தாத் தேவலை. பெரிய புண்ணியமாப்போகும்” என ஒருதடவை ரயில்வே கேட்டில் பழம் விற்கும் காமாட்சி அம்மா கால்களை அழுத்திவிட்டுக் கொண்டே சொன்ன காட்சியை எப்போதும் மறக்க முடியாது.

காமாட்சி அம்மாவின் கணவர் பெருங் குடிகாரர். மூன்று பெண் பிள்ளைகள். முதல் பெண் தற்கொலை செய்துகொண்டதால் அவருடைய பெண் குழந்தைகளையும் இந்த அம்மாதான் வளர்த்துக்கொண்டிருக்கிறார். ``பேத்தியும் என்னைத்தான் அம்மான்னு சொல்றா. கெடைக்கிற காசில இவளை இங்கிலீஷ் ஸ்கூல்ல சேத்துப் படிக்க வைக்கிறேன். இங்கிலீஸ் தெரிஞ்சா ப்ளேன்ல பறந்து போயி வேலை பார்ப்பா. நானும் காலாட்டிக்கிட்டே உக்காந்து சாப்பிடுவேன். அரசாங்கம் ஒழுங்கா இங்கிலீஷ் சொல்லித்தந்தா நான் எதுக்கு இப்படி வெயில்ல வதங்கி தனியார் ஸ்கூல்ல சேர்க்கப்போறேன்?. சிவனேன்னு அங்க கொண்டு போயி விட்டுட்டு வந்திருவேன்ல” என, காமாட்சி அம்மா அதற்குத் தெரிந்த விவரத்தில் சொன்னது நிச்சயம் யாருடைய காதுகளுக்கும் கேட்காது

நானும் சில நாடுகளில் எளிய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். ஓரளவிற்கு அங்குள்ள அரசுகள் அவர்களை மேம்படுத்தப் போராடுகின்றன. தைமூரில் ‘எங்கள் ஆட்களின் சம்பளம் இனி 140 டாலர்’ என அந்த நாட்டு அரசே முதலாளிகளுக்கு எஸ்.எம்.எஸ் செய்துவிடும். அவர்களுடைய ஊர்த் தலைவர்களுக்கும் அனுப்பிவிடும். அங்குள்ள தொழிலாளர்களை நசுக்க முடியாது. நசுக்கப் போகிறார்கள் என்கிற தகவல் வந்தாலே அந்த நாட்டு அரசாங்கம் முந்திக்கொண்டு வந்து அலுவலக வாசலில் உட்கார்ந்து கொள்ளும். பஞ்சப்பராரிகள் வாழ்கிற தேசமது என்று அதைக் குற்றம் சாட்டிக் கடந்து விடலாம். ஆனால், அந்த நாட்டு அதிபர் தரமில்லாத ஓர் உணவுப் பொருளைக்கூட என்னுடைய நாட்டிற்குள் நுழைய விட மாட்டேன் என மூன்றாண்டுகளுக்கு முன்பு சபதமே போட்டிருந்தார். `இந்த நாட்டிலிருந்து கோழி வந்தால்தான் இறக்குமதியே செய்வோம். அதற்கு இன்னின்ன சோதனைகளையெல்லாம் செய்து சான்றுக் கடிதம் தர வேண்டும்’ என உறுதியாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இங்கே நிலைமையைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?  `திறந்து வைத்திருக்கிறோம் குப்பைத் தொட்டியை, தூக்கி வந்து கொட்டு’ என அறிவிக்கப்படாத அறைகூவலே இருக்கிறது. சோற்றுக் கஷ்டத்தால் செத்தார்கள் என அங்கிருந்த காலகட்டத்தில் நான் ஒருநாள்கூட கேட்டதில்லை.

அன்பும் அறமும் - 3

இத்தகைய அனுபவங்கள் தந்த பின்னணியோடு இங்கிருக்கிற கிராமப்புற வறுமையை அருகில் இருந்து பார்க்கிறேன். இது நியாயமல்ல. குறைந்தபட்ச ஊதியத்தை அவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். வெந்ததையும் நொந்ததையும் அவர்கள் சாப்பிடுவதைக் கண்ணெதிரில் பார்க்கிறேன். கண்ணுக்குத் தட்டுப்படாமல் இன்னும் கோடிக்கணக்கான சிம்னி விளக்கொளிகள் மறைந்து கிடக்கின்றன. அரசியல் கணக்கீடுகளின் படி இந்த மாதிரியான நிலைமை பெரும்பான்மையாகக்கூட  இல்லாமல் இருக்கலாம். ஆனால், பசியென்று வரும்போது ஒற்றை சிம்னி விளக்கின் ஒளிகூட அணைந்து விடக்கூடாது என்பதுதானே அறம்?

என் மக்கள் என்கிற எளிய உணர்வுகூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? `கிராமங்களைப் போய்த் தரிசியுங்கள். அறிந்து கொள்ளுங்கள்’ என காந்தி ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது. எளிய மக்களின் துயரம் மிகவும் முக்கியமானது. நாலைந்து சட்டி பானைகள் இருக்கிற வீட்டில் ஒய்யாரமாக ஒரு கலர் டிவி உட்கார்ந்திருக்கிறது என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

இந்த வறுமைக்கிடையிலும் வாழ்வில் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்குகள் வியக்க வைக்கின்றன. ``உங்க பையன் மாதிரி தர்றேன்’’ எனச் சொன்னால் ஒழிய ஒரு பொருளை ஏற்க மறுக்கிறார்கள். 180 ரூபாய் கூலிக்காக 70 வயது மூதாட்டி காலை ஏழுமணி தொடங்கி மதியம் இரண்டு மணி வரை குனிந்து நிமிர்ந்து களை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒருநாள், வயதான அந்த அம்மா பேப்பர் பொட்டலமொன்றில் எதையோ எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு போனார். ``என்னது அது?’’ என்று கேட்டபோது, ‘`பேரனுக்கு எடுத்துட்டுப் போறேன்’’ என, சங்கடமாக எடுத்துக் காட்டினார். காலையில் அந்தப் பெரியம்மாவிற்கு சாப்பிடுவ தற்காக வாங்கிக் கொடுத்த ஆறு ரூபாய் மதிப்பிலான வடை அது. ஊதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தளவிற்கு இருப்பது நல்லதல்ல. அது நியாயமானதும் இல்லை. உடனடியாக இதைத்தான் முன்னிறுத்தி விவாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இத்தனை வருடங்கள் கழித்தும் கிராமப்புற வறுமை ஏன் தொடர்கிறது? உலகம் எல்லாவற்றையும் சுகித்து வாழ்வதற் காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறது.

ஒருதடவை பெரியவரும் அவர் மனைவியும் நாலைந்து நாள்களாக மறைந்து திரிந்து கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என்று விசாரித்தபோது அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டேன். கூட்டாஞ்சோறு செய்யத் திட்டமிடுகிறார்கள். பத்து ரூபாய்க்கு பீன்ஸ், ஏழு ரூபாய் விலையுள்ள சோயா பீன்ஸ் பொட்டலம், ஐந்து ரூபாய்க்குக் கேரட். இவற்றை இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். கடந்த பிறந்த நாளின்போது அங்கிருப்பதைத் தவிர்த்து வேறு இடத்திற்குக் கிளம்பி விட்டேன். அப்படிப் போனதற்கும் ஒரு காரணம் இருந்தது. என்னுடைய பிறந்தநாள் அன்றெனத் தெரிந்தால்,  அவர்களின் பொருளாதாரத் தகுதிக்கு மீறி, மெனக்கெடுவார்கள். அவர்களை வேறு எந்த வகையிலும் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காகவே நகர்ந்தேன். அவர்களுக்கும் அது தெரிந்தே இருந்தது. எப்ப வர்ற எனத் தொடர்ந்து தொலைபேசி செய்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நான் போனபோது கூட்டாஞ்சோறு வெந்துகொண்டிருந்தது.

- அறம் பேசுவோம்!