
தமிழ்ப்பிரபா, படம்: தீட்சித்
``என்னோட அன்பைக் கொடுக்கும்போது அது நிறைவா எங்கு போய்ச் சேரணும்னு ஒரு தேடல் எனக்குள் எப்பவும் இருக்கும்” என்று சொல்லும் வானதி, தேடிக் கண்டடைந்திருக்கும் இடம், பல சிறப்புக் குழந்தைகளின் இதயம்.
அக்குபஞ்சர் தொடர்பான படிப்பை முடித்துவிட்டுச் சென்ற வேலையில் திருப்தியே இல்லாமல் நாள்களைக் கடத்தியிருக்கிறார் வானதி. இந்தச் சூழலில் அக்குபஞ்சர் சிகிச்சையளிக்க ஒரு வீட்டுக்குச் சென்றபோது அங்கு பார்த்த காட்சி, வானதியின் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
``பெரியவங்க எல்லோரும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பத்து வயதுப் பையன் இருந்தான். சுவர்கிட்ட போயி தலையை வெச்சு முட்டிக்கிட்டிருந்தான். டங்கு டங்குன்னு சத்தம் கேட்டது. `ஐயோ, அங்க பாருங்க, பையன் எப்படி முட்டிக்கிறான்!’னு கத்தினேன். அவங்க ரொம்ப சாதாரணமா `அவன் அப்படித்தான், ஸ்பெஷல் சைல்டு’னு சொன்னாங்க. என்னாலே அதுக்குமேல அங்க இருக்க முடியலை. கிளம்பி நேரா வீட்டுக்கு வந்துட்டேன். ஆனாலும் என் காதுல அந்தச் சத்தம் மட்டும் டங்கு டங்குன்னு கேட்டுட்டே இருந்தது” என்று அந்தத் தருணத்தை நினைவுகூரும்போது வானதிக்குக் குரல் இடறுகிறது.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக சிறப்புக் குழந்தைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, இணையத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தார். சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே ஒரு படிப்பு இருப்பதைத் தெரிந்துகொண்டவுடன், செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சொந்த கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து `புனர்வாழ்வியல்’ எனச் சொல்லப்படும் கல்வியைக் கற்றார். ஒரு நிறுவனத்தைச் சார்ந்து மூன்று வருடங்கள் சிறப்புக் குழந்தைகளுடன் ஒன்றாக இருந்து அவர்களைப் பயிற்றுவித்தாலும், அந்தப் பணியில் திருப்தி இல்லை. ``குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் அந்தக் குழந்தைகளோடு நேரம் செலவிடணும். அவங்களைத் தொட்டு, அரவணைச்செல்லாம் பேசக் கூடாது. தெரபிங்கிற பேர்ல அந்தக் குழந்தைங்ககிட்ட 45 நிமிஷம் மட்டும்தான் செலவிடணும்னு நிறைய கட்டுப்பாடுகள். அதெல்லாம் பிடிக்காம வேலையை விட்டு நின்னுட்டேன்” என்கிற வானதி, தன் வீட்டுக்கு அருகிலேயே சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி, கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளித்துவருகிறார்.
விருதுநகர், திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைக்கு என்ன நடந்திருக்கிறது என்றுகூடத் தெரியாத பெற்றோர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தேடித் தேடிப் போய், பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் எனச் சொல்லிக்கொடுக்கிறார். பெற்றோர்கள் விருப்பப்பட்டால் தன் பயிற்சி நிலையத்துக்கே பிள்ளைகளை அழைத்துவந்து தன்னுடன் வைத்துப் பராமரிக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், யாரிடமும் இவ்வளவு வேண்டும் என்று எந்தத் தொகையும் வானதி வாங்குவதில்லை.
``நாம கொடுக்கிற அன்புக்கு இவ்வளவு விலைன்னு கேட்டு வாங்குறதைவிட அசிங்கம் வேற இல்லை. அவங்களா கொடுக்கிறதை வாங்கிப்பேன். அதுகூட இந்த கரன்ட் பில் மற்ற பராமரிப்புச் செலவுக்குத்தான். எனக்கு வருமானம்னு இப்போ ஏதும் இல்லை. ஆனா, இந்த உலகத்துலேயே மகிழ்ச்சியா இருக்கிறது நானாத்தான் இருக்கும்” என வானதி புன்னகைத்தபடியே சொல்வது வெறும் வார்த்தைகள் அல்ல; அவரின் வாழ்க்கை!