தொடர்கள்
Published:Updated:

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

சக்தி.தமிழ்ச்செல்வன், படங்கள்: க.பாலாஜி

ன்லைன் ஷாப்பிங்,  சூப்பர் மார்க்கெட், ஹோம் டெலிவரி  என `ஸ்வைப்பிங்’ பர்ச்சேஸுகள் பெருகிவிட்டபோதும்  வெள்ளிக்கிழமைகளில் சென்னை மக்கள் திரளாகக் கூடுகிறார்கள், `பல்லாவரம் சந்தை’யில். சந்தை என்பதே விற்பவரும் வாங்குபவர்களும் நேரடியாகப் பங்குகொள்வதுதான். இதற்கு சரியான உதாரணமாகக் காட்சியளிக்கிறது இந்தச் சந்தை.

சென்னை விமானநிலையத்திற்கு மிக அருகில் கிராமத்துத் திருவிழாப்போலக் காட்சியளிக்கிறது `பல்லாவரச் சந்தை.’ `பைக்கை இப்படி பார்க் பண்ணிட்டு உள்ளே போய் வேணும்கிறதை அள்ளிட்டுப் போங்க பாஸு!’ என்ற என்ட்ரி குரலைக் கடந்து நுழைந்தால்,  2 கி.மீ தொலைவில் நூற்றுக் கணக்கான கடைகள். பாரிஸ் கார்னர், கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை என எல்லா ஏரியா மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிற அத்தனையும் ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கிறார்கள். மரக்கன்றுகள், காய்கறிக் கடை, மளிகைக் கடை, ஸ்வீட் கடை எனத் தொடங்கி, உள்ளே போகப் போக நம்மை ஆச்சர்யப்படுத்தும் கடைகள் நிறைந்திருக்கின்றன.

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

ஒரு கடையில் தார்ப்பாய் விரித்து, உடைந்த செல்போன்கள், பழைய ரேடியோக்கள், கேட்காத ஹெட்போன்கள், சுக்குநூறாக உடைந்து கிடக்கும் சுவிட்ச் போர்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குவியலில், இரண்டு பேர் ஆர்வமாகச் சிலவற்றைத் தேர்வுசெய்து வாங்கிக் கொண்டிருந்தனர். ``இதை வாங்கிட்டுப் போய் என்ன பண்ணுவீங்க?’’ என அவர்களிடம் கேட்டதற்கு, ``ஸ்பேர் பார்ட்சுக்குத் தலைவா!” என்றபடி மொபைலைப் பிரித்து வீசிவிட்டு `சிப்’பை மட்டும் லாகவமாக எடுத்துப் போனார்கள்.

கொல்லிமலைப்  பட்டை, கிராம்பு என மினி டோரில் ஸ்பீக்கர் போட்டு அசத்திக்கொண்டிருந்தார் சேலத்திலிருந்து வந்திருந்தவர். குடையை மட்டுமே ஸ்டாண்டாக வைத்து உடைந்த லேண்ட்லைன் போன்கள், பழைய பாடல் கேஸட்டுகள், பழைய டார்ச்லைட்டுகள் வைத்திருந்தவர், ``2000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்!’’ எனச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. சுதந்திரத்துக்கு முன்னர் வரை புழக்கத்திலிருந்த நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பைனாகுலர், மணல்கடிகாரம் என வின்டேஜ் கலெக்‌ஷன்கள் நிறைந்து கிடந்தன குறிப்பிட்ட ஒரு பகுதியில்.

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

அந்த இடத்தில் இருந்த ஐந்து கடைகள் முழுக்க விதவிதமான வின்டேஜ் கலெக்‌ஷன்கள் இருந்தன. ராஜாக்கள் காலத்து மதுக்கோப்பைகள்,  அழகு வேலைப்பாடுகள் நிறைந்த சிறு பெட்டிகள், பித்தளை செஸ் காயின்கள்கொண்ட செஸ் போர்டு என விற்பனைக்கு  வைத்திருந்தனர். ``இதெல்லாம் வாங்குனா கொஞ்ச நாள்ல உடைஞ்சிடாதா?’’ என்றதற்கு,  சென்னையில் இருக்கிற தங்கள் கடையின் விசிட்டிங் கார்ட்டை நீட்டினார் கடையில் இருந்தவர். அந்தச் சந்தையில் கடை வைத்திருந்தவர்கள் சிலர், சென்னையின் வேறு  இடங்களில் பெரிய கடை வைத்திருப்பவர்கள். மக்கள் அதிக அளவில் வருவதால் மறக்காமல் இங்கும் ஆஜராகிவிடுகிறார்கள். கர்நாடகாவிலிருந்து லாரியில் சோபா, டைனிங் டேபிள் விற்பனைக்காக வந்திருந்தவர் வாராவாரம் மறக்காமல் வந்துவிடுவாராம்.

``இந்தச் சந்தையில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’ என்று பொருள்கள் வாங்க வந்திருந்த ஒருவரிடம் கேட்டோம்.

``புதுசு, செக்கெண்ட்ஸ்னு ரெண்டு டைப்புலயும் கிடைக்கும். பேரம் பேசி விலை குறைச்சு வாங்கலாம். முக்கியமா, பெரிய பெரிய கடைகள்ல விலை கேட்கவே தயக்கமா இருக்கும். கவருக்கெல்லாம் விலை போடுவாங்க. இங்கே அப்படி இல்லை. கூடக்குறைய பேசி வாங்கிக்கலாம்’’ என்றவர் `கோழிக் கடையில்’ பேரம் பேச ஆயத்தமானார்.

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

நாட்டுக் கோழி, பிராய்லர் கோழி என விற்பனையாகிக்கொண்டிருந்த இடத்தில் புதிதாக இன்னொரு வகையான கோழியும் வைத்திருந்தார்கள். `` இது `கடக்நாத் கருங்கோழி’ இந்தக் கோழியின் கறி, கறுப்பு நிறத்தில் சாப்பிட சூப்பரா இருக்கும்’’ என்றார். கூடவே `இனப்பெருக்க முட்டை’ என இவ்வகைக் கோழியின் முட்டைகளையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். இன்குபெட்டர், கோழியை வைத்துப் பொரிக்கவைப்பதற்கு ஏதுவான முட்டையான அதை, மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

ஒருபுறம், ``இது கறிக்கு இல்லைங்க. சண்டைக்கு!’’ எனச் சண்டைச் சேவல்களின் விற்பனை படுஜோராக நடந்துகொண்டிருந்தது. கோழியின் கால்களைப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்த ஒருவர் ``மனுஷங்களுக்கு மூஞ்சி மாதிரி, சண்டைச் சேவல்களுக்குக் காலுங்கதான் அடையாளம்’’ என்று டிப்ஸ் கொடுத்தார் ஒரு கே.பி.கருப்பு. மற்றொருபுறம் காடையும், வாத்தும் அவற்றின் முட்டைகளும் விற்பனைக்குக் கிடைத்தன.

கிளி, லவ் பேர்ட்ஸ், முயலுடன் சேர்த்து வெள்ளை எலியையும் அன்போடு வாங்கிக்கொண்டிருந்தனர் செல்லப்பிராணி பிரியர்கள். கொஞ்சம் முயல், கொஞ்சம் எலியின் சாயல்கொண்ட `கினிபிக்’கைப் பலர் வாங்கிக்கொண்டிருந்தனர்.

கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஆங்காங்கே கரும்பு ஜூஸ் கடை, டீக்கடை, சாப்பாட்டுக் கடை வைத்திருந்தார்கள். அதன் வியாபாரமும் படுசூடாக நடந்துகொண்டிருந்தது. பேன்ட் ஷர்ட்டுகளை மலைபோலக் குவித்து வைத்து வடஇந்திய இளைஞர்கள் சிலர், `கம்மி, கம்மி விலேய் நம்மகிட்ட...’ என, கிழிந்துபோகாத பழைய சட்டை பேன்ட்டுகளை விற்றுக்கொண்டிருந்தனர்.

செகண்ட்-ஹேண்டு  டிவிக்களை  அடுக்கிவைத்து அதன்மேல் சாக்பீஸில் விலை எழுதிவைத்திருந்தனர். செக்கிங்க்காகக் கடையில் டிவிடி-யில் ஓடிக்கொண்டிருந்த படத்தை சிறுவர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்குக் கொஞ்சம் தள்ளி, தெலுங்கும் தமிழும் கலந்த பேச்சுடன் ஒரு குடும்பம் கத்தி, அரிவாள், கடப்பாரை போன்றவற்றை விற்பனை செய்துகொண்டிருந்தது.  உடைந்த ஜன்னல் சட்டங்களை விற்பனைக்காக ஒருவர் கொண்டுவந்திருந்தார்.

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

அருகில் வெற்றிக்கோப்பை வைத்திருந்தார் ஒரு கடைக்காரர். ``இது எதற்கு?’’ எனக் கேட்டால், ``காலையில இருந்து அஞ்சு கப் வித்திருக்கு. இது செகண்ட் பிரைஸுக்கான கப், ஃபர்ஸ்ட் பிரைஸ் கப் உள்ளே இருக்கு. அது இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கும்” என்றார்.

இன்றைய Generation Z  தலைமுறை பார்த்திராத `பேஜர்’ என்ற வாட்ஸ்அப்-பின் வின்டேஜ் வெர்ஷன் அங்கு ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்தனர். அந்தக் கடையில் பழைய ஃபிலிம் ரோல் கேமரா, பழுதான பழைய டிஜிட்டல் கேமராக்கள் விற்பனைக்கு இருந்தன. சற்றுத் தள்ளி `மினி புதுப்பேட்டை’ போலக் காட்சியளித்தது ஒரு கடை. அங்கு பைக் டயர், சின்னச் சின்ன உதிரிபாகங்கள் விற்பனைக்கு இருந்தன. முன்பகுதி மட்டும் இருக்கும் சேதமான ஸ்கூட்டர், பழைய கம்ப்ரஸர் மோட்டார்களைக் குவித்துவைத்திருந்தார். அதற்கு அருகே இருந்த கடையில் கல்யாணமான புதுத்தம்பதிக்காக சீர்வரிசை பீரோ வாங்க பேரம் நடந்துகொண்டிருந்தது. பீரோ, சூட்கேஸ் விற்றுக்கொண்டிருந்த அந்தக் கடைக்காரர், ``எல்லாமே புதுசு! வெளிக் கடையைவிட நம்மகிட்ட ஆயிரம் ரூவா கம்மி!’’ என பிஸியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அந்தச் சந்தை முழுக்கவே சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, நடுத்தர ஏழைக் குடும்பத்தினர் கைகளில் பையுடன் பொருள்களைத் தேர்வுசெய்துகொண்டிருந்தார்கள். கம்மியான விலையில் தங்களுக்கேற்ப  பேரம் பேசி வாங்க முடியும் என்பதால், தங்களுக்கான இடமாக இந்தச் சந்தையைப் பார்க்கின்றனர். கடை போட்டிருப்பவர்களும் பெரும்பாலானோர் பாரிஸ் கார்னரில், ரெங்கநாதன் தெருவில் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் சின்னச் சின்னக் கடைகள் வைத்திருப்பவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் நடக்கும் இந்தச் சந்தைக்காக அன்று ஒருநாள் மட்டும் இங்கு வருபவர்கள்.

ஒரு நாள் ஓரிடம்! - பல்லாவரம் சந்தை

காய்கறிக் கடைக்காரர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலையில் வருகிறார்கள். மற்றவர்கள், முதல் நாள் இரவே தங்கள் பொருள்களுடன் களமிறங்கிவிடுகின்றனர். தங்களுக்கான இடத்தை ஒதுக்கிக் கடையைப் போட்டு விற்பனையை ஆரம்பிக்கிறார்கள். `ஸ்பேர் பார்ட்ஸ்’ஸுக்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை வீட்டுப் பயன்பாட்டுக்காக யாரேனும் கேட்கும்போது பொருளின் உண்மைத் தரத்தைக் கூறி வேறு கடைக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

அவ்வளவு எளிய மனிதர்கள் கூடும் அந்தச் சந்தையில் மனிதத்தின் சாரம் இன்றும் குறையாமல் இருப்பதற்கான ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த, சந்தையின்  ஒரு பகுதியில் இடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த இடத்தில் பிற்பகலில் தொழுகை நடக்கும்போதும் அமைதியாக வியாபாரம் நடக்கிறது. தொழுகை முடிந்த பிறகு மீண்டும் அந்த இடம் பழைய பரபரப்புக்குத் திரும்பிவிடுகிறது. அந்தச் சந்தையில் பல வருடங்களாகக் கடை போட்டுவரும் பெரியவர் ஒருவரிடம் சந்தை பற்றிக் கேட்டோம். ``பத்து வருஷத்துக்குமேல இங்கே கடை போடுறேன். சில சமயம் நல்லா வியாபாரம் நடக்கும். சில சமயம் பெருசா ஒண்ணும் கிடைக்காது. ஆனாலும் இங்கே வாராவாரம் வந்திருவேன். இங்கே வந்தா, என் சொந்த ஊருக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு நிம்மதி’’ என, கண்கலங்கியபடி சிரித்தார் அந்தப் பெரியவர்.

சென்னை மெரினா பீச் எப்படி ஞாயிற்றுக்கிழமைகளுக்கான ஓர் இடமோ, அதுபோல `பல்லாவரம் சந்தை’ வெள்ளிக்கிழமைகளுக்கானது!