அரசியல்
Published:Updated:

“மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை!”

“மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை!”

“மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை!”

‘‘நம் பேராசையாலும் முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். நிச்சயம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமி தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டும். மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை எவ்வளவு கடின மானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்’’ என்று சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங் இன்று இல்லை.

நமக்குள் உரையாடல் எளிதில் சாத்தியமாகிறது. ஆனால், ‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும்; வாய் பேச முடியாது, எழுதிக் காட்ட முடியாது, சைகை மூலமும் கூற முடியாது’ என்றால் எப்படி? ஆனால், இந்த மனிதர் எதையுமே முடியாது என்று கூறியதில்லை. ‘எல்லா முடியாதுகளையும் முடியும்’ என்று மாற்றிக்காட்டிய, நவீன கால ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவர்.

“மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை!”

1942 ஜனவரி 8-ம் தேதி, கலீலியோவின் 300-வது பிறந்த நாள் அன்றுதான் ஹாக்கிங் பிறந்தார். வளரும்போதே கேள்விக்கணைகளால் ஆசிரியரைத் துளைத்தெடுக்கும் மாணவன். இதன் உச்சம், ‘உலகம் எப்படித் தோன்றியிருக்கும்’ என்பது வரை நீள்கிறது. 1960-ம் ஆண்டு ALS எனப்படும் ‘Amyotrophic Lateral Sclerosis’ என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளை, தானே உருவாக்கி அவற்றை ஈடு செய்தார். ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்டன. கடைசியில் குரலும் போய்விட, ‘ஈக்வலைஸர்’ என்ற கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் உதவியுடன் கன்னத்தசைகளின் அசைவுகள்மூலம், கணினிக் குரலில் பேசிவந்தார்.

இவர் எழுதிய ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ (A Brief Histroy of Time) என்ற புத்தகம் உலகின் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. டைம் மிஷின், பிளாக் ஹோல், பிக்பேங் தியரி எனப் பல ஆராய்ச்சிகள் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர். பொதுவாக, அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்குச் சமூகச் சிந்தனை இருக்காது என்பார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் இந்தக் கூற்றுக்கும் அப்பாற்பட்டவர். இஸ்ரேலில் கலந்துகொள்ள வேண்டிய அறிவியல் கூட்டத்தை, பாலஸ்தீனியர்களுக்கு நடந்த அநீதிகளுக்காகப் புறக்கணித்தார். வியட்நாம் போர், ஈராக் போர் போன்ற பல அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்தவர் அவர். பேடன்ட், காப்பிரைட் யுகத்தில், ‘‘என் ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றிப் போய்ச் சேர வேண்டும்’’ என்ற பண்பாளர்.

எல்லாப் பரிசுகளும் அவரைத் தேடி வந்தாலும், கடைசிவரை நோபல் பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படாதது ஹாக்கிங்கின் மாணவர்களுக்குப் பெரும் வருத்தமே! ‘‘நான் மரணத்தைப் பார்த்து பயப்படவில்லை. ஆனால், இறப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என நினைக்கிறேன். நான் இன்னும் சில விஷயங்களை முதலாவதாகச் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங், ஐன்ஸ்டீன் பிறந்த நாளில், மறைந்ததும் ஓர் அறிவியல் ஆச்சர்யமே!

- ஸ்ரீராம்