
ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருடீகிளட்டரிங் எழுத்து வடிவம்: சாஹா - ஓவியம்: ரமணன்
‘பசி தீர்ந்த பிறகு நீ சாப்பிடும் ஒவ்வோர் இட்லியும் இன்னொருவருடையது’ - இது ‘கத்தி’ படத்தில் நடிகர் விஜய் பேசிய கம்யூனிச வசனம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் எல்லா உடைமைகளுக்குமே இது பொருந்திப்போவதை உணரலாம். ஆனால், ஓரளவுக்கு மேல் உணவு திகட்டிப் போவதைப் போல உடைமைகள் நமக்குத் திகட்டுவதில்லை என்பதுதான் உண்மை.

ஓவராகக் குவிந்துவிடும் உடைகள்!
சில வருடங்களுக்கு முன்பு வரை விசேஷ தினங்களுக்கு மட்டும் புத்தாடை வாங்கிக்கொண்டிருந்த நாம், இன்று நினைத்த போதெல்லாம் வாங்குகிறோம். சின்னச் சின்ன கொண்டாட்டங்களுக்குக்கூடப் புது உடை அணிகிறோம். வீட்டிலுள்ள எல்லோருக்கும் தேவைக்கு அதிகமான உடைகள் சேர்ந்து போகின்றன. கடைகளுக்குப் போய்தான் உடைகள் வாங்க வேண்டும் என்றில்லாமல் கையடக்க மொபைலிலேயே வாங்கும் வசதிகள் வந்துவிட்டதும் துணிகள் சேர இன்னொரு காரணம். வாங்கிக் குவிப்பவற்றில் உண்மையிலேயே உபயோகப்படுபவை எத்தனை என்பது பெரிய கேள்வி.
துணிகளைப் பிரித்துத் தேவையானவற்றை யும் தேவையற்றதையும் இனம்காண்பது பலருக்கும் ஆயாசமான வேலை. வீட்டிலுள்ள அனைத்து நபர்களின் துணிகளையும் மொத்தமாக வாரிக் குவித்து வைத்துக் கொண்டு, வடிகட்டுகிறேன் பேர்வழி என உட்கார்ந்தால் நடக்காது. ஒவ்வொருவரின் துணிகளாகக் கை வைப்பதுதான் சரியான முறை. முதலில் பெண்களின் துணிகளை எடுக்கலாம். அவர்களிடம்தான் அதிக துணிகள் இருக்கும். பீரோ, அலமாரி, பெட்டி என எல்லா இடங்களிலும் உள்ள துணிகளை எடுத்து மொத்தமாக வைத்துக்கொள்ளவும். மலை போன்ற அந்தக் குவியலில் கிழிந்தவை, சாயம் போனவை, கறை படிந்தவை, அளவு மாறிப் போனவை போன்றவற்றை முதலில் பிரித்து அவற்றைத் தேவையற்றவை என ஒதுக்கவும்.
அடுத்து விசேஷங்களுக்கும் சிறப்பு நிகழ்வுகளுக்கும் அணியக்கூடிய உடைகளைத் தனியே பிரிக்கவும். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, ‘இன்றும் இந்த உடை ஃபேஷனில் இருக்கிறதா?’, ‘நமக்கு அளவு சரியாக இருக்கிறதா’ என அணிந்து பார்ப்பது அவசியம். திருப்தியில்லை என உணர்ந்தால், மீண்டும் அதை பீரோவுக்குள் அல்லது அலமாரிக்குள் அடுக்க வேண்டாம். அந்த உடையை அணிகிறபோது சந்தோஷமாக உணர்கிறீர்கள் என்றால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையா... தேவையிருக்கும் யாருக்காவது கொடுத்துவிடலாம்.

சில உடைகளைத் தனியே வைத்திருப்போம். `இரண்டு கிலோ குறைந்ததும் அணியலாம்... ஐந்து கிலோ குறைந்ததும் அழகாக இருக்கும்’ என்றெல்லாம் பத்திரப்படுத்தியிருப்போம். அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து பார்த்து உங்களுக்குப் பொருந்தினால் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்சம் எடை குறைந்த பிறகுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றினால் வைத்துக்கொள்ளாதீர்கள். எடையைக் குறைத்ததும் புது உடைகளையே வாங்கி அதைக் கொண்டாடலாம். கொஞ்சம் டைட் செய்தால் அல்லது ஒரு தையலைப் பிரித்துவிட்டால் மறுபடி உபயோகிக்கலாம் என்கிற மாதிரியான உடைகளைத் தனியே வையுங்கள்.
இப்படி நீங்கள் பிரித்து எடுத்த துணிகளில் தேவையானவற்றை மட்டும் எடுத்து உள்ளே வைத்துவிடுங்கள். வார்ட்ரோபில் வைப்பதற்கு முன் இந்தப் பகுப்பு வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு நீங்களே ஓர் உறுதிமொழி மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் வேலை நடக்கும்.
உள்ளாடை... தேவையற்றவற்றைச் சேர்த்து வைக்காதீர்கள்!
ஒரே உள்ளாடையை வருடக்கணக்கில் உபயோகிக்கக் கூடாது என்பதை முதலில் கவனத்தில்கொள்ளவும். அது சுகாதாரக் கேடு. சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும். உள்ளாடைகளுக்கென ஓர் ஆயுட்காலம் உண்டு. அதற்குள் பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போட்டுவிடுங்கள்.
தேவையற்ற உள்ளாடைகளைச் சேர்த்து வைக்காதீர்கள். ஒரு பெண்ணுக்குச் சராசரியாக ஐந்து முதல் எட்டு செட் உள்ளாடைகள் போதுமானவை. புதிதாக வாங்கும்போதும், பழையதைத் தூக்கிப்போடும்போது அதற்கு மாற்றாக எடுத்துப் பயன்படுத்தினால் இந்த எண்ணிக்கையை மெயின்டெயின் செய்ய லாம். இதே முறையை உள்ளே அணிகிற ஸ்லிப்ஸ், சாக்ஸ் போன்றவற்றுக்கும் பின்பற்றலாம்.
ஹேண்ட்பேக்... மூன்று போதுமே!
பெண்களுக்கு ஹேண்ட்பேகுகள்மீது தீராக்காதல் உண்டு. அணிகிற உடைக்கு மேட்ச்சாக உபயோகிக்கிற அளவுக்கு ஹேண்ட்பேக் பிரியர்கள் இருக்கிறார்கள். தையல் போனது, ஜிப் போனதையெல்லாம் தயவு பார்க்காமல் அப்புறப்படுத்திவிடுங்கள்.
வேலைக்குச் செல்கிற பெண்ணுக்கு சராசரியாக அலுவலகத்துக்கு ஒன்று, பயணத்துக்கு ஒன்று, ஃபங்ஷனுக்கு ஒன்று என மூன்று ஹேண்ட் பேகுகள் போதும். அதிக எண்ணிக்கையில் உங்களிடம் ஹேண்ட்பேகுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு வைத்தால் இடத்தை அடைக்காமலிருக்கும்.
துப்பட்டா... அட்டைப்பெட்டியில் அடுக்குங்கள்!
காலையில் வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும்போது துப்பட்டாக்களைத் தேடும் டாஸ்க் கொடுமையானது. பெரும்பாலான துப்பட்டாக்கள், வழுக்கும் மெட்டீரியல்களாக இருப்பதால், அடுக்கிவைத்தாலும் சரிந்து விழுந்து கலைந்து போகும். அவற்றை ஓர் அட்டைப் பெட்டியில் அடுக்கி அலமாரியில் வைத்தால் இந்த அவதியைத் தவிர்க்கலாம். உள்ளாடைகள் மற்றும் சாக்ஸுக்கும் இப்படிச் செய்யலாம்.
கிட்ஸ் டிரஸ்... சரியான அளவே சிறப்பு!
குழந்தைகளுக்கான உடைகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அவர்கள் வேகமாக வளர்கிறார்கள் என்பதால் அவர்களின் உடைகள் சீக்கிரமே அளவு மாறிப்போகும். அளவு சரியில்லாதவற்றைத் தேவை இருப்போருக்குக் கொடுக்கலாம். சிலர் வாங்கும்போதே ஒன்றிரண்டு சைஸ் பெரியதாக வாங்குவார்கள். அந்தத் துணிகள் பழையதாகும்வரை குழந்தைகள் அவற்றை லூஸாகவே அணிந்திருப்பார்கள். அவர்களுக்குச் சரியாகப் பொருந்தும்போது துணி பழையதாகி, கிழிந்து போயிருக்கும். எனவே, சரியான அளவு உடைகளையே வாங்குங்கள். சரியான அளவுள்ள உடை களில் குழந்தைகள் பார்க்கவும் அழகாக இருப்பார்கள்.
வார்ட்ரோப், நகைகள் பராமரிப்பு!
வார்ட்ரோப்பை செட் செய்கிறபோது கூடியவரையில் துணிகளைத் தொங்க விடாமல் வைப்பது சிறந்தது. தொங்கவிட்டால் இடம் அடைபட்டது போலத் தோன்றும். மடித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைப்பதே சரியானது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு எட்டு டவல்கள் போதுமானவை. உபயோகிக்க நான்கும், பத்திரப்படுத்த நான்கும் போதும். அதற்கு மேலுள்ள டவல்களைத் தனியே எடுத்து வையுங்கள். விருந்தாளிகள் வரும்போது எடுத்துக்கொடுக்கவும் வசதியாக இருக்கும். இது கைக்குட்டைகள், பெட்ஷீட், மிதியடி, திரைச்சீலை, டைனிங் டேபிள் உறை என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
செயற்கை நகைகள், ஹேர் பேண்டுகள், பொட்டு போன்றவற்றையும் தேவையானவை, தேவையற்றவை எனப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். சின்னச் சின்ன கப்புகளில் போட்டு, டிராயரில் வைத்தாலும் தேவைக்கேற்ப உபயோகிக்க எளிதாக இருக்கும். ஆபரணங்கள் வாங்கும்போது ஒவ்வோர் உடைக்கும் ஒன்று என வாங்க வேண்டியதில்லை. ஒரே கலரில் உள்ளவற்றுக்குப் பொதுவாகப் பொருந்தும்படி அளவாக வாங்கினால் போதுமானது. உடைகள் பழையதாகி உபயோகிக்க முடியாமல் போகும்போது தேவைக்கு அதிகமாக வாங்கிய ஆபரணங்கள் பயனற்றுப் போவதையும் இதன்மூலம் தவிர்க்கலாம்.
துணிகளையும் உடைமைகளையும் திட்டமிடுவது என்பது வருடத்தில் ஒருநாள் செய்கிற வேலையாக இல்லாமல், வாரம் ஒருமுறையோ, மாதம் இருமுறையோ செய்யப்படுகிற தொடர் வேலையாக மாற வேண்டும். அதை வீட்டிலுள்ள எல்லோருக்கும் பழக்கப்படுத்த வேண்டும்.
(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)