கடந்த சில நாள்களாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது #metoo . ஊடகத்துறை, சினிமா துறை, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அரசு இது குறித்து ஏதும் கருத்து தெரிவிக்காது இருந்தது.
தற்போது இது குறித்துப் பேசியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #metoo இயக்கத்தின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய நால்வர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விசாரணைகள் யாவும் வெளிப்படையாக மக்கள் பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் `` சினிமா, அரசியல், பெரும் நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் செய்வது வழக்கமாகிவிட்டது. பயம் காரணமாகவும், தான் கிண்டலடிக்கப்படுவோம் என்ற எண்ணத்திலும் அவர்களைப் பற்றிய மதிப்பீடு குறையும் என்று நினைத்தும் பெண்கள் இது பற்றி பேசுவதில்லை. ஆனால், பெண்கள் இப்போது இது குறித்துப் பேச ஆரம்பித்திருக்கும் நிலையில், நாம் அத்தகைய குற்றச்சாட்டுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.