Published:Updated:

அன்பும் அறமும் - 5

அன்பும் அறமும் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 5

சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

வியாபார மந்திரம்!

எல்லைகள் கடந்து இன்னொரு மூலையில் இருந்துகொண்டு பாடம் கற்றுத் தருகிற மனிதர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அப்படி ரமலோவ் என்கிற மனிதர் எனக்குச் சொல்லித்தந்த மந்திரமொன்று எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் பொருந்திப்போகும். ‘ரமலோவ்’ என்றால் உள்ளூர் மொழியில் உயர்ந்த சிகரம் என்று பொருள். அவர் சொன்னது என்ன என்பது குறித்துக் கடைசியில் சொல்கிறேன். கிழக்குத் தைமூர் என்கிற குட்டியூண்டு நாட்டில் வியாபாரம் செய்யப் போயிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளர் தைவான்காரர். மங்கோலிய வட்ட முகத்தில் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டே பிடிக்க முடியாது. ஏதாவது வியாபாரம் பேசப் போனால், இடுங்கிய கண்களை மேலும் சுருக்கிக்கொண்டு உற்றுப் பார்ப்பார். பேசத் தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய லேண்ட்லைனைக்கூட எடுத்துக் கீழே வைத்துவிடுவார். தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தைகூட வியாபாரத்தைத் தாண்டிப் பேச மாட்டார்.

சிலநேரங்களில் இரவு விருந்துக்கு அவரை அழைக்கும்போது மதுவருந்திய சமயங்களில்கூட நிலைதவறி அவர் நடந்துகொண்டதைப் பார்த்ததில்லை. சாப்பிட்டு முடித்ததுமே, ‘என் பங்கு எவ்வளவு?’ என, பாக்கெட்டில் கையை நுழைப்பார். வேண்டாம் என்று மறுத்தால், ‘‘அடுத்த தடவை என்னைத் தர விட்டால்தான் விருந்துக்கே வருவேன்” என்பார். “எல்லோருமே உணவு மேஜையில் பணத்தைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை உலகெங்கும் இருக்கிறது. இந்தியர்கள் மட்டும் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்” என்பார். ஒருமுறை அவர் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு விஷயத்தை அழுத்தமாகக் குறிப்பிட்டார். “எல்லோரையும் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது தவறு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் பார்த்தவரையில் சொல்கிறேன். இந்தியர்கள் வியாபாரத்தில் நெளிவுசுளிவு இல்லாதவர்களாக இருக்கிறீர்கள். பெரும்பாலும் ஊதாரிகளாக இருக்கிறீர்கள். வியாபாரத்தில் தேவையில்லாமல் வார்த்தைகளை விசிறியடிக்கிறீர்கள். இன்னமும் வியாபாரப் பொதுமொழியை நீங்கள் பழகவில்லை. எடுத்த எடுப்பிலேயே எல்லோருடனும் உறவினர்களாக ஆவதற்கு முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எப்படி என் உறவினராக முடியும்? பேச வந்ததை விட்டுவிட்டு, வேறு எதையெதையோ சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். அவர் அதைச் சொன்னபோது என் இயல்பை மீறிக் கோபம் எனக்கு விடைத்துக்கொண்டு வந்தது.

அன்பும் அறமும் - 5

ஆனால், ஆற அமர யோசித்துப் பார்த்தால், அவர் சொன்னது சில சந்தர்ப்பங்களில் உண்மையென்று தெரிந்தது. இந்தியர்கள் வியாபாரம் செய்யப் போன இடத்தில் நிலைகொள்ள முடியாமல் குடிக்கிறார்கள். குடித்துவிட்டு, ‘எங்கூர்ல நாங்கள்லாம் யார் தெரியுமா?’ என சம்பந்தமேயில்லாத  ஊர்க்கதை, உலகக் கதைகளைச் சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள் என்பதை என் சொந்த அனுபவத் திலேயே நிறைய பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாசூக்கைத் தொலைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன். சில ஆண்டு களுக்கு முன்பு வெற்றி பெற்ற சினிமா இயக்குநர் ஒருவர், தான் குடிப்பதை விட்டதற்குக் காரணமான சம்பவத்தைப் பற்றிச் சொன்னார்.

அவருடைய முதல் படத்தைத் தயாரிக்கவிருந்த தயாரிப்பாளர் நட்சத்திர விடுதியொன்றில் நடந்த பார்ட்டிக்கு இவரையும் அழைத்துப் போயிருக்கிறார். போன இடத்தில் இயக்குநர் மூச்சு முட்டக்  குடித்து விட்டு அங்கிருந்தவர்களிடம் தேவையில்லாமல் பேச்சு வளர்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எல்லோரும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவருடைய செய்கைகள் அத்துமீறி விட்டன. மறுநாள் அந்த இயக்குநரை அழைத்த தயாரிப்பாளர், “பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்கிற இங்கிதமே தெரியாத உன்னிடம் பணத்தைக் கொடுத்துப் படத்தை எடுக்கச் சொன்னால், இப்படித்தான் செய்வாய். கோடிக்கணக்கான பணத்தை ஒருத்தனை நம்பி முதலீடு செய்யும்போது, அவன் சரியான வனா என்பதைத் தீர்மானிக்க அவனுடைய செய்கைகள்தான் உதவும்” என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாராம். “அன்றிலிருந்து நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன்” என்றார் அந்த இயக்குநர் என்னிடம்.

எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவனுக்கும் இதே மாதிரி ஓர் அனுபவம் வாய்த்திருக்கிறது. சென்னையில் மிகப்பெரிய கிளப் அது. உள்ளூரில் உள்ள அத்தனை முக்கிய வியாபாரத் தலைகளும் வந்து போகும் இடம். நகரின் முக்கிய வியாபார கேந்திரம் ஒன்றின் உரிமையாளர் அங்கு அவனுக்குப் பழக்கமாகிவிட்டார். ஒருகட்டத்தில் அவனைத் தன்னுடைய தம்பி மாதிரி என்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டான். அவன் தோள்மீது கைபோட்டபடி எல்லோரிடமும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவாராம். அவன் ஆரம்பிக்கப்போகும் தொழில் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் முதலீடு போடுவதற்கும் உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஒருநாள் மிதமான குடிபோதையில் நண்பன் இருந்த போது, அவனுக்கு வாக்குத் தந்த முதலீட்டாளர் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பின்புறமாகப் போய் நின்று, தோளில் கைபோடும் தோரணையில் நாற்காலியைக் சுற்றிக் கைகளைப் போட்டுக் கொண்டு, கொஞ்சம் நக்கல் தொனிக்கிற குரலில், “என்னண்ணே இன்னைக்கு சீக்கிரமே மூணாவது ரவுண்டுக்குப் போய்ட்டீங்க போல” என்று சொல்லியிருக்கிறான்.

“கைய எடுங்க தம்பி. நான் உங்க பார்ட்னர் கிடையாது. முதலீட்டாளன். முதல்ல முதலீட்டாளரிடம் எப்படிப் பேசுவது, நடந்து கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டு வியாபாரம் பண்ண வாங்க” என நாகரிகமாகச் சொல்லிவிட்டு, அதற்கடுத்து அவன் முகத்திலேயே விழிக்கவில்லை அவர்.  வியாபாரத்தில் எதைக்காட்டிலும் முக்கியமானது, ஒவ்வொருவரின் எல்லைகளைப் புரிந்துகொள்வது.

இவர்களிடம் திட்டங்கள் இருக்கின்றன. நோக்கம்கூட மிகச் சரியாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்தும் இடங்களில் இது மாதிரித் தோற்றுப்போகிறார்கள். முளை விடுவதற்கு முன்பே, இதன் காரணமாகவே பயிர்கள் பல கருகிப்போய்விடுகின்றன. இவற்றையெல்லாம் நகரங்களில் சொல்லித் தருவதற்குப் பள்ளிகள் பல இருக்கின்றன. ஆனால், கரணம் போட்டு மேலேறுகிறவர்களுக்கு இவற்றைக் கற்றுத் தர யார் இருக்கிறார்கள்?

தம்பியொருவனும் இன்னொரு தம்பியொருவனும் இணைந்து தொழில் ஒன்றைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவரிடம் திட்டமும் இன்னொருவரிடம் அதைச் செயல்படுத்து வதற்கான பணமும் இருந்தன. இத்தனைக்கும் அவர்கள் பழக ஆரம்பித்துப் பத்து நாள்கள்தான் ஆகியிருக்கும். இந்தத் தொழிலைத் தொடங்குவதன் காரணமாகத்தான் அவர்கள் இருவரின் சந்திப்பே நடந்திருக்கிறது. அந்தத் தொழிலுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. ஒழுங்காக இணைந்து செயல்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இருவரும் மிகப்பெரிய இடத்தை அடைந்து விடுவார்கள் என்பதை அவர்களிடம் எல்லோரும் சொல்லவும் செய்தார்கள். ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது கவனித் திருக்கிறார் நண்பர் ஒருவர். “என்ன மச்சான் என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என, பத்து நாள் பழக்கத்திலேயே ஒருமைக்கு மாறியிருந்தார்கள். அது துறுத்தலாக இருக்கவே, “இருவரும் நண்பர்கள் இல்லை. தொழிலில் நண்பர்களாக இருக்க முடியாது. உன்னுடைய தொழில் கூட்டாளியிடம் இப்படி ஒருமையில் பேசுவது சரியில்லை. இப்படிப் போனால் ஒருநாள் அடித்துக்கொள்வீர்கள்” என விவரமான அந்த நண்பர் அறிவுரை சொன்னார். அவர் சொன்ன மாதிரிதான் நடந்தது. ஒருநாள் அவசரத் தொலைபேசி அழைப்பை ஒருத்தர் மேற்கொண்டபோது, இன்னொருத்தர் எடுத்த எடுப்பிலேயே அசிங்கமான வார்த்தை ஒன்றைச் சொல்லிவிட்டு, ‘என்ன ...க்கு தொணதொணன்னு கூப்டுக்கிட்டே இருக்க” என்று சொல்லிவிட்டார். எழுந்து கிளை பரப்பாமலேயே, அந்தத் தொழில் முறிந்துபோனது. வார்த்தைகளைப் பொறுப்பில்லாமல் வியாபாரத்தில் விசிறியடித்து விட்டார்கள்.

இங்கேதான் இந்த விஷயத்தை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. முக்கியமான வியாபாரச் சந்திப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனை எடுத்து நோண்டிக்கொண்டிருந்திருக்கிறார். எழுந்து வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையும் திட்டங்களும் கரை சேர்த்துவிடும் என்கிற அவர்களுடைய நம்பிக்கைகளை எல்லோரும் மெச்சுகிறார்கள். ஆனால், பொதுவெளியில் தங்களை வெளிக்காட்டும் விஷயங்களில் இன்னமும் பல படிகள் மெள்ள மேலேறி அவர்கள் வரவேண்டியிருக்கிறது என்பதைத் தயக்கத்துடன் பதிவு செய்கிறேன். தனக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டுவதற்கு, எதிரே இருப்பவர்கள் ஒன்றும் குப்பைத்தொட்டியைக் கையில் ஏந்தி அமர்ந்திருக்கவில்லை என்பதை அவர்கள் முளைக்கும்போதிலிருந்தே சொல்லித் தர வேண்டும்.

வெற்றியடைந்த தொழில் முனைவோர்கள் பலரிடம் இதுபோல் நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்.  ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் உள்ள எல்லாக் குழுக்களிடமும் இப்போது தொழில் முனைவு என்கிற மனநிலை மெள்ளப் பரவ ஆரம்பித்து விட்டது. எல்லோருமே முட்டி மோதி, பொருளாதாரத்தில் மேல் எழுந்துவருகிற முயற்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஞானம். அதை அருளுகிற இடத்துக்கு ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் நகர வேண்டும்.  சீனாவில் முதியவர்களை நூலகங்கள் என்று சொல்வார்கள். அப்படியான பெரும் நூலகங்கள் இங்கும் இருக்கின்றன. அங்கு போய் பாடம் படிக்கிற மனநிலைதான் முக்கியமானது.

கடற்கரையோர உணவகம் ஒன்றில் அமர்ந்து கொண்டு எனக்கு அப்படியான மந்திரம் ஒன்றைத்தான் எனக்குச் சம்பந்தமேயில்லாத நாடொன்றைச் சேர்ந்த ரமலோவ் இதயசுத்தியுடன் கற்றுத் தந்தார். அதை அவர் சொல்லும்போது, அவருக்குப் பின்னே மஞ்சள் வெயிலை எதிர்த்து, நம்பிக்கையோடு துடுப்பு போட்டு தைமூர் மீனவர்கள் கடலுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கான துடுப்பை அவர் அந்தச் சமயத்தில் தந்தார். விக்டர் சொன்னது இதுதான். “தேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் கேட்காதே. தேவைக்கு அதிகமான விஷயங்களை நீயும் யாரிடமும் சொல்லாதே.”  வியாபாரத்துக்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் பொருந்துகிற மந்திரம்தான் இது. என்னளவில் ரமலோவும் புத்தன்தான். புத்தர்களை அருகிலேயே வைத்துக் கொண்டு வேறெங்கோ எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

- அறம் பேசுவோம்!