
பிசியோதெரபிஸ்ட்கள் டாக்டர் இல்லையா?
பிசியோதெரபி படித்தவர்கள் வலி நிவாரணம், முட நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ‘‘இவர்கள் தங்கள் பெயருக்குமுன் `டாக்டர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு அலோபதி மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், பிசியோதெரபிஸ்ட்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தின் மாநிலத் தலைமை செயற்குழு உறுப்பினர் டேனியல் சுந்தரையா மிகவும் கொதிப்போடு பேசினார். ‘‘மக்களுக்குப் பக்கவிளைவு இல்லாமல், மிகக் குறைந்த செலவில் கிடைக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் பயனைத் தடுக்கும்நோக்கில் அலோபதி மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காகத்தான், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இந்த வழக்கைப் போட்டது.

‘டாக்டர்’ என்ற வார்த்தை, எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கு வழங்கப்படும் ஒரு பட்டமல்ல. பிஹெச்.டி முடித்தவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மட்டுமே ‘டாக்டர்’ எனப் போட்டுக்கொள்ளலாம். அதுதான் விதி. எம்.பி.பி.எஸ் முடிப்பவர்களின் சான்றிதழில் ‘டாக்டர்’ என்று குறிப்பிடப்படுவதில்லை, அது ஒரு வழக்குச்சொல். மருத்துவம் பார்ப்பவர்களைக் குறிப்பிடும் ஓர் அடையாளச் சொல். அலோபதி படித்தால்தான் மருத்துவர் என்று போட வேண்டும் என்று எங்கும், யாரும் குறிப்பிடவில்லை. அவர்கள் படித்த சான்றிதழிலும் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் என்றுதான் இருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவில் பிசியோதெரபி படித்தவர்களுக்கு `டாக்டர்’ என்ற சொல் பெயருக்குமுன் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி மற்ற மாநிலங்களைக்கூட உதாரணமாகக் கொள்ளலாம்.
‘டாக்டர்’ என்ற பட்டத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் சொல்ல முடியாது. பிசியோதெரபி மற்றும் ஆக்குபேஷனல் தெரபி துறைகளை அந்த கவுன்சில் கட்டுப்படுத்த முடியாது.
எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்துக்கும் பிசியோதெரபி பாடத்திட்டத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது. முதல் ஆண்டு உடற்கூறியல் தொடங்கி, மூன்று வருடங்கள்வரை ஒரே மாதிரியான பாடத்திட்டமும் தேர்வுமுறையுமே இருக்கின்றன. நான்காவது வருடத்தில் அவர்கள் மருந்து மாத்திரைகள், சிகிச்சை முறைகள் பற்றிப் படிப்பார்கள். நாங்கள் உடற்பயிற்சிமூலம் நோய்களைச் சரிசெய்வது எப்படி என்றும் சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் என்ன மாதிரியான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் என்றும் படிப்போம். தகுதிவாரியாக நாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.

எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளதைப்போல, தமிழகத்திலும் ‘மாநில பிசியோதெரபி கவுன்சில்’ அமைக்கப்பட வேண்டும். ‘மாநில பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கப்படும்’ என 2008-ம் ஆண்டில், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில்தான் ‘பிசியோதெரபிஸ்ட்கள் இனி டாக்டர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது’ எனக் கூறப்பட்டிருந்தது. இதைத் திருத்தம் செய்ய முறையிட்டோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அந்த அரசாணை அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நீதிமன்றமும் அந்த அரசாணையை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறது. இந்த அரசாணையை நீக்க வலியுறுத்தி பிசியோதெரபி மாணவர்களும் மருத்துவர்களும் இணைந்து விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார் அவர்.
- ஜி.லட்சுமணன்