மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு! - 03

சட்டம் பெண் கையில்
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜிசட்டம் பெண் கையில்!எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி

ரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்து, கணவரின் சொத்து, சுயமாகச் சம்பாதித்த சொத்து எனப் பலவகையான சொத்துகள் உள்ளன. பரம்பரைச் சொத்து என்பது தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஆண்களின் சொத்துகள். ஒரு வம்சத்தில் ஆணாகப் பிறப்பதனாலேயே ஒருவருக்குத் தானாகச் சொத்துரிமை கிடைத்துவிடுகிறது. பரம்பரைச் சொத்தில் ஆணுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ஆனால், தன் சகோதரர்களைப்போல ஒரு பெண்ணால் தன் தந்தையின் பரம்பரைச் சொத்தில் உரிமைகோர முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பிறந்த பெண்களின் சொத்துரிமையை அவர்கள் பிறந்த மதமே தீர்மானிக்கிறது.  

பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு! - 03

இந்துக் குடும்பத்தில் பிறந்த பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் உள்ள பங்கென்ன?

திருமணமான பெண்களுக்குச் சொத்தில் உரிமைகள் என்ற சட்டம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே (1874-ல்) கொண்டுவரப்பட்டது. இதன் பிரிவுகளில் 102 ஆண்டுகளுக்குப்பிறகே நீக்கம் மற்றும் திருத்தம் செய்துள்ளனர்.
1937-ல் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இது, கணவனுக்குப் பிறகு சொத்தில் பெண்ணின் உரிமையைப் பற்றி விளக்குகிறது. 1956-ல் வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒருவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தை அவர் ஆயுட்காலத்துக்குப் பின்னர் யார் அனுபவிக்க வேண்டும் என்று உயில் எழுதப்படாதபட்சத்தில், அவரின் தனிப்பட்ட சொத்தில் மனைவி மற்றும் மகள்களும் உரிமை கோர முடியும். இச்சட்டம் மூதாதையரின் சொத்தில் பெண்ணுக்கு உரிய உரிமைகள் குறித்து எதுவும் பேசவில்லை. பரம்பரைச் சொத்து மற்றும் கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கேட்க முடியாத நிலையே இந்து வாரிசுரிமைச் சட்டம் வந்தபின்னரும் தொடர்ந்தது. இந்துக் குடும்பத்தில் பிறந்த ஓர் ஆணுக்குப் பிறப்பிலேயே சொத்தில் உரிமை வந்துசேரும் நிலையில், பிறப்பினால் கிடைக்கும் பரம்பரைச் சொத்து இதுவரை பெண்களுக்குக் கனவாகவே உள்ளது.

உரிமை உண்டு... ஆனால், தேதி முக்கியம்!

1989-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பரம்பரைச் சொத்தில் பெண்கள் உரிமை கோரலாம். ஆனால்,  பரம்பரைச் சொத்தில் உரிமை கோர, இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 1989 மார்ச் 25-க்கு முன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்திருக்கக் கூடாது. இந்தத் தேதிக்குப் பின்னர் திருமணமானவராக இருந்தாலும், பரம்பரைச் சொத்து, மேலே குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் பாகம் பிரிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண் உரிமை கேட்க முடியாது. இதனால் பாதிப் பேருக்குப் பலன்... மீதிப் பேருக்கு வருத்தம் என்கிற நிலையே தொடர்ந்தது.

சில திருத்தங்கள்... ஒரு சாதகத் தீர்ப்பு!

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-ல் பிரிவு 6 உள்பட  சில பிரிவுகளில் 2005-ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த 2005 செப்டம்பர் 9-க்குப்பின் பிறந்த பெண்ணுக்குத்தான் இது பொருந்தும். 2005-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவராக இருக்கும்பட்சத்தில் கூட்டுக்குடும்பச் சொத்து அல்லது பரம்பரைச் சொத்தில் உரிமைகோர, சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை 2005 செப்டம்பர் 9-ல் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இந்நிலையில், 2014-ல் மூன்று நீதிபதிகளைக்கொண்ட அமர்வு, மும்பை நீதிமன்றத்தில் சொத்துரிமை வழக்கில் கூறிய தீர்ப்பு, பெண்களுக்குச் சொத்தில் உள்ள உரிமை தொடர்பான சந்தேகங்களுக்கும், சட்டப் பிரிவுகளை விளங்கிக்கொள்ளாமல் குழம்பி இருந்தவர்களுக்கும் ஒரு தெளிவு கொடுத்தது. `திருத்தச் சட்டம் கொண்டுவந்ததற்கான முக்கிய நோக்கம் பரம்பரை மற்றும் இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் பெண்ணுக்கும் உரிமை வேண்டும் என்பதே. நோக்கம் சீராக இருக்கும் நிலையில் அதைவிட்டுப் பிறந்த தேதியை வைத்துப் பெண்ணுக்கான உரிமைகளைக் கணக்கிடக் கூடாது. அஸ்திவாரச் சட்டம் அமலுக்கு வந்த 1956-க்கு முன்னர் பிறந்த பெண்ணோ, திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த 2005 அல்லது அதற்கு முன்
னர் பிறந்த பெண்ணோ, பாகம் பிரிக்கும்போது அந்தக் குடும்பத்துப் பெண் உயிரோடு இருந்தால் அவர் உடன் பிறந்த ஆண்களுக்கு அந்தச் சொத்தில் உள்ள அதே உரிமை அந்தப் பெண்ணுக்கும் உள்ளது' என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சட்டப்பிரிவில் 2005 செப்டம்பர் 9 அன்று மற்றும் அதற்குப் பிறகு பிறந்த பெண்களே பரம்பரைச் சொத்து அல்லது இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்குபெற முடியும் என ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தும், இப்படி ஒரு தீர்ப்பு வெளியானது வரவேற்கத்தக்கது.

பூலாவதி வழக்கு

பூலாவதியின் தந்தை 1988-லேயே காலமாகிவிடுகிறார். அவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் பூலாவதி உரிமைகோர முடியும். ஆனால், கூட்டுக்குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்ற வழக்கு, கீழமை நீதிமன்றத்தில் நடந்து, பின் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. மூதாதையர் சொத்தில் உரிமை கேட்டார் பூலாவதி. வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் 2005-ன்படி, சொத்து பங்கிடும்போது பூலாவதியின் தந்தை உயிரோடு இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் பூலாவதிக்குக் கூட்டுக்குடும்பச் சொத்தில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவர்களின் சொத்துரிமை வழக்கு நிலுவையில் இருந்தது. அதனால் பூலாவதியின் தந்தை வாரிசுரிமை திருத்தச் சட்டம் வருவதற்கு முன்னரே காலமாகியிருந்தாலும், பரம்பரைச் சொத்து பாகம் பிரித்து முடிவுக்கு வராமல் வழக்கு நிலுவையில் உள்ளதால் பரம்பரைச் சொத்து பாகம் பிரிக்காத சொத்தாகவே கருதப்படும். பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்குப் பங்குண்டு என்ற சட்டம் அமலுக்கு வருவதற்கு
முன்னரே அவரின் தந்தை காலமாகியிருந்தாலும், பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் பூலாவதி அவர் குடும்பத்தின் பரம்பரைச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராகப் பங்கு பெறும் உரிமை தீர்ப்
பின் வாயிலாக பூலாவதிக்குக் கிடைத்தது.

நாடாளுமன்றத்தின் அறிவிப்பு

2015-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் நீக்குதல் மற்றும் திருத்தம் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியானது. 1956-ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 6 திருத்தி அமைக்கப்
பட்டுவிட்டது. அதன் பிறகு திருத்தச் சட்டம் 2005 என்ற புதிய சட்டம் தேவையற்றது. அதனால் பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பமே மிஞ்சும் என்பதால், நாடாளுமன்றம் 2005 இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்தது. திருத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் என்பது சுத்தப்படுத்தும் வேலை மட்டுமே என்று நீதிபதிகள் குமார் மற்றும் நரேந்தர் ஆகியோரைக்கொண்ட அமர்வு தெளிவுபடுத்தியது.

பரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பத்துச் சொத்து, உயில் எழுதாமல் தந்தை விட்டுச்சென்ற அவருடைய சுயசம்பாத்தியச் சொத்து அனைத்திலும் அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆணுக்கு உள்ள உரிமைக்கு நிகரான உரிமை பெண்ணுக்கும் உண்டு. சட்டம் இயற்றுவதற்கு முன்னர், பின்னர் என்று காரணம் சொல்லிப் பங்கிடுவதில் பாரபட்சம் காட்டாமல் பெண்ணுக்கான சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டும். 1956-க்கு முன்னர் பிறந்த பெண்ணோ, 2005-க்குப் பின்னர் பிறந்த பெண்ணோ, சொத்துக்கு உரிமையானவரின் இறப்புத் தேதி 2005-க்கு முன்னரோ பின்னரோ, பிறந்த தேதி எதுவாக இருந்தாலும், பாகப்பிரிவினை செய்யப்படாத பரம்பரைச் சொத்து அல்லது கூட்டுக்குடும்பச் சொத்து எதுவாக இருந்தாலும், இந்தக் கணக்குகள், வரையறைகளையெல்லாம் தூரவீசிவிட்டு பெண்கள் தாய்வீட்டுக் கூட்டுக் குடும்பச் சொத்தில் உரிமை கேட்கலாம்.