மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!
பிரீமியம் ஸ்டோரி
News
மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

``எறும்புகளுக்கும் உணவளிக்கக் கோலமிடும் வழக்கம் கொண்டவர்கள் நாம். இன்றோ, பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாது; உடன் வேலைபார்ப்பவர்களின் பிரச்னை தெரியாது. அருகருகில் இருப்பவர்களின் மனம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. மென்மையான உணர்வுகளும் மின்மயமாகிவிட்டன. ‘யாருக்கு என்ன நடந்தா எனக்கென்ன?’ என்ற சமூக மனநிலை குற்றங்களை அதிகரிக்கிறது; குற்றவாளிகளை அதிகரிக்கிறது; குற்ற உணர்ச்சியைக் குறைக்கிறது. நாளைய உலகம் ஆரோக்கியமானதாக இருக்க, இன்றைய குழந்தைகளைச் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஆண் பிள்ளைகளிடம் தன் சமூகத்தில் நடக்கும் நல்லவைக்குத் தானும் பங்களிக்க வேண்டியதையும், அல்லவைக்கு எதிராகச் செயல்பட வேண்டியதையும் சொல்லி வளர்க்க வேண்டும்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அருள்செல்வி. 

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!

‘`பெண் குழந்தைக்கு உடுத்தும் உடையிலிருந்தே பெற்றோரின் அக்கறை தொடங்கிவிடுகிறது. ஆனால், ஆண் குழந்தையின் நிர்வாணம் எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ‘நாம் ஆம்பள... எப்படி வேணும்னாலும் இருக்கலாம்’ என்ற எண்ணம் எழத்தொடங்குவது இதிலிருந்துதான். ‘நீ ஓர் ஆண். உனக்கான கண்ணியத்தைக் கட்டமைத்துக்கொள்’ என்று அவர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும். ‘அவமானம், வெட்கம், குற்ற உணர்ச்சி போன்ற எந்த உணர்விலிருந்தும் ஆண் என்பதற்காக உனக்கு விலக்கு இல்லை. அவமானப்பட வேண்டியவற்றுக்கு அவமானப்படு; வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படு. அவற்றை மீண்டும் செய்யாதே. சக பெண்ணின் மனதைக் காயப்படுத்தினால் குற்ற உணர்ச்சிகொள்’ என்று பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

‘அவன் அப்படித்தான்’ என்று தங்கள் ஆண்பிள்ளைகளை ரஃப் அண்டு டஃபாக வளர்த்தெடுப்பதே இங்கு பல அம்மாக்களுக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, பெற்ற உதவிக்கு நன்றி சொல்வது, முகம் பார்த்தவுடன் புன்னகைப்பது, நல்ல வார்த்தைகள் பேசுவது என எல்லோராலும் விரும்பப்படுபவனாக அவன் வளர்ந்து நிற்குமாறு வார்த்தெடுக்க வேண்டும். ‘யார் சொன்னாலும் கேட்க மாட்டான்’ என்று பிள்ளையை வளர்ப்பது அல்ல குட் பேரன்ட்டிங். ‘யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்குவான்’ என்று அவனை ஃப்ளெக்ஸிபிளாக வளர்ப்பதே சரியான வளர்ப்பு முறை.

குழந்தைகளின் சமூக நடத்தை மேம் பாட்டில் குடும்பம், பள்ளி மற்றும் சமூகம் என இந்த மூன்று தரப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீடுகளில் செல்போனை விளையாடக் கொடுக்காமல், நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் மாரல் வகுப்புகள் நிச்சயம் வேண்டும். குறிப்பிட்ட வேலையை முடித்தல், ரூல்ஸ் அண்டு ரெஸ்பான்ஸிபிலிட்டி போன்ற பழக்கங்களைப் பள்ளி நடைமுறை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். சமூகத்தில் உள்ள ஆக்கபூர்வமான விஷயங் களை ஆண் குழந்தைகளுக்கு வீடு, பள்ளி இரண்டு தரப்பும் அறிமுகப்படுத்த வேண்டும். உலகத்துடன் அவர்கள் தயக்கமின்றிப் பழக அனுமதிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும். ‘இவரை மாதிரி இருக்கணும்’ அல்லது ‘இவங்க செய்யற மாதிரி செய்துடக் கூடாது’ என சக மனிதர்களிடமிருந்தே சமூகத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொள்ள குழந்தை கற்றுக்கொள்கிறது.

மைதானத்துக்கு விரட்டுங்கள் பிள்ளைகளை!ஆண் குழந்தைகள் இன்றைய சூழலில் படிப்பை மையமாக வைத்தே வளர்க்கப்படுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைன் குழந்தைகளாக வளரும் இவர் களுக்கு சக மனிதர்களை எதிர்கொள்வதும், மனித மதிப்பைப் புரிந்துகொள்வதும் பெரும் சிக்கலாக உள்ளது. ஆண் குழந்தைகள் சக வயதினருடன் கலந்து பழகும் வாய்ப்பை விளையாட்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது. உடலைப் பேண வேண்டும், உடல் தோற்றத்தில் கவனம் வேண்டும் என்ற விழிப்பு உணர்வையும் விளையாட்டின் வழியாக ஓர் ஆண் குழந்தை பெறுகிறது. குழு விளையாட்டுகளில் தோல்வி பழகுதல், விட்டுக்கொடுத்தல், குழுவாகக் கொண்டாடுதல், இணக்கமான நட்புறவை வளர்த்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக்கொள்கிறது. எனவே, வீட்டில் அடைத்து வைக்காமல் ‘ஓடு’ என்று அவர்களை மைதானத்துக்கு விரட்டிவிடுங்கள்.

படிப்பையும் தாண்டி ஆண் குழந்தைக்குள் இருக்கும் தனித்திறனைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். இது அந்தக் குழந்தைக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தையின் தனித்திறமையால் சமூகத்தில் அதற்குப் புதிய அடையாளம் கிடைக்கும்; அது மற்றவர்கள் முன் குழந்தையின் மதிப்பை உயர்த்தும். ஆண் குழந்தை சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதற்கான பாசிட்டிவ் சூழலை இது உருவாக்கும். தாழ்வுமனப்பான்மை அல்லது சுயவெறுப்புகொள்ளும் குழந்தைகள், உலகத்தையும் ஒருவித நெகட்டிவிட்டியுடனேதான் பார்ப்பார்கள். அதுவே, தன் திறமையில் நம்பிக்கையும் சந்தோஷமும்கொள்ளும் குழந்தைகள், உலகத்தை மகிழ்வுடன் அணுகுவார்கள். எனவே, ‘மேத்ஸ்ல என்ன மார்க் வாங்கியிருக்க நீ?’ என்ற வார்த்தைகளைவிட, ‘டாய் காரை எவ்ளோ சூப்பரா அசெம்பிள் செய்ற நீ!’ என்பதுபோன்ற தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளே அவசியம்.

சமூக அமைப்புகளில் கலந்துகொள்ளவும் அதன்வழியாக மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தையும் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சுற்றுச்சூழல் குழு, என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகளில் அவர்கள் இணைந்து செயல்படட்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த தனித்திறன் வகுப்புகளில் குழந்தைகளைப் பிடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் அல்லது அவர்கள் பழகும் தனித்திறன்களும் மதிப்பெண் வாங்க எந்த அளவுக்கு உதவும் என்றே யோசிக்கின்றனர். சேவை தொடர்பான குழுக்களில் சேர்வது வாழ்க்கைக்குப் பயன்படாது என்ற எண்ணத்தில் அதைத் தவிர்க்கின்றனர். இது தவறான அணுகுமுறை. சமூகம் மற்றும் சக மனிதர் மீதான அக்கறையை இதுபோன்ற அமைப்புகளே ஏற்படுத்துகின்றன. ஆண் குழந்தை வகுப்பறை தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்றதோர் ஈடுபாடு தேவை.

ஆண் குழந்தைகள் வளரும் சூழலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளும், முடிக்க அறிவுறுத்தப்படும் கடமைகளும் அவர்களைச் சமூகப் பொறுப்புமிக்க மனிதர்களாக வளர்க்கும். அன்புக் கூடுவிட்டுப் பறக்க அனுமதிப்பதும் அவர்கள் வலிமையானவர்களாக வளர அவசியமானது.’’