மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!

ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!

ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருடீ கிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியம்: ரமணன்

‘மெத்தை வாங்கினேன்... தூக்கத்தை வாங்கல...’ எனப் பாடாத குறைதான் பலரின் நிலையும். தூக்கமின்மை என்பது இன்று மாபெரும் பிரச்னை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானவருக்கு சரியான தூக்கம் இல்லை. வாழ்க்கைச் சூழல், வாழ்வியல் முறை என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஒன்று கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. அதுதான் படுக்கையறையின் அமைப்பு (இது வாஸ்துவைப் பற்றிய கட்டுரையல்ல). 

ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!

ஒருநாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைப் படுக்கையறையில்தான் செலவழிக்கிறோம். படுக்கையறை என்பது அழகாக இருக்க வேண்டும் என்பதைவிடவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம். சமீபத்தில் உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தூக்கம் என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்கிற விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆழ்ந்த, அமைதியான தூக்கத்தில் படுக்கையறையின் பங்கும் மிகவும் முக்கியமானது.

படுக்கையறை என்பது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துகிற அந்தரங்கமான அறை. அதனால் விருந்தினர் வரும்போது அவர்கள் கண்களில்பட வேண்டாம் என்று நினைக்கிற மற்றும் நமக்குத் தேவைப்படாத எல்லாப் பொருள்களையும் படுக்கையறையிலும், படுக்கையின் மேலும் குவிக்கிறோம். அதனாலேயே பல வீடுகளிலும் `பெட்ரூம்' என்பது இன்னொரு `ஸ்டோர்ரூம்'மாகவே இருக்கிறது.

படுக்கையறையில் பிரதானம் என்றால் படுக்கை தான். அந்தப் படுக்கை எவ்வளவு சுத்தமாகவும், பூச்சிகள் இல்லாமலும் இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். `டஸ்ட் மைட்ஸ்’ எனப்படும் கண்களுக்குத் தெரியாத அந்தப் பூச்சிகள் நாம் தூங்கும்போது நாம் உதிர்க்கிற சருமத்தின் இறந்த செல்கள், வாயின் உமிழ்நீர், தலைமுடி, பொடுகு போன்றவற்றிலிருந்து வருகின்றன. அவைதாம் ஆஸ்துமா மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணகர்த்தா. இந்தப் பூச்சிகள் நம் படுக்கையறையை அண்டாமல் எப்படிக் காப்பது?

நம் படுக்கைக்கு மேல் ஒரு  படுக்கை விரிப்பு (க்வில்ட்) உபயோகித்தால் மேலே சொன்ன இறந்த செல்கள், தலைமுடி உள்ளிட்ட அனைத்தும் அவற்றின் மீதே விழும். வாரம் ஒருமுறை இவற்றை வெயிலில் போட்டுத் தட்டி எடுத்தால் டஸ்ட் மைட்ஸைக் கட்டுப்படுத்தலாம். இப்படிச் செய்தால் அவற்றைக் கட்டுப்பாட்டில்தான் வைக்கலாமே தவிர, ஒரேயடியாக ஒழிக்க முடியாது.  

ஸ்டோர்ரூம் அல்ல படுக்கையறை!

நாம் உபயோகிக்கிற மெத்தைகளை நல்ல வெயிலில் போட்டு எடுத்து வைப்பதும் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். மொட்டை மாடியில்லை என்றோ, படுக்கையைத் தூக்கிக் கொண்டுபோய் வெயிலில் போட இடமில்லை என்றோ சொல்பவர்கள், வேக்குவம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்து பராமரிக்கலாம்.

பல வீடுகளில் பெட்ரூமை ஒட்டியிருக்கும் பாத்ரூமுக்கு வெளியில் அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கிற பழக்கம் இருக்கும். அது ஒருநாள் முழுவதும் அப்படியே இருக்கும். இதைத் தவிர்க்க ஒரு பெரிய கூடையை வைத்து அதில் மட்டும் அழுக்குத் துணியைப் போட்டு வைக்கலாம். இது கண்ட இடங்களிலும் அழுக்குத் துணிகள் சிதறிக்கிடப்பதைத் தவிர்க்கும். இந்தக் கூடையைப் படுக்கையறையில் வைக்கக் கூடாது. படுக்கையறையில் டிரஸ்ஸிங் டேபிள் வைப்பதையும் தவிர்க்கவும்.

முடிந்தவரை படுக்கையறையில் டி.வி, கம்ப்யூட்டரை அனுமதிக்காமலிருப்பது சிறந்தது. அவற்றிலிருந்து வரும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் நம் தூக்கத்தைப் பாதிக்கும். அந்த அறையில் அதிக நேரம் செலவிடும்போது பாதிப்பு இன்னும் அதிகம். குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் இதில் இன்னும் கவனம் தேவை. செல்போன்கூட படுக்கையறையில் அனுமதிக்கப்படக் கூடாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். டி.வி, கம்ப்யூட்டரின் இண்டு இடுக்குகளில் அதிக தூசு சேரும். படுக்கையறையில் அவற்றை வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. தவிர்க்க முடியாமல் படுக்கையறையில் வைத்திருக்கும்போது வாரம் ஒருமுறை அவற்றைச் சுத்தம் செய்யவேண்டியது அவசியம்.

பல வீடுகளிலும் கட்டிலின் அடியில் உள்ள இடம் தேவையற்ற பொருள்களின் கிடங்காக இருக்கும். அந்த இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்யவும் மறந்துவிடுவோம். கட்டிலுக்கடியில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அடிக்கடி அவற்றை எடுத்துத் தேவையானவை, தேவையற்றவை எனப் பிரித்து அப்புறப்படுத்தலாம்.

துவைத்த துணிகளைக் குவித்துவைக்கிற இடமும் படுக்கையறைதான். அன்றன்று துவைக்கிற துணிகளை அன்றைய தினமே மடித்து அவற்றுக்கான இடங்களில் எடுத்து வைத்துவிட்டால் இந்தப் பிரச்னையைச் சரி செய்யலாம். துவைத்த துணிகளுக்கு அருகில் உபயோகித்த தலையணை, பெட்ஷீட் போன்றவற்றை வைக்கக் கூடாது.

படுக்கையறைக்கு லைட் கலர் பெயின்ட் சிறந்தது. அது மனதை அமைதிப்படுத்தும். பெட்ரூமுக்கான திரைச்சீலைகளில் அதிக டிசைன்கள் உள்ளவற்றைத் தவிர்த்து எளிமையானதாகத் தேர்ந்தெடுங்கள். அதிக வேலைப்பாடு செய்தவற்றைச் சுத்தப்படுத்த சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு அப்படியே வைத்திருப்போம். காட்டன் திரைச்சீலை என்றால் எளிதில் துவைத்து உபயோகப்படுத்தலாம். பழையதானாலும் உடனே அப்புறப்படுத்திவிட்டு வேறு வாங்கிக்கொள்ளலாம்.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்)

உங்கள் கவனத்துக்கு..!

*படுக்கையறையிலும் படுக்கையின் மீதும் தேவையற்ற பொருள்களை அடைக்காதீர்கள்.

*படுக்கையறை என்பது கவலைகளை எல்லாம் மறந்து, உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிற ஓர் இடம். எனவே, உங்கள் மன அமைதியைக் குலைக்கும் எந்தப் பொருளும் படுக்கையறையில் இருக்க வேண்டாம். அதேபோல உங்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும் விஷயங்களை... உதாரணத்துக்குக் குடும்பப் புகைப்படம், நல்ல மணத்தைப் பரப்ப உதவும் அரோமா டிஃப்யூசர் (தூங்கச்செல்வதற்கு முன் அணைத்துவிடுவது பாதுகாப்பானது) போன்றவற்றை வைத்திருக்கலாம்.

*படுக்கையறையில் உட்கார்ந்தபடி புத்தகம் வாசிப்பது, அலுவலக வேலைகளைப் பார்ப்பது, டி.வி பார்ப்பது, சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை எல்லாமே படுக்கையறையில் தேவையற்ற பொருள்கள் சேர்வதற்குக் காரணமாகும்.

*காலையில் தூங்கி எழுந்ததும் படுக்கை விரிப்பு களை மடித்து, தலையணைகளை அடுக்கி அவற்றுக்கான இடங்களில் வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ளவும். `பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற மனநிலை, இரவு அந்த அறைக்குள் தூங்கச் செல்லும்போது உங்களுக்கு ஆயாசத்தைத் தரலாம்.

*தினமும் சிறிது நேரமாவது படுக்கையறையினுள் வெளிச்சம் வரும்படி ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்.

*படுக்கையறையினுள் காலணிகள் உபயோகிக்க வேண்டாம்.

*படுக்கையறையினுள் அட்டாச்டு டாய்லெட் இருக்கும்பட்சத்தில், தூங்கச் செல்வதற்கு முன் நன்கு சுத்தப்படுத்திவிட்டு, உறுத்தலை ஏற்படுத்தாத கிருமி நாசினி தெளிக்கலாம்.