
சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ரணில் நினைத்தாலும்கூட அது முடியாது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் அவர் செயல்பட்டுவருகிறார்.
இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பிறகு, அங்கு ஓரளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருந்தாலும், இதுவரையிலும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை. இந்த நிலையில், `இலங்கையில் 13-வது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்' என்று பேசி, அதிபர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 1987-ல் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவுதான் 13-வது திருத்தச் சட்டம். இந்த ஒப்பந்தத்தின்படி, ‘இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரே மாகாணமாக மாற்றுவது', ‘தேர்தல் மூலமாக மாகாணச் சட்டமன்றம் அமைப்பது' ஆகியவை உறுதிசெய்யப்பட்டன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காணவே அவர்களுக்கென தனி மாகாணம் உருவாக்கும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. ஆனால், இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டபோது, சிங்கள மக்கள் வாழும் பகுதிகளை எட்டாகப் பிரித்து, மொத்தம் ஒன்பது மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.

சிறிய நாடான இலங்கையில், சிங்களர்கள் தங்களுக்குத் தனித் தனி மாகாணங்கள் வேண்டுமென்று கேட்கவில்லை. தமிழர்களுக்கு ஒரு மாகாணமும், சிங்களர்களுக்கென ஒரு மாகாணமும் உருவாக்கியிருந்தாலே போதுமானது. ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தனி மாகாணம் அமைக்க இலங்கைக்கு மனமில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டியது.
1988-ல் மாகாணச் சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டு வசதி, நிலம், காவல்துறை போன்ற பிரிவுகளில் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், காவல்துறை, நிலம் போன்ற நிர்வாகங்களில் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் கடைசி வரை அமலாக்கப்படவே இல்லை. நிதி அதிகாரங்களிலிருந்த கட்டுப்பாடுகள் காரணமாகவும், அதிபருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் காரணமாகவும் மாகாண நிர்வாகங்களால் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இந்த நிலையில், 2007-ல் இலங்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. இதையடுத்து, முழுமையாக அமல்படுத்தப்படாமல் இருந்த 13-வது திருத்தச் சட்டம் நாளடைவில் செயலற்றுப்போனது. பல ஆண்டுகளாகவே இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்ற குரல்கள் இலங்கையில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டுகூட ஏழு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து, `இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்' என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர்.
இந்த நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, ‘‘13-வது திருத்தச் சட்டம் வடக்குப் பகுதியின் பிரச்னை மட்டுமல்ல... தெற்கில் உள்ளவர்களும் அந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, படிப்படியாக இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம்'' என்றிருந்தார்.
ரணில் பேசியிருப்பது குறித்து இலங்கையில் வெளியாகும் `தமிழன்' பத்திரிகையின் ஆசிரியர் சிவா ராமசாமியிடம் பேசினோம். ‘‘13-வது திருத்தச் சட்டம் குறித்து ரணில் பேசியதில் ஓர் உள் அரசியல் இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திட
மிருந்து உதவிகள் கிடைக்க வேண்டுமென்றால், இலங்கைக்குக் கடன் வழங்கிய இந்தியா, சீனா ஆகிய நாடுகள், தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இரு நாடுகளும் இதற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்ததால், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்குவதில் தாமதம் நிலவியது.

`எப்போதும் இந்தியா பக்கம் நிற்போம், இந்தியா விரும்பும் விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கிறோம்’ எனக் காட்டிக்கொள்ளவே பொங்கல் விழாவில் இப்படிப் பேசியிருக்கிறார். இதையடுத்து, ஜனவரி16-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்துக்கு, `இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்கிறோம்' எனக் கடிதம் அனுப்பியது இந்திய நிதி அமைச்சகம். ரணிலின் பேச்சு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்குத்தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை.
சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ரணில் நினைத்தாலும்கூட அது முடியாது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் அவர் செயல்பட்டுவருகிறார். ராஜபக்சே கட்சியைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் அமலானால், தென் இலங்கையில் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்தப் பகுதியிலுள்ள சிங்கள அரசியல் வாதிகள், `13-வது திருத்தச் சட்டத்தை அமல்செய்வதும், தமிழர்களுக்குத் தனிநாடு வழங்குவதும் ஒன்றுதான்' என்று இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆகையால், அவர்களைப் பகைத்துக்கொள்ள ராஜபக்சே கட்சி விரும்பாது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பெரும் அதிகாரம் மாகாண சபைக்குக் கிடைக்கும், தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், குறைந்தபட்ச அதிகாரமாவது நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் எப்போது?