அலசல்
Published:Updated:

பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!

பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!

ஜெ. சிகிச்சை ரகசியம் சொல்லும் டாக்டர் பாலாஜி

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களில் 11 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்துள்ளார். அந்தக் குறுக்கு விசாரணையில், முன்பு சொல்லாத பல விஷயங்களைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய பல கேள்விகளுக்கும் இந்த விசாரணையில் பதில்கள் கிடைத்துள்ளன.

ஜெ. வீட்டில் சிகிச்சை புத்தகம்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அரசு மருத்துவர்கள் குழுவும் அப்போலோவில் இருந்தது. அந்தக் குழுவில் இருந்த அரசு மருத்துவர் முத்துச்செல்வம் குறுக்கு விசார ணையில் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். ‘‘2014-ம் ஆண்டு இறுதியிலிருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தன. நான் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்துள்ளேன். ஜெயலலிதாவுக்குச் சாந்தாராம், ஜெயந்தி கோபால், ராமச்சந்திரன் உள்ளிட்ட மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அடிக்கடி அவருக்குத் தலைசுற்றல் வரும். ஜெயலலிதாவின் வீட்டில் அவருக்குச் சிகிச்சை அளிக்கச் செல்லும் மருத்துவர் கள், அங்கிருக்கும் ஒரு புத்தகத்தில் சிகிச்சை குறித்துப் பதிவுசெய்ய வேண்டும். நானும் அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளேன். ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அரசாங்கத்தின் தரப்பில் எங்களிடம் எந்த அறிக்கையும் கேட்கவில்லை. அரசு மருத்துவர்கள் அப்போலோவில் இருந்தது, ஆலோசனை வழங்கவும் ஒருங்கிணைப்பு செய்யவும் மட்டுமே. சிகிச்சை அளிக்க அல்ல’’ என்று முத்துச்செல்வம் சொல்லியுள்ளார்.

பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!

பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி!

ஜெயலலிதா மரண விசாரணையில் முக்கியச் சாட்சியமாகக் கருதப்படுபவர், அரசு மருத்துவர் பாலாஜி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தல்களுக்கான படிவத்தில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டபோது, அதற்கு அத்தாட்சி வழங்கிக் கையெழுத்திட்டவர் பாலாஜி. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஏற்கெனவே பாலாஜி சாட்சியம் அளித்த நிலையில், அவரிடம் குறுக்குவிசாரணை நடத்தியது சசிகலா தரப்பு.

‘‘மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்ட பிறகு, 2016 செப்டம்பர் 23-ம் தேதி  என்னை அரசு சார்பில், அப்போலோ மருத்துவ மனையில் ஒருங்கிணைப்பாளராகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமித்தார். 23-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை ஜெயலலிதா நன்றாகவே இருந்தார். 27-ம் தேதி இரவுக்குப் பிறகுதான், அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. ஜெயலலிதாவுக்குப் பல வருடங்க ளாகவே நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்துள்ளதை அவருடைய மருத்துவ அறிக்கைகள்மூலம் அறிந்துகொண்டேன். அவருக்கு அப்போலோவில் முதலில் தரைத் தளத்திலும் பிறகு இரண்டாம் தளத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. செப்டம்பர் 28-ம் தேதி அன்று வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. நீண்ட நாள்கள் வென்டிலேட்டரில் இருக்க முடியாது என்பதால், எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அக்டோபர் 7-ம் தேதி ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. அக்டோபர் 19-ம் தேதி அவரைத் தனி அறைக்கு மாற்றினார்கள். எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர், அப்போலோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் கள் ஆகியோரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டறிந்து சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரிடம் அவ்வப்போது தெரிவித்தேன்’’ என்று பாலாஜி சொன்னார்.

பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!

கைரேகை பெறப்பட்டது எப்போது?

குறுக்கு விசாரணையில் பல விஷயங்களைச் சொன்னார் பாலாஜி. ‘‘அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவைப் பலமுறை பார்த்துள்ளேன். தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசின் பரிந்துரையின்படி எய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோவுக்கு வந்தது. அக்டோபர் 5-ம் தேதி ஜெயலலிதாவிடம் எய்ம்ஸ் மருத்துவக்குழுத் தலைவர் கில்னானியை அறிமுகம் செய்துவைத்தேன். கில்னானியைப் பார்த்து ஜெயலலிதா வணக்கம் சொன்னார். ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதால், ஜெயலலிதாவுக்குப் பேசுவதில் சிரமம் இருந்தது.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் 2016 அக்டோபர் 27-ம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய படிவத்தில் கைரேகை பெறப்பட்டது. ஜெயலலிதாவின் கைரேகையை உறுதிசெய்யும் வகையில் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டேன். ஜெயலலிதா தெளிவாகப் படித்துப் பார்த்த பிறகே கைரேகையைப் பதிவுசெய்தார். கைரேகை பெறப்பட்டது பற்றிச் சுகாதாரத்துறைச் செயலாளருக்கும் தெரிவிக்கப் பட்டது.

ஜெயலலிதாவுக்குத் தோல்நோய்ப் பிரச்னை இருந்ததால், அப்போலோ வருவதற்கு முன்பே அவருக்கு ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, அது உறுதிசெய்யப் பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப் பட்டுள்ளது. அதே ஸ்டீராய்டு மருத்தை அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோதும், மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்’’
என்றிருக்கிறார் பாலாஜி.

பன்னீருக்குத் தெரியும்!

‘‘அப்போலோ இரண்டாம் தளத்தில் ஜெயலலி தாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களைப் பார்த்துள்ளேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப் பட்ட சிகிச்சை முறைகள் குறித்துப் பன்னீர்செல்வத்திடம் 10 முறை தெரிவித்துள்ளேன். நான் சொன்னபோது, சில சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்’’ என்று குறுக்கு விசாரணையில் பாலாஜி சொல்லியுள்ளார்.

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது’ என்பதுதான் பன்னீரின் பெரிய குற்றச்சாட்டு. இந்த நிலையில், அரசு மருத்துவர் பாலாஜி அதற்கு நேர்மாறான தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

‘ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது கால்கள் அகற்றப்பட்டன’ என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. குறுக்கு விசாரணையில் இதற்குப் பதிலளித்த பாலாஜி, ‘‘சும்மா 20 நிமிடங்கள் சேரில் உட்கார்ந்தாலும், ஜெயலலிதா வால் எழுந்து நிற்கமுடியவில்லை. அதற்குக் காரணம் காலின் தசை நார்கள் வலுவிழந்து இருந்ததுதான். 2016 நவம்பர் 3-ம் தேதி ஜெயலலிதாவுக்குக் கால்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக்க ‘டாப்ளர் ஸ்டடி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

பன்னீரிடம் 10 முறை சொன்னேன்!

ஜெ. அனுமதித்தால் மட்டுமே!

தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கெனவே ஆணையத்தில் சில தகவல்களைப் பதிவு செய்திருந்தார். அவரையும் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்தது. ‘‘ஜெயலலிதா காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பல ஆண்டுகளாகத் தனிக் கவனம் செலுத்தி வந்தார். அதனால்தான், மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் இருந்தபோதுகூடத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா சொல்லச் சொல்ல அந்த உரையைத் தயார் செய்யச் சொன்னார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த உரையைத்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் முன்னிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வாசித்தார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் 2016 செப்டம்பர் 27-ம் தேதி வரை சில அரசுக் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார் என்பதைக் கேள்விப்பட்டேன். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்
பட்டிருந்த போது, அவர் அழைத்தால் தவிர நானோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் அவரைப் பார்க்க முடியாது என்ற நிலையே இருந்தது. போயஸ் கார்டன் வீட்டிலும்கூட அவர் நினைத்தால் மட்டுமே அவரைப் பார்க்க முடியும்’’ என்று ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்னும் பலரின் குறுக்கு விசாரணைகளால் ஆறுமுகசாமி ஆணைய அலுவலகம் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு