
வழக்கறிஞர் வைதேகி பாலாஜிசட்டம் பெண் கையில்எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி
பெண்களுக்கான சொத்துரிமையைக் காலம் காலமாக, அவர்கள் சார்ந்திருக்கும் மதமே தீர்மானிக்கிறது. சென்ற இதழில், இந்து மதத்தில் பிறந்த பெண்களுக்கான சொத்துரிமை குறித்த சட்டங்களைப் பார்த்தோம். இந்த இதழில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்தில் பிறந்த பெண்களுக்கான சொத்துரிமை பற்றிப் பார்ப்போம்.

பெண் சுதந்திரம் என்பது எந்தளவுக்குப் பொய் என்பதை அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் நமக்கு வெளிச்சப்படுத்துகின்றன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களில் பிறந்த பெண்கள் சொத்துரிமையில் சந்திக்கும் சிரமங்களும் அதற்குச் சான்றாகின்றன. கூட்டுக் குடும்பச் சொத்து, பரம்பரைச் சொத்து... இவை இரண்டும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதில்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களின் சொத்துரிமையைப் பற்றி இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கிறிஸ்தவப் பெண்களுக்கான சொத்துரிமை
கிறிஸ்தவர் ஒருவர் உயில் எழுதாமல் சொத்தை விட்டுச்சென்றிருந்தால், அந்தச் சொத்தில் இறந்தவரின் மகள், மனைவி, தாய் ஆகியோரின் உரிமைகள் இவைதாம்...
மகளுக்கு...
* உயில் எழுதாமல் ஒரு பெண்ணின் தந்தையோ, தாயோ விட்டுச்சென்ற சொத்தை உடன்பிறந்தவர்களோடு சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்.
*ஒருவேளை பெண்ணின் தாய் உயிரோடு இருந்தால், சொத்தில் மூன்றில் ஒரு பாகம் அவருக்குச் செல்லும். அம்மாவின் பங்கு போக மீதமிருக்கும் சொத்தை இறந்தவரின் வாரிசுகள் பிரித்துக் கொள்ளலாம்.
மனைவிக்கு...
*கணவரின் சொத்தில் மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை இருக்கிறது. மீதமுள்ள பங்குகளை அவரின் வாரிசுகள் பிரித்துக்கொள்ளலாம்.
*இறந்தவருக்கு வாரிசு இல்லாமல் இருக்கும்பட்சத்தில், கணவரின் சொத்தில் பாதிப் பங்கு மட்டுமே மனைவியைச் சேரும். மீதமுள்ள பங்கு இறந்தவரின் தந்தை வசம் சென்றடையும்.
* கணவருக்கு வாரிசுகளோ, நேரடி உறவுகளோ இல்லாதபட்சத்தில்தான் முழுச் சொத்தும் மனைவியை வந்தடையும்.
தாய்க்கு...
*வாரிசு இல்லாமல் இறந்த ஆணின் சொத்தில் அவரின் மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு சேரும். மீதமிருக்கும் பங்குகள் இறந்தவரின் தந்தை வசம் சென்றடையும். ஒருவேளை, அவரின் தந்தை உயிரோடு இல்லாமலிருக்கும்பட்சத்தில், இறந்தவரின் மனைவியின் பாதிப் பங்கு போக மீதமுள்ள பங்கை அவரின் தாய் மற்றும் அவரின் உடன் பிறப்புகள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.

இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி கிறிஸ்தவ பெண்களுக்குப் பாரபட்சமான சூழலே நிலவுகிறது. வேற்றுமை பாவிக்கும் இந்தச் சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் பெண்களுக்கான சொத்துரிமை
இஸ்லாமியப் பெண்களின் சொத்துரிமையை அவர்களின் தனிச்சட்டமான ஷரியத் விளக்கு கிறது (இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் 1937).
மகளுக்கு...
*தந்தையின் சொத்தில் சகோதரர் களுக்குக் கிடைக்கும் பங்கின் அளவில் பாதி பங்குதான் மகளுக்குக் கிடைக்கும்.
*இறந்தவருக்கு ஒரே மகள் மட்டும் இருந்தால் அவரின் சொத்தில் பாதி பாகம் மகளுக்குக் கிடைக்கும்.
* மணமானாலும், மணமாகாவிட்டாலும் தந்தையின் சொத்தில் மகளுக்கு பாகம் கோர உரிமை உண்டு. ஆனால், சொத்தைப் பிரிக்கும்போது சகோதரர்களுக்குக் கிடைக்கும் சொத்தில் பாதி பாகம்தான் மகளுக்குக் கிடைக்கும்.
மனைவிக்கு...
*வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் கணவரின் சொத்தில் எட்டில் ஒரு பங்கு மனைவிக்குக் கிடைக்கும். மீதமுள்ள பங்கை அவரது வாரிசுகள் பிரித்துக்கொள்வார்கள்.
*வாரிசுகள் இல்லாதபட்சத்தில் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவிக்குக் கிடைக்கும். மீதி கணவரின் பெற்றோருக்குச் சென்றுவிடும்.
மதம் மாறிய பெண்களுக்கான சொத்துரிமை...
மதம் மாறும் பெண்களுக்கு எந்த மதச் சட்டப்படி சொத்துரிமை கையாளப்படும் என்கிற சந்தேகம் காலம்காலமாக இருந்துவருகிறது. இந்த மாபெரும் கேள்விக்கான சட்டமுடிச்சு, நயனா வழக்கின் மூலம் அவிழ்ந்தது. சமீபத்தில் நயனா என்ற பெண் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். இந்து குடும்பத்தில் பிறந்த நயனா 1990-ல் இஸ்லாமியராக மதம் மாறினார். அவரது பெயரையும் நஷிபானு என மாற்றம் செய்துகொண்டு இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டார். நஷிபானுவின் தந்தை காலமான பிறகு, அவரது சகோதரர்கள் சொத்தைப் பங்கிட்டனர். வாரிசுகள் பட்டியலில் இஸ்லாமியராக மாறிவிட்ட நஷிபானுவின் பெயர் இடம்பெறவில்லை. தந்தையின் சொத்தில் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தனக்கும் பங்கு உண்டு என்று நஷி, தாசில்தார் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
தாசில்தார் அலுவலகம் நஷியின் உரிமைக்குப் பச்சைக்கொடி காட்டியது. அதற்கடுத்து அவரின் சகோதரர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகினர். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி இந்து அல்லாத நஷிபானுவின் உரிமை கேள்விக்குள்ளானது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் நஷி தோற்றுத்தான் போனார். ஆனால், தனது முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்துவாக இல்லாத பெண் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி அவள் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்கிற பெரியதொரு சட்டச் சவால் முன்னின்றபோதும், குஜராத் உயர் நீதிமன்றம் ‘Caste Disabilities Removal Act of 1850’ என்ற சட்டத்தை மேற்கோள் காட்டியது. இந்து பெண் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்தாலும், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.