
ரீ.சிவக்குமார், எம்.குணா, படம்: கே.ஜெரோம்
நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக, சூடான களங்களில் கவிஞர் வைரமுத்துவைப் பார்க்க முடிகிறது. களத்துக்கு வந்தவரின் கருத்து குறித்து அறிய நடந்த உரையாடல் இது...
‘காற்று வெளியிடை’ படத்தில் உங்கள் பாடல் வரிகளுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘வான் வருவான்’ பாடலைப் பாடிய சாஷா திருப்பதி ஆகியோருக்குத் தேசிய விருது கிடைத்திருப்பது குறித்த உங்கள் மனப் பதிவு..?
“புயலுக்கும் குயிலுக்கும் வாழ்த்துகள்!”
நியூட்ரினோ எதிர்ப்பு, காவிரிப் பிரச்சினை ஆகியவற்றுக்கான போராட்டக் களத்தில் உங்கள் அனுபவங்கள்..?
“நியூட்ரினோ ஆய்வகம் என்ற விஞ்ஞானக் களத்துக்கு நாங்கள் விரோதிகள் அல்லர். அந்த ஆய்வுக் களத்தின் மீதிருக்கும் சர்வதேச ஆதிக்கம் எங்கு போய் முடியுமோ என்ற அச்ச உணர்வே எங்களை வாட்டுகிறது. நியூட்ரினோ தனித் துகளாகத் தீங்கற்றது; கற்றைப் படுத்தப்பட்டால் கொடியது. அணு ஆயுதங்களை அழிக்கும் ஆற்றல்கொண்டது. அதுதான் அச்சம் தருகிறது. ரசாயன ஆயுத ஆய்வகத்தின் மீது நேற்று சிரியாவின் டமாஸ்கஸ் தாக்கப்பட்டது மாதிரி நாளை ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தால் அது நிச்சயமாக நியூட்ரினோவைக் குறிவைக்கும். அது மேற்குத்தொடர்ச்சி மலையைத் துண்டாடிவிடும். மேற்குத் தொடர்ச்சி மலை மிகப் பழைமையானது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மடகாஸ்கர் வரைக்கும் நீண்டிருந்த நிலப்பரப்பு பிய்த்தெறியப்பட்டது. பிறகு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் கலகங்களால் நேர்ந்த எரிமலை வெடிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை உண்டானது. இவ்வளவு பழைமையான மலைக்கு - எங்கள் நீராதாரங்களின் அன்னைக்கு எதிர்காலத்தில் பேராபத்து நேர்ந்துவிடுமோ என்று மண்ணின் மைந்தனாகக் கவலைப்படுவது தவறா? வைகோ மீது எனக்கு மதிப்பு உண்டு. அவர் தன் குழுவோடு ஒற்றை மனிதனாக நடந்து செல்லும்போது இரக்கமே மேலிடுகிறது. அவருக்குத் தோழமையோடு தோள் கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் உரிமைத் தண்ணீருக்கு நீண்டகாலமாக இழைக்கப்படும் அநீதி எங்களைக் களத்தில் இறக்கிற்று. உடல் நலக்குறைவைத் தாண்டி பாரதிராஜா களத்துக்கு வந்தது பாராட்டுக்குரியது. ஆனால், அங்கு நிகழ்த்தப்பட்ட அல்லது நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட வன்முறையை நாங்கள் வரவேற்கவில்லை.”

பொதுவாக எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாத நீங்கள் இப்போது போராட்டக் களத்துக்கு வந்ததற்கான காரணங்கள்..? ஆண்டாள் சர்ச்சை உங்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்த நெருக்கடி என்று சொல்லலாமா?
“போராட்டம் ஒன்றும் புதியதல்ல. 1965 மொழிப் போரில் நான் பள்ளி மாணவன். வடுகபட்டித் தெருக்களில் ஊர்வலம் போய் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டுப் பெரியகுளத்தின் பெரிய மைதானத்தை மூன்று சுற்று ஓடிக் கடக்கும் தண்டனை பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது எனக்கு வயது 12. இலங்கை இனப்படுகொலைக்குச் சுவரொட்டி ஒட்டியதும் மழையில் நனைந்து மனிதச் சங்கிலி கண்டதும் , முந்தைய காவிரிப் போராட்டங்களில் களம் கண்டதும் உங்கள் கண்கள் அறியாதவை.இன்னொன்று சொல்கிறேன். களத்திற்கு வந்தவன்தான் வீரன் என்பதில்லை. வீட்டுக்குள்ளிருக்கிற பலரும் வீரர்கள்தாம். சாறு தரும் கனியை அறிவீர்கள். நீர் தரும் வேரை அறிய மாட்டீர்கள். நாங்கள் நீராகவும் இருப்போம்; சமயம் வந்தால் சாறாகவும் இருப்போம்.”
மோடி கவிதைநூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டது, தருண்விஜயுடனான உங்கள் நட்பு ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தனவே, ‘வைரமுத்து ஞானபீடம் வாங்குவதற்காகத்தான் இப்படி நடந்துகொள்கிறார்’ என்றுகூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“மோடி பி.ஜே.பியின் இரண்டாவது பிரதமர். முதல் பிரதமரான வாஜ்பாய் கவிதைகளையும் அவர் பிரதமராக இருந்தபோதே வெளியிட்டிருக்கிறேன். அப்போது ஒரு விமர்சனமும் எழவில்லை. காரணம் பா.ஜ.க – தி.மு.க இரண்டும் உறவாக இருந்த காலமது. உறவு இருந்தால் ஒரு பேச்சு. இல்லாவிட்டால் ஒரு பேச்சா? எந்த மேடைக்கும் நான் அழைக்கப் படலாம். அங்கு நான் நானாக இருக்கிறேனா என்பதுதான் முக்கியம். தமிழுக்கு மேன்மை கிட்டும் என்று நம்புகிற இடத்தில் நான் நட்பு வைப்பேன். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனால் அது சம்பந்தப்பட்டவர்களின் குற்றமேயன்றி நம்பிக்கையின் குற்றமல்ல. பா.ஜ.க எம்பிகளில் சிலரை நான் அறிவேன். வள்ளுவரை உயர்த்திப் பிடித்ததால் மட்டும்தான் தருண்விஜயோடு கரம் கோத்தேன். ஏதோ ஒரு புள்ளியில் இணைவதற்கு எல்லோரிடமும் ஒரு நற்குணமுண்டு. கூட்டணிக்குள் இருந்தால் அவன் மகாத்மா – வெளியே போனால் கோட்சே என்ற அநாகரிக அளவுகோலைக் கொண்டிருக்கிறது அரசியல் வெளி. அந்த எண்ணம் சுத்திகரிக்கப்படவேண்டும். ஞானபீடத்திற்கா இந்த உறவு என்று கேட்பது கிச்சுக் கிச்சு மூட்டாமலே சிரிப்பை வரவழைக்கிறது. ஞானபீடம் என்ன, ஒரு கவிஞன் பெறமுடியாத அளவுக்கு அத்துணைப் பெரிதா அல்லது ஒரு பிரதமர் பெற்றுத்தரும் அளவுக்கு அத்துணைச் சிறிதா? அரசுக்கும் அந்த விருதுக்கும் எந்தத் தொடர்புமில்லை.”
போராட்டக் களத்தில் உங்களோடு பங்கேற்ற பாரதிராஜா , சீமான், பெ.மணியரசன் ஆகியோர் திராவிட இயக்கத்தை விமர்சிப்பவர்கள். நீங்களோ திராவிடக் கருத்தியலில் ஆர்வம் உள்ளவர்கள். இந்த முரண்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“தமிழுக்குள் திராவிடத்தைப் பார்க்கலாம். திராவிடத்துக்குள் தமிழையும் பார்க்கலாம். இவர்களில் யாருக்கும் தனிமனிதர்களோடு முரண்பாடுகள் இருக்கலாமே தவிர தத்துவத்தோடு முரண்பாடுகள் இருக்க முடியாது. திராவிடமென்பது தமிழ் தேசியத்துக்கு விரோதமுமில்லை.”
கலைஞருடனான உங்கள் நெருக்கம் ஸ்டாலினுடனும் தொடர்கிறதா? செயல் தலைவர் ஆனபிறகு ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“கலைஞரோடு எனக்கிருப்பது மதிப்புமிக்க பாசம். தளபதியோடு இருப்பது பாசம் மிக்க மதிப்பு. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டேயிருக்கிற தலைவர்களுள் அவர் தலையாயவர். தொலைபேசியில் அவரை அடிக்கடி அழைத்துப் பாராட்டுகிறேன்; அவரும் என்னை அழைக்கிறார்.”

ஆண்டாள் சர்ச்சைக் காலத்தில் கமலும் ரஜினியும் கண்டனம் தெரிவிக்காதது குறித்து உங்களுக்கு இன்னும் மனவருத்தம் இருக்கிறதா?
“ஒரு வருத்தமும் இல்லை. அவர்கள் உயர்வாகவே நடந்துகொண்டார்கள். கமல் என்னை மூன்றுமுறை தொலைபேசியில் அழைத்து ‘இந்தப் பிரச்னையைச் சிறப்பாகவும் செம்மையாகவும் கையாள்கிறீர்கள். உங்கள் எதிர்பாராத பொறுமை எனக்கு வியப்பைத் தருகிறது’ என்று நெறிப்படுத்தினார். ரஜினி ஒருநாள் வீட்டுக்கே வந்து ஒன்றரைமணிநேரம் என்னோடு உரையாடினார். என்மீது அவர் காட்டிய அக்கறை தக்க நேரத்தில் பக்கபலமாய் இருந்தது. எல்லாப் பிரச்னைக்கும் எல்லா நேரத்திலும் எல்லோரும் பேச வேண்டுமென்பதே ஒரு வன்முறை. பல நேரங்களில் மௌனமே நல்லது.”
பாரதிராஜா உங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தபோது உங்களுக்குள் நேர்ந்த உணர்வலைகள்..?
“சிலிர்த்துப்போனேன். அவர் வார்த்தைகள் தடித்திருந்தாலும் உணர்ச்சி உண்மை. பாரதிராஜாவிடம் போலித்தனமான நேசமும் கிடையாது; பொய்யான கோபமும் கிடையாது. அவருடைய அந்தக் கோபத்தை சமூகம் ரசித்ததைப் பார்த்தேன். எனக்குள் வருத்தமிருந்தது; கோபமில்லை. என்னால் யாரையும் எதிரியாக நினைக்க முடியவில்லை. நண்பனாக இருப்பதற்கு அன்பு மட்டுமே போதும். ஆனால், ஒருவரை எதிரியாக ஏற்றுக்கொள்வதற்கு ஏராளத் தகுதிகள் வேண்டும். நான் உணர்ச்சிகளைக் கெட்டிப் படுத்திக்கொண்டேன். அவர் கொட்டித் தீர்த்து விட்டார். பொதுவாழ்வில் இவையெல்லாம் போகிறபோக்கில் நிகழவே நிகழும். சேதாரமில்லாமல் நகை செய்ய முடியாது. சிராய்ப்புகள் இல்லாமல் பொதுவாழ்வு கிடையாது. சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முடியாது. சங்கடம் தந்ததும் சர்ச்சைதான்; ‘தமிழாற்றுப்படை’க்குச் சரித்திரம் தந்ததும் சர்ச்சைதான்.”