பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை!”

“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை!”

சுஜிதா சென், படங்கள்: வி.சிவகுமார்

கொடைக்கானல் மலை வெயிலில் காய்கறிப் பைகளைச் சுமந்தபடி நின்றுகொண்டிருந்தார் அவர். பளிங்கு நிற முகம்; சுருட்டை முடி; தோளில் சால்வை. மூக்கில் உணவுக்குழல் மட்டும் இல்லை. இரும்புப் பெண்மணி  இரோம், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார் என்பதற்கான காட்சிதான் அது.

``காதல், திருமணம் இரண்டுமே வாழ்வில் முக்கியமானவை. போராளிகளுக்கும் சாமானிய மனிதர்களைப்போல இயல்பு வாழ்க்கையில் நாட்டம் இருக்கும் என்பது மற்றவர்களுக்குப் புரிய வேண்டும். மற்றபடி ஒரு போராளியாகத் தோற்றுப்போன என்னிடம் பேசுவதற்கு வேறு வார்த்தைகள் இல்லை” - வலியுடன் அதேசமயம் வலிமையாகப் பேசுகிறார் இரோம் ஷர்மிளா.

அமைதியின் உச்சமாய் இருக்கும் இரோமுக்கு அப்படியே நேர் எதிர் அவரின் கணவர் டெஸ்மாண்ட். மிக இயல்பான நகைச்சுவையுணர்வு, அரசியலைப் பற்றித் துடிப்பாகப் பேசுவது, தனது அடை யாளங்களைத் துறந்து இரோமின் காதலனாக, கணவனாக மட்டுமே வாழநினைப்பது என  டெஸ்மாண்டைப் பற்றிச் சொல்ல ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு.

இதயநோய் மற்றும் கிட்னி பிரச்னை எனப் பல்வேறு சவால்களுக்கிடையே வாழ்ந்துகொண்டிருந்தாலும் ``எனக்கென்ன, ஒரு தேவதையைத் திருமணம் செய்துகொண்டு ராஜா மாதிரி இருக்கிறேன்” என்று உரக்கச் சிரிக்கிறார்.

“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை!”

``எப்படி இருக்கிறீர்கள் இரோம்?”

``நீங்கள்தான் பார்க்கிறீர்களே. மிகவும் நலமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்குகிறேன். மதியம் சமையல் செய்கிறேன். மூன்று வேளை சாப்பிடுகிறேன். எங்கள் வீட்டில் இரண்டு பூனைக்குட்டிகளை வளர்க்கிறோம். அவற்றுக்கு உணவளிப்பது, சுத்தம் செய்வது போன்ற சிறு சிறு வேலைகள் இருக்கின்றன.”

``சொந்த ஊரிலிருந்து கொடைக்கானலுக்கு வரும்போது எப்படியான உணர்வு ஏற்பட்டது?”

``எனக்கு ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை. கொடைக்கானலின் இயற்கை எழில் மணிப்பூரிலும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று அங்கு இல்லை. நான் தினமும் அமைதிக்கு மத்தியில் கண் விழிக்க விரும்புகிறேன்; குண்டுகளுக்கும் அழுகுரல்களுக்கும் மத்தியில் அல்ல.”

``வடகிழக்கு மாநிலங்களின் நிலை மாறும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறதா?”

``ராணுவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, மணிப்பூர் அரசாங்கம் இழப்பீட்டுத்தொகை வழங்குகிறது. எல்லாம் முடிந்த பிறகு விரல்களுக்கு இடையே புழங்கும் காகிதங்களுக்கு என்ன வேலை இருக்கிறது? நான் உண்ணாவிரதம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழக்க வேண்டும் என்றே என் ஊர் மக்கள் நினைக்கி றார்கள். டெஸ்மாண்டை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. குடும்பத்தைப் பிரிந்த கவலை எனக்குள் இன்னும் இருக்கிறது. அதேவேளையில் புதிதாகக் குடும்பத்தை அமைத்த சந்தோஷமும் இருக்கிறது.”

“ஏமாற்றம் தந்த பூமிக்கு இனி போவதாக இல்லை!”

``டெஸ்மாண்டுடன் வாழ்க்கை எப்படி இருக்கிறது?”

``மிகவும் கலகலப்பான மனிதர். என்னை மிகவும் நேசிக்கும் ஒருவரின் காதலை நிராகரிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் காதல் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டதில்லை. ஆனால் காதல் இயல்பாகவே நடந்துவிட்டது’’ என்று இரோம், டெஸ்மாண்டைப் பார்க்க... டெஸ்மாண்ட் பேசத் தொடங்கினார்.

``என் அம்மா ஸ்கூல் டீச்சர். அப்பா அயர்லாந்து சிட்டி ப்ளானர். இரோமைப் பற்றி `Burning Bright’ என்ற புத்தகத்தில் படித்தபோது, நான் அயர்லாந்தில் இருந்தேன். இவரைப் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தேன். இரண்டு நாள்கள் இரோம் இருந்த மருத்துவமனைக்கு முன் நின்று தர்ணா செய்தேன். அதன் பிறகுதான் இவரைக் காண முடிந்தது. மணம் முடிக்க வேண்டும் என்று வந்த எனக்கு, `போராட்டத்தைக் கலைக்க வந்த அந்நியன்’ என்ற பெயர் கிடைத்தது. ஆனால், முதலில் இரோம் மறுத்தாலும், என் காதலைப் புரிந்துகொண்டு என்னை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார். கடிதங்களின் வழியே வாழ்ந்த எங்களது காதல், திருமணத்தில் முடிந்தது. என்னுடன் உலகம் முழுக்கப் பயணிக்க ஒப்புக்கொண்டார். அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளோம்.”

மனம் விரும்பும் வாழ்க்கை அமையட்டும் இரோம், டெஸ்மாண்ட்!