பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

நாத்தம் போயே போச்சு!

நாத்தம் போயே போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
நாத்தம் போயே போச்சு!

ஜெ.முருகன்

“இயற்கையுடன் உறவாட  மட்டுமே ஊட்டிக்கு வரும் சுற்றுலாவாசிகள் இனி கலைக்காகவும் வர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்கிறார் பொதுக்கழிவறைக் கட்டடத்தைக் கலைக்கூடமாக மாற்றிய நீலகிரி  மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா.

அரசுக் கழிவறைக் கட்டடங்கள் பற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை. பராமரிப்பற்ற நிலை, மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம், சமூக விரோதிகளின் கூடாரம் என்ற பொதுவான அம்சங்கள் தமிழ்நாடு முழுக்கவே உண்டு. ஊட்டியில் அப்படியான ஒரு கழிவறைக் கட்டடத்தை மீட்டெடுத்து, அதனை அழகிய ஆர்ட் கேலரியாக மாற்றி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சர்வதேச புகைப்பட ஆராய்ச்சியாளர் மற்றும் ஊடகவியலாளரான மாதவன் பிள்ளை.

கழிவறைகள் இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் பட்டை தீட்டப்பட்டுப் பளிச்சென்று இருக்கும் அந்த இடத்துக்கு ‘கேலரி ஒன் டூ’ (Gallery OneTwo) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.  கடந்த மார்ச் 23-ல் இந்த கேலரி திறக்கப்பட்டதோடு, முதல் ஓவியக் கண்காட்சியும் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் நீர்வண்ணத்தில் மனித முகங்களை வரைபவர்கள் மிகச் சிலரே. அதில் மிக முக்கியமானவர் புதுச்சேரி, ஆரோவில்லைச் சேர்ந்த ராஜ்குமார் ஸ்தபதி. உலகம் முழுவதிலும் தனது படைப்புகளைக் கண்காட்சிகளாக வைத்து வரும் ராஜ்குமார் ஸ்தபதி, சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றவர். இவரின் கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை ஏப்ரல் 23-ம் தேதி வரை நடக்கும் என்று அறிவித்திருக்கிறது கேலரி நிர்வாகம். இதுவரை மூக்கைப் பிடித்துக்கொண்டும், முகச்சுளிப்போடும் அந்தக் கட்டடத்தைக் கடந்து சென்ற பொதுமக்கள் தற்போது வாய்பிளந்து அதிசயிக்கிறார்கள்.

நாத்தம் போயே போச்சு!

மாதவன் பிள்ளையிடம் பேசினேன். “ஊட்டி நகரின் மையப்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்றுகொண்டிருக்கிறது கோடப்பமந்து கால்வாய். இந்தக் கால்வாயில் இருபுறங்களிலும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் இருக்கின்றன. பொதுமக்களும், சில தனியார் வணிக நிறுவனங்களும் அதில் குப்பையைக் கொட்டியதால் கழிவு நீர் தேங்கி மாசடைந்து வந்தது. ஒரு நாள் கோடப்பமந்து கால்வாயை சுத்தம் செய்வதற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அப்போதுதான் கொசுக்களை உற்பத்தி செய்யும் கூடாராமாக மாறி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த இந்தக் கட்டடத்தைப் பார்த்தேன். மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் மையப்பகுதியில் நோய்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பொதுவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்க ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ‘நம்ம டாய்லெட்’ திட்டம். 2013-ம் ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஊட்டியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கழிவறைக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு அங்கு நவீன வசதிகளுடன் ‘நம்ம டாய்லெட்’ அமைக்கப்பட்டது. ஆனால் 1992-ம் ஆண்டு சுற்றுலாவினருக்காகக் கட்டப்பட்ட இந்தக் கழிவறையை மட்டும் இடிக்க அந்தப் பொறியாளருக்கு மனம் வரவில்லை. காரணம் இதன் அழகான வடிவமைப்பும் உறுதியும்தான்.

அதனால் இதனை ஆர்ட் கேலரியாக மாற்றலாம் என்று தோன்றியது. மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அவர்களைச் சந்தித்து இதுகுறித்துக் கூறினேன். அதற்கு, தாராளமாகச் செய்யுங்கள் என உடனே ஒப்புதல் அளித்தார். கழிவறை கலைக்கூடமாகும் திட்டத்தை ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதியிடம் பகிர்ந்து கொண்டபோது அவரும் ஆர்வத்தோடு கண்காட்சிக்கு ஒப்புக்கொண்டார். ஊட்டியில் இதுதான் முதல் ஆர்ட் கேலரி. உள்ளூர் தொடங்கி உலக நாடுகளில் இருக்கும் அத்தனை கலைஞர்களின் படைப்புகளும் இங்கே சங்கமிக்கும். இதன்மூலம் ஊட்டியில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் கலை சார்ந்த விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதுதான் முக்கிய நோக்கம்” என்றார்.

நாத்தம் போயே போச்சு!

“‘நம்ம டாய்லெட்’ திட்டம் செயல்படுத்தப் பட்டாலும் இந்தக் கட்டடத்தையும் பராமரித்து வந்தோம். நாங்கள் என்னதான் தினமும் பராமரித்தாலும் மறுநாளே சிலர் அங்கு மது அருந்தி அசுத்தம் செய்து வைத்துவிட்டுச் சென்று விடுவார்கள். நகரத்தின் முக்கிய இடமான இந்த இடத்தைக் கடக்கவே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அங்கு போலீஸ் ரோந்தும் போடப்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன்பிறகுதான் இந்த ஆர்ட் கேலரிக்கு அனுமதி வழங்கினோம். தற்போது நீங்கள் பார்க்கும் கட்டடம் ஒரே மாதத்தில் சீரமைக்கப்பட்டது” என்கிறார் ஊட்டி நகராட்சி ஆணையர் சி.ரவி.

நாத்தம் போயே போச்சு!

“இந்தக் கட்டடம் அமைந்திருக்கும் இடம் ஊட்டியில் மிக முக்கியமான பகுதி. ஆனால் பொதுமக்களில் சிலர் செய்யும் தவறுகளால் சுகாதாரமற்று இருந்தது. வருடத்துக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப்பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கட்டடத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த இடத்தில் ஆர்ட் கேலரி வைத்துக்கொள்ள மாதவன் குழுவினர் விருப்பம் தெரிவித்தார்கள். உடனே சம்மதித்துவிட்டேன். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் கலை ஆர்வலர்களை வருடம் முழுவதுமே இங்கே அழைத்துவருவதற்கான ஆரம்பப்புள்ளிதான் இந்த முயற்சி. மலையரசியாக இருக்கும் ஊட்டியைக் கலையரசியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னொசென்ட் திவ்யா.

கலக்குங்க!