இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான, அனைத்திந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் (ஏஐபிசி) தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், அதன் தலைவராக இருக்கிறார். தொழில் துறையினர் மற்றும் தொழில் முனைவோர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 14-ம் தேதி, சென்னை டான் போஸ்கோ பள்ளி அரங்கத்தில், `சொல்லப்பட வேண்டிய ரகசியங்கள்’ என்கிற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தருர், ஜே.என்.யூ செயற்பாட்டாளர் செஹ்லா ரஷீத் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகள் விழிப்பு உணர்வு செயற்பாட்டாளர்கள் கன்யா பாபு மற்றும் மகிமா பொத்தார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு ஏஐபிசி தமிழக பிரிவு தலைவர் மோகன் குமாரமங்களம் தலைமை வகித்தார். ஷ்வேதா ஜெய்சங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டவை.
கன்யா பாபு:
இந்தியாவில் 60% குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகின்றனர் எனத் தரவுகள் சொல்கின்றன. அதுவே, சில வேலைகளில் சரியாக இருக்காது. ஏனென்றால், பல்வேறு சம்பவங்களில் பாலியல் குற்றங்கள் பதிவுசெய்யப்படாமலே உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி, பாலியல் குற்றம் நடந்தது பற்றித் தகவல் அறிந்தவர், அதைப் புகார் செய்யவேண்டியது கடமை. ஆகவே, குற்றம் நடந்ததைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பதும் ஒரு குற்றமே. குழந்தைகளின் மீதான குற்றங்களில் தாய்தான் உடனடியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார். தந்தையை யாரும் கேள்வி கேட்பதில்லை. இது, இரு பாலருக்கும் பொதுவான பிரச்னை. எனவே, அனைவரையும் இதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
மகிமா பொத்தார்:
சட்டத்தின் மீதான பயம் மட்டுமே குழந்தைகள் மீதான வன்முறைகளைக் குறைப்பதற்கு தீர்வாகாது. விழிப்பு உணர்வை முறையான கல்வி மூலம் கொண்டுவர வேண்டும். குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே `குட் டச், பேட் டச்' பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பல்வேறு தருணங்களில் குழந்தைகளுக்குத் தங்களின் மீது வன்முறை நடக்கிறது என்பது தெரியாமலே நடக்கிறது. எனவே, குழந்தைகளுக்குப் பாலியல் வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள், அத்துமீறுபவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் தினசரி கவனமுடன் உரையாட வேண்டும். பல்வேறு பாலியல் அத்துமீறல்களைக் குழந்தைகள் தெரிவிக்கத் தயங்குவார்கள். பொறுமையாக அவர்களிடம் உரையாடினால், தன் மீதான அத்துமீறல் சம்பவங்களை நம்மிடம் தெரிவிப்பர். இதைப் பாலினத்தோடு சுருக்கிவிடாமல், ஒரு சமூகமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவர்களிடம், குழந்தைகளிடம் இந்த விவாதத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
செஹ்லா ரஷீத்:
இந்தச் சிக்கலைப் பாலினச் சார்பின்றி அணுக வேண்டும். ஏனென்றால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் சிறுமி, சிறுவன் என இருவருமே பாதிக்கப்படுகின்றனர். இதை ஒரு கலாசார அளவிலான மாற்றமாக எடுத்து வரவேண்டும். பள்ளி அளவுகளிலிருந்தே குழந்தைகளிடம் இதைப் பற்றிய உரையாடலைத் தொடங்க வேண்டும். இந்த விவாதங்களை வெறும் நகரங்களில் மட்டுமன்றி, கிராமங்களுக்குள் எடுத்துச்செல்ல வேண்டும். சமூக ஊடகத் தொடர்பில்லாதப் பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்
சசி தரூர்:
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்களில் 92 சதவிகிதத்தினர், குழந்தைகளுக்குத் தெரிந்தவர்களாகவே உள்ளனர். குடும்ப உறுப்பினராகவோ, நண்பராகவோ ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைகளிடம் அறிமுகமானவர்களாக இருப்பது அவலம். இதில் அரசாங்கத்தின் அணுகுமுறையும் தவறாக இருக்கிறது. கல்வி, விழிப்பு உணர்வு மூலமாவே இதைக் குறைக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்தே குழந்தைகளின் பாலியல் உரிமைகள் பற்றிக் கற்பிக்க வேண்டும். பாலியல் குற்றம் என்பது, அவமானத்துடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. அதனாலே, பாலியல் குற்றங்களைப் பற்றிப் புகார் அளித்தால் அவமானம் எனக் கருதி, பல சம்பவங்கள் பதிவுசெய்யப்படாமல் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். கலாசார ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம், `புகை பிடிப்புப் பழக்கம்’ பற்றிய விழிப்பு உணர்வு. இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இது முறையான விழிப்பு உணர்வு, பிரசாரம் மற்றும் சட்டபூர்வ தண்டனைகள் மூலமாகச் சாத்தியப்பட்டது. இதே நடைமுறையை பாலியல் குற்றங்களில் பின்பற்றப்படலாம்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து, பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது.
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் பேசிய செஹ்லா ரஷீத், ``பல்வேறு செயற்பாட்டாளர்கள், கொள்கை அளவில் மரண தண்டனைக்கு எதிராகப் பிரசாரம் செய்துவருகின்றனர். மரண தண்டனை என்பது, பிரச்னையின் அடிப்படையிலிருந்து நம்மை விலக்கிச்செல்கிறது. தண்டனை வழங்குவது மட்டுமே இதற்குத் தீர்வாகாது அது ஒரு குறுக்கு வழியாக மட்டுமே இருக்கும். கலாசார ரீதியிலான மாற்றங்கள் நிரந்தரத் தீர்வாக இருக்கும். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” என்றார்.
சசி தரூர் பேசுகையில், ``அடிப்படையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன், உயிரைப் பறிப்பது என்பது, அரசாங்கத்தின் பணியாக இருக்கக் கூடாது. ஆனால், மறுபுறம் இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி, மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மரண தண்டனையானது குற்றங்களைத் தடுப்பதில் எந்தவிதமான தீர்மானமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என உறுதியாகத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் மரண தண்டனை என்பது, சமூகத்தில் பலவீனமான சிறுபான்மை மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதிலும், 92% குற்றவாளிகள் நன்கு தெரிந்தவர்களாக இருக்கும் சூழலில், குடும்பங்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்றன. எனவே, பாலியல் குற்றங்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்குவது, எதிர் வினைகளையே ஏற்படுத்தும்.
குடும்ப வன்முறைகள் என்பதும் மன்னிக்க முடியாதவை. அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில், பெண் அதிகாரிகள் அதிக அளவில் நியமிக்கப்பட வேண்டும். திருமண உறவுகளுக்குள்ளாக நடைபெறும் வன்முறைகளையும் ( Marital Rape) தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும். ஆனால், இந்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் Marital rape குடும்ப, திருமண முறைகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது அபத்தமானது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, `அவ்வாறு குற்றமாக்குவது இந்தியத் திருமண முறைகளில் தலையிடுவது ஆகும்’ என்கிறார். ஆனால், அது தனி நபருடைய உரிமை மீறல் என்பதை உணர மறுக்கிறார்கள். உறவு முறைகளுக்கு உட்பட்டோ அல்லது அதற்கு வெளியாகவோ வன்முறை என்பது எப்போதுமே வன்முறைதான்” என்றார்
இறுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், அரசாங்கத்தை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களில் ஆண்- பெண் உறவுகளை எதிர்மறையாக சித்திரிப்பதைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.