நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

சென்னை நகரம் வளர்ச்சி கண்டு வருகிறதோ இல்லையோ, பரப்பளவில் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் கண்டுவருகிறது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ). இதன் பரப்பளவை 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யும் அரசாணையைக் கடந்த ஜனவரி 22-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, சென்னைப் பெருநகர எல்லை விரிவாக்கத்தில் கூடுதலாக 1,709 கிராமங்கள் இணைக்கப் பட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாகவும், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி வட்டங்களும் இணைக்கப்பட்டன. செங்கல்பட்டுக்கு மிக அருகில் என்ற கோஷம் மாறி, செங்கல்பட்டும் சென்னையும் ஒன்றாகிவிடும் உருவாகியிருக்கிறது. இது மட்டும் நடந்தால், இந்திய அளவில் இரண்டாவது பெரிய நகரமாக சென்னை மாறும். 

இதற்கான அறிவிப்பினைத் தமிழக அரசாங்கம் வெளியிட்டதும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சி.எம்.டி.ஏ பகுதியில் உள்ள திட்டப் பணிகளைத் தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரகத் திட்டத்தின்கீழ் செயல்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், தற்போது எல்லையை அதிகரிப்ப தால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, சென்னைப் பெருநகர விரிவாக்கத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தார். இதுகுறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

உண்மையில் இந்த விரிவாக்கத்தில் என்னதான் சிக்கல் என, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மணி சங்கரிடம் விசாரித்தோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“நகரக் கட்டமைப்புக்குள் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்றவை அடிப்படைத் தேவை களாகும். ஏற்கெனவே சென்னை மாநகருக்குள் பல பகுதிகளில் மோசமான சாலைகள்தான் இருக்கின்றன.

சி.எம்.டி.ஏ-வின் எல்லை ஏற்கெனவே பெரியதாக உள்ளது. தற்போது மேலும் எட்டு மடங்கு அதிகமாக்கியிருக்கிறார்கள். சி.எம்.டி.ஏ என்பது ஒரு நகர்ப்புற வளர்ச்சிக்கான குழுமம். ஆனால், இதனுடைய வளர்ச்சித் திட்டம் எதுவுமே இதுவரை சீராக இல்லை. இந்த அறிவிப்பு, தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்கான அறிவிப்பாகவே படுகிறது. நகர எல்லையை விரிவு படுத்திவிட்டால் உலக வங்கிக் கடன் கொடுக்கும். இந்தக் கடனை இலக்காகக்கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மாதிரி தெரிகிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர்க் கால்வாய் முறையாகச் செயல்படவில்லை. இந்த நிலையில் மேலும் விரிவாக்கம் செய்யும்போது, அதனால் என்ன நன்மை  கிடைத்துவிடப் போகிறது?

கிரேட்டர் சென்னை என்ற திட்டத்தால் மாநகராட்சிக்கு வேண்டுமானால் வருமானம் கிடைக்கலாம். ஆனால், கிரேட்டர் சென்னைக்குள் தங்கள் பகுதியும் வருவதினால்  இன்னும் அதிகமாகச் சொத்து வரி கட்டுவது பொதுமக்களுக்கு எப்படி சரியாக இருக்கும்?

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாகப் பணிகள் மிக மந்தமாக நடக்கின்றன. சென்னையை இன்னும்  விரிவாக்கினால், மக்களுக்குக் கூடுதல் தாமதம், அலைச்சல்தான் ஏற்படுத்தக்கூடும். ரெரா சட்டத்தில் இதுவரை சுமார் 800 புகார்கள் வந்திருக்கின்றன. அவற்றை ஏன் தீர்க்கவில்லை என்று கேட்டால், சி.எம்.டி.ஏ-வில் போதுமான பணியாளர்கள் இல்லை என்கிறார்கள்.

200 வார்டுகள் எண்ணிக்கைகொண்ட சென்னை மாநகராட்சியை 500 வார்டுகளாக உயர்த்தப் பார்க்கிறார்களே தவிர, மக்களின் தேவை அடிப்படையில் இந்த மாற்றத்தை முன்னெடுக்கவில்லை. எனவேதான், நாங்கள்  இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம்.

சென்னையை, கிரேட்டர் சென்னையாக ஆக்குவதென்றால் உள்கட்டமைப்பு வசதி அளிக்க மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சென்னை மாநகரக் காவல்துறையில் தற்போது காவலர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. விரிவாக்கம் செய்யும்போது அதற்கேற்ப காவல் துறையையும் விரிவுபடுத்த வேண்டும்.

அதேபோல, நில விற்பனை மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்காக சி.எம்.டி.ஏ அனுமதி பெறுவதற்கான ஆன்லைன் பதிவு முறையானது இன்னமும் சரியாகச் செயல்படவில்லை. அதை  சரிசெய்தாக வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், வெறும் பரப்பளவை விரிவாக்கம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை’’ என்றார்.

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

இதுகுறித்து நவீன்ஸ் ஹவுஸிங் இயக்குநர் ஆர்.குமாரிடம் கேட்டோம். “சி.எம்.டி.ஏ எல்லை விரிவாக்கம் செய்வதற்கு என்ன காரணம் என அரசுத் தரப்பில் சொல்லப் படவில்லை.  தற்போதைய அறிவிப்பில், விரிவாக்கப்பணி குறித்த அறிவிப்பும் எதுவும் சொல்லப்படவில்லை. 1974-ம் ஆண்டில் சி.எம்.டி.ஏ-வின் முதலாவது மாஸ்டர் பிளானில், சென்னையைச் சுற்றி நகர்ப்புற முனையங்கள் மற்றும் மூன்று துணை நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், இதுவரை மறைமலைநகரில் ஒரு துணை நகரமும், மணலியில் ஒரு நகர்ப்புற முனையமும் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு, அதுவும் முழுமை அடையாமல் உள்ளன. அதேபோல, மாஸ்டர் பிளான் என்ற முழுமைத் திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை.

அடுத்ததாக, 2006-ம் ஆண்டில் இரண்டாவது மாஸ்டர் பிளானில் முடிவெடுத்தபடி, பல திட்டங்களைச் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்க வில்லை. சி.எம்.டி.ஏ என்பது, ‘திட்டமிடல்- ஒருங்கிணைப்பு - கண்காணிப்பு’ என மூன்றையும் செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு என்பதில் சாலை வசதி, குடிநீர், கழிவு நீர் அகற்றல், மின்சாரம், தொலைத் தொடர்பு வசதி, மருத்துவம், பாதுகாப்பு என அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. இது எளிதான காரியமல்ல. இதற்காகப் பெரிய அளவில், பல்வேறுவிதமானத் திட்டமிடல் வேண்டும்.

இந்த விரிவாக்கத்திற்கே பெருமளவு நிதி ஆதாரம் தேவை. அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சென்னை விரிவாக்கம் செய்யப்பட்டால், அதன் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி எது, அந்தப் பகுதி குறித்த திட்ட வரையறை உள்ளதா, நகர விரிவாக்கத்திற்காகப் பல்வேறு கிராமங்களை இணைக்கும்போது அந்தப் பகுதிகளின் தொழில்கள், விவசாயம், குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நடைபெறும் நெசவுத் தொழில் போன்றவை பாதிப்படைவது பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?

இப்படிப் பல்வேறு குறைபாடுகளுடன்  இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின்  பெரிய நகரம் சென்னை என்று பெருமையடிக்க மட்டுமே உதவுமேயன்றி, மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது’’ என்றார்.

நகர விரிவாக்கம் என்பது முக்கியம் தான். ஆனால், அதற்கான திட்டங்கள்  எந்த அளவுக்கு யோசித்துத் தீட்டியிருக் கிறார்கள் என்பது அதைவிட முக்கியம் என்பதை நிர்வாகத்தில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்!

-தெ.சு.கவுதமன்

படங்கள்: வீ.நாகமணி, ப.பிரியங்கா

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

சலுகைகள் கிடைக்கலாம்!

எம்.ராம்குமார், தனியார் நிறுவன ஊழியர், கானத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்

“எங்களுடைய கானத்தூர் பகுதி, சி.எம்.டி.ஏ எல்லைக்குள் வந்தால் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவது எளிதாக இருக்கும். தற்போது பஞ்சாயத்து எல்லைக்குள் இருப்பதால், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வீட்டுக் கடன் கொடுக்க மறுக்கின்றன. அதேபோல, வருமான வரியில் வீட்டு வாடகையைச் சற்றுக் கூடுதலாகக் காட்டி, வரிக்கழிவு பெற இயலும். ஆக மொத்தத்தில் சி.எம்.டி.ஏ எல்லைக்குள் வந்துவிட்டால் எங்களுக்குச் சென்னைக்கு உண்டான பல சலுகைகள், போக்குவரத்து வசதிகள் மேம்பட வாய்ப்பிருக்கும்’’. 

சென்னை சி.எம்.டி.ஏ விரிவாக்கம்... மக்களுக்கு என்ன நன்மை?

வாடகை அதிகரிக்கும்!

கே.சந்திரசேகர், கடை உரிமையாளர், செங்குன்றம், திருவள்ளூர் மாவட்டம்


“செ
ங்குன்றம்  சி.எம்.டி.ஏ விரிவாக்கத்தில் இடம் பெறுவதால் பாதாளக் கழிவு நீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட  வாய்ப்புள்ளன.  எங்கள் ஊருக்குள் நுழையும் பகுதியில், புழல் ஏரிக்கு அருகில் மிகப் பெரிய திறந்தவெளிக் குப்பை கொட்டுமிடம், சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. சி.எம்.டி.ஏ லிமிட்டுக்கு மாறினால் அதற்குத் தீர்வு காண வேண்டும். இடமதிப்பு அதிகரித்தால், அதைக் காரணம் காட்டி கடை வாடகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த    சி.எம்.டி.ஏ விரிவாக்கம் பணம் பண்ணுவதற்காக இருக்கக்கூடும் என்பது என் கருத்து.”