
தன்னம்பிக்கை
ஜக்கு என்கிற ஜகதீஷ்க்கு 27 வயது. டெட்ராப்லேஜிக் (Tetraplegic) குறைபாடு காரணமாகக் கை கால்களின் இயக்கத்தை இழந்தவர். என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், “மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சராகப் போறேன். அதுக்கு எனக்கு முழுத் தகுதியும் இருக்கு” என்கிறார்.
குழந்தையிடம் அசாதாரணமாக ஏதாவது குறைபாட்டை உணர்ந்து, மருத்துவரை அணுகும்போது என்ன பிரச்னை என்றே தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறினால் எப்படி இருக்கும்? ஜகதீஷின் பெற்றோருக்குக் கிடைத்த அனுபவம் இதுதான். ஜக்குவிற்கு ஏற்பட்டிருப்பது டெட்ராப்லேஜிக் என்னும் மோட்டார் சென்சரி குறைபாடுதான் எனத் தெரிவதற்கே அவர்களுக்கு அதிகக் காலம் பிடித்திருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு அவர்கள் செய்த சிகிச்சை என்ன தெரியுமா? ஜக்குவை மிகச் சிறந்த குழந்தையாக நடத்தத் தொடங்கியதுதான். “அம்மா அப்பாவுக்கு நான்தான் உலகத்துலயே பயங்கர ஜீனியஸ்” என்கிறார் ஜகதீஷ்.
4-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த ஜகதீஷ், 5ம் வகுப்பிலிருந்து சிறப்புக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்ந்து பயங்கர சுட்டியாக வலம் வந்திருக்கிறார். கம்ப்யூட்டர் வகுப்புகள் வரத்தொடங்கிய காலம் அது. சாஃப்ட்வேர் என்றால் என்னவென்று கேட்ட இவரிடம், ‘உலகத்தை உங்க கைக்குள்ள கொண்டு வரதுதான் சாஃப்ட்வேர். எல்லாமே நீங்க அணுகுற தூரத்துக்குள்ள இருக்கும். இந்த உலகத்தை உங்க வீடா மாத்துறதுதான் சாஃப்ட்வேர்’ என்று சொல்லியிருக்கிறார் அப்பள்ளியின் கணினி ஆசிரியர். இரண்டு மாதங்கள் மட்டுமே அவர் பாடம் நடத்தியிருந்தாலும், அந்த ஆசிரியரின் வார்த்தைகளின் தாக்கம்தான் தன்னை வேறு இடத்துக்கு நகர்த்தியது என்கிறார் ஜகதீஷ்.

10ம் வகுப்பை டுடோரியலில் முடித்துவிட்டு, ஆன்லைன் மூலமாக வெப் டிசைனிங், போட்டோஷாப், கிராபிக்ஸ் எனப் பல டெக்னிகல் விஷயங்களில் தேர்ச்சியடைந் திருக்கிறார். சென்னையின் பிரபலமான ட்ராவல்ஸ் கம்பெனிக்கு, ஜகதீஷ்தான் வெப்டிசைனிங் சூப்பர்வைசர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், நீட் போராட்டம் என மக்கள் போராட்டங்கள் பலவற்றில் ஜகதீஷைப் பார்க்கமுடியும். அசெளகரியங்கள் கடந்து எப்போதும் இவ்வளவு எனர்ஜியை எங்கிருந்து எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். “நான் என்னை வித்தியாசமானவனா உணர்வது கிடையாது. அசெளகரியங்கள் இருக்கு. எல்லோருக்கும் இருப்பதைப் போலவே. மாற்றுத்திறனாளிகளின் கஷ்டங்கள் சமூகத்துக்குப் புரியறதில்லைன்னு நினைக்கிறேன். மற்றபடி மக்கள் அன்பானவங்கதான். அதைப் புரியவைக்கும் சிறுமுயற்சியில் தினமும் ஈடுபடறேன். பல தன்னார்வ நிறுவனங்களோடு சேர்ந்து ரத்த தான முகாம்கள் நடத்துறது, வலைப் பதிவுகள், இயற்கைப் பேரழிவுக் காலங்களில் இயங்கறதுக்காகக் குழுக்கள் அமைத்துச் செயல்படுறது, உடல்தானம் செய்யும் விழிப்பு உணர்வுக்கான வேலைகள்னு போயிட்டே இருக்கு”- ஒவ்வொரு நாளின் திட்டங்களும் ஜகதீஷுக்கு விரல் முனையில் இருக்கின்றன.
ஜகதீஷின் பாட்டிதான் அவருக்கு எல்லாமுமாக இருக்கிறார். ‘‘பொதுவான நிகழ்ச்சிகளுக்கு பாட்டியோடு போயிடுவேன். போராட்டங்களுக்குப் போகணும்னா, அதுக்கு முன்னாடி பாட்டிகிட்ட ஒரு போராட்டம் பண்ணியாகணும். போராடிப் போராடிப் போராட்டத்துக்குப் போயிட்டு வருவேன்” என்னும் ஜகதீஷ், கோயம்புத்தூரில் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் என எல்லோருக்கும் செல்லம். கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் மாற்றுத் திறனாளிகளுக்கான லிஃப்ட், ரேம்ப் அமைந்ததற்கு, செயற்பாட்டாளர் ஜகதீஷ் அண்டு கோவின் விடாப்பிடியான முயற்சிகள்தான் காரணம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்தை எளிமைப்படுத்தும் செயல்பாடுகளில் தீவிரமாக இருக்கும் ஜகதீஷ், “போக்குவரத்து மற்றும் ரேம்ப், லிஃப்ட் வசதிகள் மட்டுமில்லை. பொழுதுபோக்கவும் எங்களுக்கு என்ன இருக்கு? சினிமாவுக்கும், பொதுக் கேளிக்கை மையங்களுக்கும் போகணும்னு எங்களுக்கும் ஆசை இருக்குமில்லையா? `இவங்களுக்கு என்டெர்டெய்ன்மென்ட்டா?னு யோசிக்கறதே பலருக்குக் கஷ்டமா இருக்குமோ” என அர்த்தமாகப் புன்னகைக்கிறார். ‘‘Powerchair Football-னு ஒரு விளையாட்டு இருக்கு. அதிக அளவிலான குறைபாடு கொண்டவர்களுக்கான ஒரு விளையாட்டு. இந்தியாவுல இது நிறைய பேருக்குத் தெரியாது. தேவையானதையெல்லாம் நாமத் தெரிஞ்சிப்போம். எங்களுக்கு எல்லாமும் தேவை. அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்” என்கிறார் தீர்க்கமாக.
எல்லோருக்குமானது உலகம். உணர்வோம்.
- ம.குணவதி, படங்கள்: தி.விஜய்