
தமிழ்ப்பிரபா - படங்கள்: சாய்தர்மராஜ்
‘தோழர் ஜீவானந்தம்’ என்ற பெயர் தமிழக வரலாற்றின் தகிக்க முடியாத தணல் அடையாளம். அதே அடையாளத்தோடு, அதே ஆவேசத்தோடு, அதே அரசியல் உணர்வோடு இயங்கிவருகிறார் இந்தத் ‘தோழர் ஜீவானந்த’மும். ஜீவாவின் உடல்நிலைக்கு அதிகம் வெய்யிலில் அலையக்கூடாது. ஆனால் தினந்தோறும் போராட்டங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து அலைந்து திரிகிறார்.
பேராவூரணியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெட்டவயல் என்கிற கிராமத்தில் வசிக்கும் ஜீவானந்தத்தைச் சந்தித்தபோது தோழமையோடு வரவேற்றார்.
“ ‘தமிழர் கறி இங்கு விற்கப்படும்’ என்கிற பலகை மாட்டி ஈழப்போராளி குட்டிமணி இறந்த காணொளியை எங்க ஊர்ல காட்டினாங்க. அப்போ நான் எட்டாவது படிச்சிட்டிருந்த சமயம். தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் வெடிச்சது. அந்தக் காணொளி என்னை ரொம்பவே பாதிச்சது, ஊர்ப் பெரியவங்கல்லாம் சேர்ந்து ஜெயவர்தனே உருவ பொம்மையை எரிக்க முற்படும்போது அந்தப் பொம்மையைப் பிடுங்கி அதோட ரெண்டு கண்களையும் தோண்டி சாலையில் போட்டு ஆவேசத்துல அழுதேன்” என்று அந்த நாளை நினைவுகூறும்போது ஜீவானந்தத்திடம் ஒருவித அமைதி குடிகொண்டது.

“86 லிருந்து 96 வரை திராவிடர் கழகத்தில இருந்தேன். 2001ல் பி.எச்டி..படிக்கும்போது ‘நிறப்பிரிகை’ பத்திரிகை வாசிக்க ஆரம்பிச்சேன். அ.மார்க்ஸ், ராஜ் கௌதமன், ரவிக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு என்னோட அரசியல் பார்வை விரிவானது. பிறகு, அரங்க குணசேகரனின் கொள்கை உறுதிப்பாட்டினால் அவருடன் சேர்ந்து பல போராட்டங்கள் நடத்தினோம். அதற்காக ஒருமுறை சிறைக்குச் சென்றபோது அங்கே ஒரு குடும்பத்தை சந்திச்சேன். என்னைப் பத்திக் கேள்விப்பட்டு அவங்க பெண்ணை எனக்குத் தர சம்மதம் தெரிவிச்சாங்க. தோழர்களுடன், குலக்குடி என்ற ஊரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி 23 நாட்கள் திருச்சி மத்திய சிறை, அதற்குப் பிறகு 35 நாட்கள் கண்டிஷன் பெயிலில் கடலூரில் தங்கியிருக்க வேண்டிய சூழலில்தான் சக்திபாரதியை நேரில் சந்திச்சேன்” எனச்சொல்லும் தருணத்தில் புன்னகையைக் கட்டுப்படுத்துகிறார் ஜீவானந்தம்.
“தோழர், அரைமணிநேரம் டைம் கொடுக்கிறீங்களா?’’ எனக் கேட்டவர் உடன் இருந்த நண்பரின் உதவியுடன் கையில் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துணியைப் பிரித்து காற்றாட கையை நீட்டி அமர்ந்திருந்தார். உடன் இருந்த நண்பர் மருந்து கொண்டுவருவதற்காக வெளியே சென்றார். புண்ணில் உள்ள கொப்புளங்கள் உடைந்து நீர் கசிந்துக் கொண்டிருந்தது.
“அது ஒண்ணுமில்ல தோழர். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி புண்ணு வந்து ஆறாம புற்றுநோயா மாறிப்போச்சு” என சாதாரணமாகச் சொன்னார். பேச்சற்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“கருப்பு நிறத்தைச் சுரக்க வைக்ககிற மெலனின் எனக்கு சுரக்கலை. பாக்க ஏதோ நெதர்லாந்துக்காரன் மாதிரி இருப்பேன். பக்கா தமிழன்” என்று சிரிப்பவரிடம் பதிலுக்குப் புன்னகையை பரிமாறிக் கொள்ள இயலவில்லை.
“உடம்பு முழுக்க வெள்ளையா இருக்கிற இந்த நோயை அல்பினிசம்னு சொல்லுவாங்க. சின்ன வயசுல இருந்தே இப்போ வரைக்கும் என் உடம்புல அங்கங்க புண்கள் இருக்கும். அப்பப்போ வெடிச்சு சீழ் கசியும். அதனாலே பழகிடுச்சு” என்றார் இயல்பாக.
கூடங்குளம் அணு உலை குறித்து காவிரி டெல்டா மக்களிடம் பிரசாரம் செய்தது, மீனவர் போராட்டத்தின்போது அதை விவசாயிகளுக்குச் சொல்லி அணி திரட்டியது, கிராமங்களிலுள்ள பலபேருக்கு சாதிமறுப்புத் திருமணத்தின் அவசியத்தைப் பரப்புரை செய்வது, ஊர்மக்கள் கூடும் இடங்களில் ஒற்றை ஆளாக நின்று கோஷமிடுவது, பதாகைகளைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு நடைப்பயணம் போவது.. என நீள்கின்றன ஜீவானந்தத்தின் சமூகச் செயற்பாடுகள். இப்போது ‘தமிழக மக்கள் விடுதலை இயக்கம்’ என்ற அரசியல் அமைப்பின் செயலாளராக இருக்கிறார்.

“சாதிமறுப்புத் திருமணங்கிறது சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கிறதுக்கு நான் ஒரு சரியான உதாரணம். நெருங்கிய சொந்தத்திலேயே எங்க அப்பா அம்மா திருமணம் செய்துகிட்டாங்க. அதனால் ஏற்பட்ட மரபுக்கோளாறாலதான் எனக்கு இந்த மாதிரி ஆகிப்போச்சு. ஆனா, நான் சாதிமறுப்பு திருமணம் பண்ணிகிட்டேன். என் ரெண்டு பசங்களும் கிண்ணுனு இருக்கானுங்க” என்றவர் அருகிலிருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
“ ‘ஸ்கின் கேன்சர் உங்களுக்கு வேகமாப் பரவிட்டு வருது, கொஞ்ச நாளுக்கு வெயில்ல எங்கயும் போகாதீங்க’ன்னு டாக்டர் சொல்றதெல்லாம் இவர் கேட்கிறதே இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபயணம் போறேன்னு ரெட்டவயல்ல இருந்து பேராவூரணி வரைக்கும் வெயில்ல நடந்துட்டே போனார்” என்று குரல் உடைந்து பேசும் மனைவி சக்தி பாரதியிடம் “நாட்ல நடக்கிற அநியாயத்தை எல்லாம் பாத்துகிட்டு சும்மா இருக்கிறதுக்கு சாகுறதே மேல்” என்கிறார் ஜீவானந்தம்.
விடுதலைச் செல்வன், முத்துப் பிரபாகரன் என இரண்டு மகன்கள். வீட்டருகே வாடகைக்கு ஒரு அறை எடுத்து அங்குள்ள மக்களுக்கு ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பது, பட்டா தட்டச்சு செய்வது போன்றவற்றை செய்து கொடுப்பதுடன் ஊர்ப்பிள்ளைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷும் கற்றுக் கொடுக்கிறார். அவர்களாக விருப்பப்பட்டுக் கொடுக்கிற பணத்தில் ஓடிக்கொண்டிக்கிறது இவர் குடும்பச் சக்கரம்.
வழியனுப்புவதற்குப் பேருந்து நிலையம் வரை வந்தவர், என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு “என்னைப் பாத்தா எழுபது வயசுக்காரர் மாதிரி இருப்பேன். ஆனா நாப்பத்தொன்பது வயசுதான் ஆகுது. இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேன்னு தெரியாது தோழர். தம்பிங்களுக்கு நான் சொல்ல விரும்புறதெல்லாம் தயவு செய்து நட்சத்திர அந்தஸ்தை வெச்சு மட்டுமே ஒருவரை தலைவராக்காதீங்க. சமூக வலைதளங்களோடு நின்னுடாம கிராமம் நோக்கி பயணம் செய்யுங்க. முதலாளித்துவம் சார்ந்த திட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும் போதெல்லாம் எதிர்க்கும் முதல் குரல் இளைஞர்களுடையதாக இருக்கணும்.” என்றார்.
ஜீவானந்தம் போன்ற போராளிகளால்தான் சமூக மாற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன.