பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

மனசும் மனசும் சேர்ந்தாச்சு!

மனசும் மனசும் சேர்ந்தாச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
மனசும் மனசும் சேர்ந்தாச்சு!

ஆ.சாந்தி கணேஷ்

 ‘ஹாய்! எனக்குச் சீக்கிரமே கல்யாணம். நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு. விகடன் ஆபீஸ்ல எல்லோருக்கும் சொல்லிடுங்க’ - மெசேஜுடன், கன்னத்தில் வெட்கச் சிவப்பு கொண்ட ஒரு ஸ்மைலி என் போனில் சிரித்துக்கொண்டிருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நள்ளிரவில் சென்னை பெரும்பாக்கம் - தாழையூர் சாலையில் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானாரே, அந்த லாவண்யாவின் மெசேஜ்தான் அது!

மனசும் மனசும் சேர்ந்தாச்சு!

சம்பவம் நடந்த பிப்ரவரி 12 அன்று லாவண்யாவுக்கு வேலை முடியக்  கிட்டத்தட்ட  நள்ளிரவு ஆகிவிட்டிருக்கிறது. அதன் பிறகு தன்னுடைய டூ வீலரில் பெரும்பாக்கம் - தாழையூர் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்தவரின் வண்டியை மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல்  வழிமறித்தது. லாவண்யா பயப்படாமல் வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியிருக்கிறார். ஆனால், மூன்று பேரில் ஒருவன் வண்டியை நகரவிடாமல் பிடித்துக்கொள்ள, இன்னொருவன் பெரிய வெட்டுக்கத்தியை லாவண்யாவை நோக்கி வீசியிருக்கிறான். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, வீசிய கத்தியை லாவண்யா இறுகப் பிடித்துக்கொண்டார். வெறியாகிப்போன மூன்றாவது கொள்ளையன் இரும்பு ராடால் லாவண்யாவின் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறான். மெயின் ரோட்டில் மயங்கி விழுந்தவரைத்  தரதரவென  இழுத்துக்கொண்டு போய், புதருக்குள் போட்டுவிட்டு லாவண்யாவின் டூ வீலர், மொபைல் போன்ற காஸ்ட்லியான பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டுபோய்விட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து நினைவு திரும்பிய லாவண்யா, புதருக்குள் இருந்து தவழ்ந்து தவழ்ந்தே சாலைக்கு வந்திருக்கிறார்.  எப்படியாவது உயிர் பிழைத்துவிட வேண்டும் என்கிற லாவண்யாவின் மனஉறுதி  அவரைக்  காப்பாற்றிவிட்டது.

மனசும் மனசும் சேர்ந்தாச்சு!

கடுமையான காயங்களுடன் இருந்த அவரை அப்போது பேட்டி எடுத்தோம். பேட்டி முடிந்ததும், ‘என் கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிடுவேன், விஜயவாடாவுக்கு வரணும்’ என்றவர், இரண்டரை மாதங்கள் கழித்து மறக்காமல் தன் திருமணத் தகவலை நமக்குத் தெரிவித்தார். 

“அவர் பேரு ரவிச்சந்திரன். ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல்ல மேனேஜராக இருக்கார். ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆன அன்னிக்கு பிரஸ்மீட்ல, ‘நல்லவேளை, அந்தக் கொள்ளையர்கள்  என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கல. அப்படியே செஞ்சிருந்தாலும்கூட, அவனுங்க செஞ்ச தப்புக்கு நான் ஏன் என் சந்தோஷங்களை இழக்கணும்? மகிழ்ச்சியோட கல்யாணம் பண்ணிக்குவேன்’னு நான் பேசியிருந்ததைக் கேட்டுதான், அவர் இம்ப்ரஸ் ஆகியிருக்கார். அவரே மேரேஜ் புரபோஸ் செஞ்சார்”   என்றவரின் குரலில் வெட்கம்.

மனசும் மனசும் சேர்ந்தாச்சு!

“அதுக்கப்புறம் அவர் என்னைப் பத்தி விசாரிக்க, நாங்க ரெண்டு பேரும் தூரத்து உறவு என்பது எங்களுக்கே சர்ப்ரைஸ். உடனே என் வீட்டுக்கு நேரா கிளம்பிவந்துட்டார். ‘உன்னோட ஆட்டிட்யூட் எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு. உன் முடிவை யோசிச்சு சொல்லு’ன்னாரு. எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. ஏன்னா, அவரு ரொம்ப  அழகா, ஸ்டைலா இருந்தாரு. ஆனா, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு என் தோற்றமே மாறிப்போயிருந்தது. அவனுங்க உடைச்ச  என்னோட  வலது கை எலும்பு இன்னமும் சரியாகலை. அடிக்கடி வீங்கிப் போயிடுது. தலையில் போட்ட தையல்கள்னால இன்னும் அந்த இடங்களில் முழுசா முடி வளரலை. வலது கண்ணுல இருக்கிற காயத்தால அந்தக் கண்ணை இன்னமும் சரியா திறக்கமுடியலை. ஆனா அவர்தான், ‘அழகுங்கிறது மனசுதான், நீ பேரழகி’னு சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணினார்’’ என்றவர்,  “கான்ஃபரன்ஸ் கால் போடறேன்.அவர்கிட்ட நீங்களும் பேசறீங்களா? என்னைப் பத்தி அவர் என்ன நினைச்சிருக்காருன்னு நானும் தெரிஞ்சிப்பேனில்ல’’ என்றார் சின்னச் சிரிப்புடன்.

வாழ்த்துகள் சொல்லி புது மாப்பிள்ளையாகப்போகிற ரவிச்சந்திரனிடம் பேசினோம். “எனக்கு லாவண்யாவோட தைரியம் ரொம்பப்  பிடிச்சிருந்தது. நடந்ததை நினைச்சு  உடைஞ்சுபோயிடாம முன்னை விட தைரியத்தோடு மீண்டு வந்த அவங்களுக்கு நானும், எனக்கு அவங்களும் வாழ்க்கை முழுக்கத் துணையா இருக்கணும்னு ஆசை வந்தது. புரபோஸ் பண்ணிட்டேன். ‘அன்னிக்கு நைட் என்ன நடந்ததுனு லாவண்யாகிட்ட யாரும் இன்னிக்கும் என்னிக்கும் கேட்கக்கூ டாது, நானும் கேட்கமாட்டேன்’னு சொல்லிதான் என் குடும்பத்தாரைத் திருமணம் பேசக் கூட்டிட்டுப் போனேன். லாவண்யாவைப் பார்த்ததும், என் பெற்றோருக்கும் ரொம்பப் பிடிச்சிப்போச்சு. ஜூன் 27-ல் கல்யாணம். இன்விடேஷன் அனுப்புறோம், நிச்சயம் வந்துடுங்க’’ என்பவரின் குரலில் தித்திக்கிறது நேசம்.

மகிழ்ச்சி!