மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புதையுண்டு போகவில்லை மனிதம்! - தெய்வத்தான் ஆகாதெனினும்!

புதையுண்டு போகவில்லை மனிதம்! - தெய்வத்தான் ஆகாதெனினும்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதையுண்டு போகவில்லை மனிதம்! - தெய்வத்தான் ஆகாதெனினும்!

தமிழ்ப்பிரபா - படம்: ச.வெங்கடேசன்

“புழுத்துப்போன எத்தனையோ பேரை அடக்கம் பண்ணியிருக்கேன் சார். ஆனா, ஒரு சம்பவத்தை மட்டும் என்னால மறக்க முடியாது. பிறந்த ஒரே நாளான பெண் குழந்தை இறந்துபோச்சு. அதை பிளாஸ்டிக் கவர்ல போட்டுக் குப்பைத்தொட்டியில் வீசிட்டாங்க. கவரோடு நாய் கவ்விட்டுப் போயிடுச்சு. பக்கத்தில வேலை செய்தவர், அதைப் பார்த்து நாயைத் துரத்திட்டு, கவர்ல இருந்த குழந்தையைத் தூக்கி வெச்சுட்டு என்னைக் கூப்பிட்டார். பச்சைப்புள்ள. திறந்த வாயை மூடலை. அதை அடக்கமே பண்ண முடியாம கதறி அழுதுட்டேன் சார்” - சொல்லும்போதே குரல் உடைகிறது ஜெய்சங்கருக்கு.

வேலூர் மாவட்டம் சுற்றுவட்டாரத்தில் உள்ள காவலர்கள், அரசு மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரின் அன்புக்கும் பாத்திரமாக இருந்துவரும் ஜெய்சங்கர் செய்யும் காரியங்கள் சாதாரணமானவை அல்ல. ``ஒரு மனுஷனுக்கு எந்தச் சூழ்நிலையிலயும் அநாதையா செத்துப்போற நிலைமை மட்டும் வந்துடக்கூடாது சார். பிடி அரிசி போடவாவது ஒரு கை வேணும்” எனச் சொல்லும் ஜெய்சங்கர், தன் சொந்த மாவட்டமான வேலூரில் ஆதரவற்ற பல சடலங்களைத் தனி ஆளாக அடக்கம் செய்துவருகிறார்.

புதையுண்டு போகவில்லை மனிதம்! - தெய்வத்தான் ஆகாதெனினும்!

அழுகிய நிலையில் உள்ள உடல்கள் என்றாலும், முகம் சுளிக்காமல் இவர் செய்துவரும் சேவை பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களை அடக்கம் செய்திருக்கும் இவர், இதைச் செய்வதற்காக பணம் என்று இதுவரை யாரிடமும் வாங்கியதில்லை.

``நான் இவங்களையெல்லாம் சவமாப் பார்க்கிறதில்லை... சிவமா பார்க்கிறேன்” என்கிற வாக்கியத்தை உரையாடலினூடே உச்சரித்துக் கொண்டே இருக்கிறார் ஜெய்சங்கர்.

மருத்துவமனை, காவல்நிலையங்களில் இருந்து ஜெய்சங்கருக்கு அழைப்பு வரும். அவர்களிடம் முறையாகக் கடிதம் வாங்கியபிறகு இறுதிச் சடங்குக்கான வேலையைத் தொடங்குகிறார். ஒவ்வொரு சடலத்தையும் ஏதோ குழி தோண்டினோம், புதைத்தோம் என்றில்லை, வில்வம், ருத்திராட்சம், விபூதி போன்றவற்றை சடலத்தின் முன்வைத்து, இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து அடக்கம் செய்கிறார்.

மனிதர்கள் மட்டுமின்றி சாலையில் அடிபட்டு இறந்துபோன நாய், பூனை, எலி எந்த உயிரினம் என்றாலும் ஊர்மக்கள் ஜெய்சங்கருக்கு போன் செய்கிறார்கள். குடல் சரிந்துபோய் இறந்து கிடந்தாலும் அவற்றைத் தூக்கி, குழிதோண்டி இறுதிக்காரியங்களைச் செய்து முடிக்கிறார்.

குடும்ப வறுமை காரணமாக பத்தாவதுடன் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்றவர். தற்போது வயதான அம்மாவுடன் வசித்துவருகிறார்.

``கொஞ்சம் சேத்துவெச்ச பணத்துல பிஸ்கெட் வியாபாரம் பண்ணிட்டிருந்தேன். கிடைக்கிற நேரத்தில இந்த மாதிரி விஷயங்களையும் பார்த்துட்டிருந்தேன். மும்முரமா வியாபாரத்தில் இருக்கும்போது `சங்கரு, வயசானவரு ஒருத்தரு செத்துக் கிடக்கிறாரு’ன்னு போன் வந்ததும் மனசு கேக்காது. வியாபாரத்தை விட்டுட்டு அங்கே ஓடிப்போயிடுவேன். இதனால் வியாபாரமே போச்சு. ஆனாலும் கவலையில்லை சார். அம்மாவும் நானும்தானே! எங்களுக்கு என்ன செலவு இருக்கப்போகுது?! வாழ்க்கையை ஓட்டிருவோம்” என்கிறார் புன்னகைத்தபடியே.