தொடர்கள்
Published:Updated:

தூரிகை தர்பார்!

தூரிகை தர்பார்!
பிரீமியம் ஸ்டோரி
News
தூரிகை தர்பார்!

தமிழ்மகன், தமிழ்ப்பிரபா - படங்கள்: க.பாலாஜி

தழ்களின் பக்கம்தோறும் வாசகர்களைப் பரவசப்படுத்திய தூரிகைக்காரர்களின் சந்திப்பு இது.

மாருதி: “ஓவியத்துல என்னுடைய ஆதர்சம் சில்பி. வாழ்நாள்ல ஒருமுறையாவது அவரைப் பார்த்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்னு காத்துட்டு இருந்தேன். ஒருநாள் அவரை பஸ்ல தற்செயலா பார்த்தப்போ, என்னை அறிமுகப்படுத்தி பஸ்ஸுன்னுகூட பார்க்காம அவர் கால்ல விழுந்தேன். அதுதான் என் வாழ்வு நிறைவடைஞ்ச தருணம்.”

தூரிகை தர்பார்!

ம.செ: “மெரினா பீச்ல இருக்கிற உழைப்பாளர் சிலைக்கு மாடலா நின்ன அனுபவத்தைச் சொல்லுங்க ராமு சார்!”

ராமு: “ஓவியக் கல்லூரி வளாகத்துல நாங்கெல்லாம் நின்னுப் பேசிக்கிட்டு இருக்கும்போது, எங்க கல்லூரி முதல்வர் ராய் சௌத்ரி என்னை மட்டும் ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போனார். எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. ‘இப்படி நில்லு’, ‘அப்படி நில்லு’னு என்னை போஸ் கொடுக்கச் சொன்னார். 15 நாள் தினமும் போய் போஸ் கொடுத்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது உழைப்பாளர் சிலைக்கு மாடலா நிக்கிறதுக்குத்தான் இந்தப் பயிற்சின்னு. ஒரு உழைப்பாளி சிலை, வானத்தை அண்ணாந்து பார்த்தாப்ல இருக்கும். அது நான்தான்!”

ம.செ:
“பிரபல ஓவியரோட மகனா இருந்தாலும் ஆரம்பத்துல எனக்கு ஓவியத்தின் மீது பெரிய ஈர்ப்பு வரலை. அப்பாவுக்கும் ரொம்ப வருத்தம். நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது அவருக்கு  உடம்பு முடியாமப்போச்சு. அந்த நேரத்தில் அவருக்கு உதவியா இருந்தேன். அப்பதான் இதைக் கத்துக்கணும்னு எனக்கு ஆர்வம் வந்துச்சு. அவருக்கு உதவி பண்ணிக்கிட்டே வரைய ஆரம்பிச்சேன்”

தூரிகை தர்பார்!

மாருதி: “ஜெயராஜ் ஓவியங்களுக்கு அப்போ மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. எங்க போனாலும் ஜெயராஜ்தான். அவரை மாதிரியே வரைய முயன்றிருக்கேன். ஒண்ணும் எடுபடாது. ஓவியத்துல எனக்குப் பெரிய வில்லன்னா, அது ஜெயராஜ்தான். அவர் வரையும் பெண்கள் படங்கள் கவர்ச்சியா இருக்கும். அதே டைப்ல நானும் ஒரு படத்தை வரைஞ்சுகொடுத்தேன். ‘என்னய்யா இது? முழுசா மூடி எடுத்துட்டு   வா’னு சொல்லிட்டாங்க.”

ஜெயராஜ்: “நான் எவ்வளவு கவர்ச்சியா போட்டாலும் யாரும் ஒண்ணும் சொன்னதில்லை.”

மாயா: “1945-ல ‘பிக்சர் போஸ்ட்’னு ஒரு சினிமா பத்திரிகைக்கு வரைஞ்சேன். 1955-ல ஜெமினி ஸ்டுடியோவுக்கு வந்து வாசன் சாரைச் சந்திச்சேன். அப்புறம் லெட்டர் வந்தது. வாசன் சாரே என்னை அப்பாயின்ட் பண்ணார். ஆனந்தவிகடன்ல ‘கஸ்தூரி திலகம்’ என்கிற தொடருக்குப் படம் வரைந்தேன். அதுல காந்தியோட மகனை வரையறதுக்கு ரெஃபரன்ஸ் இல்லை. கட்டுரையாசிரியர் எழுதியிருந்த வர்ணனையைக் கொண்டே ஒருவாறு காந்தியின் மகன் தோற்றத்தை யூகித்து வரைந்தேன். பின்னர் அந்தப் படத்தைப் பார்த்துட்டு காந்தியின் மருமகள் என்னைக் கூப்பிட்டு, தன் கணவரின் படம் தத்ரூபமாக இருக்கிறதென்று பாராட்டினாங்க. மறக்க முடியாத நிகழ்வு அது.”

தூரிகை தர்பார்!

ஜெயராஜ்: “அமெரிக்கன் காலேஜ்ல படிக்கும்போது எங்க காலேஜ் பியூட்டி பவானி. அவ்ளோ அழகு! அவங்களை நேரா பார்க்கிறதுக்குத் தயக்கமா இருந்தது. எப்பவும் அவங்களைப் போகவிட்டுப் பார்ப்பேன். அவங்க உருவம் மனசுல பதிஞ்சுபோக, அப்படியே அவங்கள காகிதத்துல வரைஞ்சேன். பக்கத்துல ஒரு பையன் அதைப் பார்த்துட்டு, ‘எனக்கும் இப்படி ஒண்ணு போட்டுக் கொடுடா. இல்லைன்னா எல்லோர்கிட்டயும் சொல்லிடுவேன்’னு சொன்னான். அவனுக்கு, அவன் ஃப்ரெண்ட்ஸுக்குன்னு பல பேருக்கு அந்த ஓவியத்தைத் திரும்பத் திரும்ப வரைய, எல்லோர் கையிலும் பவானி ஓவியம். அப்படியே என்னோட ஓவியத் திறமை காலேஜ் முழுக்கப் பரவுச்சு. ‘ஓ... நாமகூட ஓவியர்தான்போல’னு எனக்கே என்மேல நம்பிக்கை வந்துச்சு. அந்த பவானி ஓவியத்தைக் காட்டித்தான் எனக்குப் பத்திரிகையில வேலை கிடைச்சுது.”

ஸ்யாம்: “நான் இங்க வந்ததே, இவங்க எல்லாரும் பேசுறதைக் காதுகுளிரக்  கேட்கத்தான். இவங்க எல்லாரும் விரிச்ச பட்டுக்கம்பளத்துல நான் குடுகுடுன்னு ஓடிவந்துட்டேன். ராஜேஷ்குமாரோட தொடர்கதைக்கு நான்  முதன்முதலா படம் போட்டேன். அது தொடர்கதையா சிறுகதையானுகூட அப்போ எனக்குத் தெரியாது. அவ்வளவு ஏன்... ராஜேஷ்குமாரே யார்னு அப்போ தெரியாது. சீன் சொல்வாங்க, படம் போடுவேன். அவ்வளவுதான். பிறகுதான் இந்தச் சூழலைப் பற்றியும், ஓவியத் துறையில எத்தனை ஜாம்பவான்கள் என்னைச் சுற்றி இருக்காங்கனும் தெரியவந்துச்சு.”

தூரிகை தர்பார்!

மாருதி: “ஜெயலலிதா சித்திரக் கதைக்காக ஜெயராஜ் வரைஞ்ச ஓவியங்களைப் பார்த்து, அவங்களே இவருக்கு போன் பண்ணி சிலாகிச்சுப் பேசுவாங்க. என்ன ஜெயராஜ்..?”

ஜெயராஜ்: “ஆமா. ஜெய்சங்கரை ஹீரோவாவும் ஜெயலலிதாவை ஹீரோயினாவும் வெச்சு வரைஞ்ச படக்கதை அது. அதைப் பார்த்துட்டு, ஜெயலலிதா ரொம்பவே எக்ஸைட் ஆகி, போன் பண்ணி ‘இந்த ஆங்கிள்ல வரைஞ்சா நல்லா இருக்கும்’னுலாம் சொல்லி ரசிப்பாங்க. இங்கே இருக்கிற ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதேசமயம், தங்களோட தனித்துவம் மாறாம, பத்திரிகை ஆபீஸ்ல கேட்கிற நேரத்துக்குக் கொடுத்துடுவோம். அட்டெண்டர் கதை கொண்டு வருவாங்க. ‘கொஞ்சம் உட்காருப்பா’னு சொல்லிட்டு உடனே வரைஞ்சு குடுத்துடுவேன்.’’

தூரிகை தர்பார்!

மாருதி: “எனக்கெல்லாம் மணிக்கணக்கா ஆகும்.”

ம.செ: “இப்ப அந்த மாதிரி வேகமாப் படம் போட்டுக் கொடுக்கிறது, இந்த இளவரசர் ஷ்யாம்தான்.”

ஸ்யாம்: “நீங்க எல்லாரும் மன்னர்கள்னா, நான் இளவரசரா இருக்கிறதுக்கு சம்மதம்!”

அனைவரும் ரசித்துச் சிரிக்க, அந்த ஓவியப் பொழுது மகிழ்ச்சியாக நிறைவுற்றது.