
தமிழ்ப்பிரபா - படம்: க.மணிவண்ணன்
“அந்தம்மாவுக்குப் பேரப் பிள்ளைங்க பிறந்து, அந்தக் குழந்தைங்களோட குரல்களை மட்டும்தான் கேட்டிருக்காங்களே தவிர, ரொம்ப வருஷமாகியும் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முடியலை. கண் ஆபரேஷன் பண்ணி, கட்டு பிரிச்ச உடனே அந்தப் பிள்ளைகளைப் பார்த்து அவங்க அழுத காட்சி, என்னால மறக்கவே முடியாது சார்” எனச் சொல்லும் மருத்துவர் பாரிகுமார், இப்படிப் பல நெகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி சந்திப்பவர்.
தருமபுரியில் கண் மருத்துவமனை வைத்திருக்கும் பாரிகுமார், ஏழை மக்களுக்கு இதுவரை ஏறக்குறைய 15,000-த்துக்கும் மேற்பட்ட இலவச கண் அறுவைசிகிச்சை செய்திருக்கிறார். அப்பா, வன அதிகாரி. அம்மா, ஆசிரியை. சேவை மனப்பான்மைகொண்ட இருவரின் பணிகளையும் அருகில் இருந்து பார்த்து வளர்ந்தவர் பாரிகுமார். `` `நீ மருத்துவம்தான் படிக்கணும். படிச்சுட்டு மக்களுக்கு சேவை செய்யணும்’னு என்னைவிட எங்க அப்பா-அம்மா ரொம்ப உறுதியா இருந்தாங்க” என்கிற பாரிகுமார், கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவச் சேவை புரிந்துவருகிறார்.

``தருமபுரிக்கு வந்தப்போ, கண் மருத்துவ மனைகள் ரொம்பக் குறைவு. கண் அறுவை சிகிச்சைக்காக மக்கள் சேலத்துக்குப் போகவேண்டிய சூழல்லதான் தருமபுரியில ஒரு கண் மருத்துவ மனையை ஆரம்பிச்சோம்” என்னும் பாரிகுமார், தருமபுரியில் உள்ள சமூகசேவைக் குழுக்களை ஒருங்கிணைத்து அந்த மாவட்டத்து மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக மாறியிருக்கிறார்.
``பொருளாதார வசதியுள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் அறுவைசிகிச்சை செய்கிறேன். அவர்களுக்குப் பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் மருந்துகளை வைத்து வசதி இல்லாத இன்னொருவருக்கு சிகிச்சை செய்வேன்” எனப் புன்னகைக்கும் அவர் முகத்தில், தன் பெற்றோரின் கனவை மெய்ப்படுத்திய பெருமிதம் தெரிகிறது.
தொழுநோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறதா எனப் பல இடங்களில் முகாம்கள் நடத்தி, அவர்களுக்கே முன்னுரிமையும் தருகிறார். ``அவங்க இந்தக் குறைபாட்டை வெளிய சொல்றதுக்குத் தயங்குவாங்க. சொன்னாலும் `நம்மை யாரு கவனிப்பாங்க?’னு விட்டுடுவாங்க. அரசு மருத்துவமனைகளுக்கு இவங்க போனாலும் சில சூழல்களால அவங்க மோசமா நடத்தப்படும்போது ‘பார்வையே வேணாம்’னு திரும்பிடுவாங்க. அதனாலதான் நானே இவங்களைத் தேடிப் போறேன்” என்பவரின் மனிதநேயப் பயணம் நீண்டது.
``வயசானவங்க, தங்களுக்குப் பார்வை மங்கினவுடனே `வயசாகிடுச்சு. அதான் பார்வை போயிடுச்சுபோல’ன்னு விட்டுடுறாங்க. அது வெறும் கண்புரை அறுவைசிகிச்சையாகத்தான் இருக்கும். இவர்கள் மீது பெத்த பசங்களும் அக்கறை காட்டுறதில்லை. நம்மால எதுக்கு பிள்ளைகளுக்கு சிரமம்னு இவங்களும் இருட்டிலேயே காலம் தள்ளிடுறாங்க. இப்படி எத்தனையோ முதியவர்களைப் பார்த்திருக்கேன்’’ என்று ஆதங்கப்படுபவர், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களைத் தேடித் தேடி பார்வை வழங்கிவருகிறார்.
மேலும் கண்தானம் செய்தவர்களின் கண்களைச் சேகரித்து மற்ற மருத்துவ மனைகளுக்குக் கொடுத்து உதவி செய்ததன் மூலம் இதுவரை முந்நூறு ஜோடிக் கண்களை, தேவையானவர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். 25 ஆண்டுகால மருத்துவத் துறையில் பாரிகுமார் பெரிதும் சம்பாதித்தது, பார்வை பெற்ற மனிதர்களின் வெளிச்சப் புன்னகையைத்தான்.