ஒடிசாவில் மின்சாரம் தாக்கி ஒரே இடத்தில் 7 காட்டுயானைகள் பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள கமலங்கா கிராமத்தில் ஒரே இடத்தில் 7 காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. நேற்று ஒரு விவசாயியின் வயல் வழியாக 13 யானைகள் சென்றுள்ளன. அப்போது விவசாய நிலத்துக்கு அருகில் இருந்த ரயில்வே பாதையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அங்கு இருந்த உயர் மின்னழுத்தக் கம்பிகள் தாக்கி 7 யானைகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளன. மீதமுள்ள யானைகள் தப்பிச் சென்றுள்ளன.
இன்று காலை வயலுக்குச் சென்ற விவசாயி இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக அங்குள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ரயில்வே பாதையில் 15 அடிக்கு மேலேதான் மின்னழுத்தக் கம்பிகள் செல்ல வேண்டும். ஆனால், யானைகள் கடக்கும் இடத்தில் கம்பிகள் 8 அடியில் இருந்துள்ளன. இதில் உரசிய யானைகளே இறந்துள்ளன என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் அலட்சியம் மற்றும் தவற்றால்தான் இந்த இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டில் அதிகமான விலங்குகள் செத்து மடிவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதே போன்று ஆளில்லா ரயில் பாதைகளை கடக்கும் போது நிறைய யானைகள் இறந்துள்ளதாகும் இவற்றுக்கு உரிய தீர்வு காணவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.