
தமிழ்ப்பிரபா - படங்கள்: எல்.ராஜேந்திரன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி
“ ‘அப்பா வந்தா தேடுவார்ண்ணே, சொல்லிட்டுப் போ’ன்னு சொன்னேன். `தேடட்டும்’னு சொல்லி விறுவிறுன்னு நடந்துபோச்சு. அதுதான் எங்க அண்ணன் கடைசியா என்கூட பேசினது’’ என்ற தனுஸ்ரீயால் அதற்குமேல் பேச இயலவில்லை. அக்கா அழுவதைப் பார்த்து தங்கை முத்துச்செல்வியும் அழுகிறாள். பாலச்சந்தர் மட்டும் அழாமல் எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்தான். அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷின் தம்பி, தங்கைகள்தான் இவர்கள் மூவரும்.
சங்கரன்கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலையிலிருந்து பிரிந்து குறுகலான மண்பாதையில் நுழைந்தால் உள்ளே இருக்கும் குறுங்கிராமம் ரெட்டிபட்டி. மருத்துவர் ஆகி தன் கிராமத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வு எழுதவிருந்த தினேஷ், இறுதியில் தன் உயிரையே போக்கிக்கொண்டார். குழந்தைகளுடன் அப்பா மாடசாமி, தலையில் கை வைத்தபடி ஓர் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.

``எங்கம்மா, நான் கைக்குழந்தையா இருக்கும்போதே இறந்துட்டாங்க. எனக்கு நினைவுதெரிஞ்சு, எங்க அண்ணன்தான் என்னையும் எங்க பாப்பாவையும் சின்னவயசுல இருந்தே ரொம்ப கண்டிஷனா வளக்கும். `படி படி’ன்னு சொல்லிட்டே கிடக்கும்” என்ற பாலச்சந்தர், மேலும் பேச முடியாமல் மீண்டும் அமைதியானான். அவன் தற்போது எட்டாம் வகுப்புத் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறான்.
தினேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போதே, அவர் அம்மா இறந்துவிட்டார். பிறகு, அப்பா மாடசாமி மறுமணம் செய்துகொண்டு இரண்டாவது மனைவியுடன் வீட்டுக்கு வந்ததிலிருந்தே தன்னுடைய தம்பி-தங்கைகளான பாலச்சந்தர், தனுஸ்ரீ, முத்துச்செல்வி மூவர் மீதும் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தான் தினேஷ்.
`` `ரேஷன் கடைக்குப் போயிட்டு வாடா’ன்னு சொன்னேன். அவன் `முடியாது’ன்னு சொன்னான். நான் திட்டினேன்னு கோவிச்சுக்கிட்டு சென்னைக்குப் போயிட்டான். அங்க எங்கயோ ஹோட்டல்ல பத்து நாள் வேலை செஞ்சிட்டிருந்தவனைக் கண்டுபுடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. நல்லாதான்யா இருந்தான். வந்த மறுநாள், எதுக்கு வீட்டைவிட்டு ஓடிப்போய் இப்படிப் பண்ணிக்கிட்டான்னு தெரியலை. எனக்கு இன்னும் நெஞ்சு பதறுது” என்கிறார் தினேஷின் சித்தி.
கடிதத்தில் அப்பா மாடசாமியின் செல்போன் நம்பரை எழுதிவைத்துவிட்டு இறந்தான் தினேஷ். அது ஊடகங்களில் பரவ, பலர் அவரைத் தொடர்புகொண்டு திட்டியதிலும் விசாரித்ததிலும் மேலும் மனம் உடைந்து போயிருக்கிறார் மாடசாமி.

``ஐயா, நான் தினமும் குடிப்பேன், உண்மைதான். ஆனா, எந்த வம்பு தும்புக்கும் போனதில்லை. எம் புள்ளைங்க வெக்கப்படுற மாதிரியெல்லாம் நடந்துக்கிட்டதில்லை. என்கூட பொறந்த தம்பிக ரெண்டு பேரும் வாத்தியார். அவங்கதான் அவனைப் படிக்கவெச்சாங்க. அவனும் நல்லா படிப்பான்யா. நான் குடிக்கிறது என் புள்ளைக்கு இந்த அளவுக்குப் பிடிக்காம இருக்குனு எனக்குத் தெரியாம போச்சேய்யா. என் மொகத்தைப் பார்த்து அவன் ஒரு வார்த்தை சொல்லியிருந்தான்னா... இந்தக் கருமத்தைத் தொட்டிருக்க மாட்டனே... அவன் மேலயும் என் மிச்ச பிள்ளைக மேலயும் சத்தியம் பண்ணி சொல்றேன்யா... இனிமே குடிக்கவே மாட்டேன்” என்று குரலுயர்த்தி சத்தியம் செய்தார் மாடசாமி.
இந்த சத்தியம் நிஜமாக வேண்டியதும், ஒவ்வொரு குடிகாரரும் இந்த சத்தியத்தை மேற்கொள்ள வேண்டியதுமே பல மாணவர்களின் மன உளைச்சலையும் மரணத்தையும் தடுத்து நிறுத்தும்.