அலசல்
Published:Updated:

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

டந்த 21 வருடங்களாக செயல்பாட்டில் இருக்கும் பொறியியல் கவுன்சலிங் நடைமுறைகளை, இந்த ஆண்டு முதல் மாற்றி அமைத்திருக்கிறது தமிழக அரசு. இனி ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடக்கும். நீட் தேர்வு மைய விவகாரத்தில், ‘`நாங்களாக எந்த மாணவருக்கும் வெளிமாநிலங்க ளில் ஒதுக்கீடு செய்யவில்லை. எல்லாமே கம்ப்யூட்டர் முறையில்தான் ஒதுக்கீடு செய்யப் பட்டது’’ என்ற வாதத்தை சி.பி.எஸ்.இ முன்வைக்கி றது. அட்மின்மீது பழிபோடும் இந்த அரசியல் போல அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கவுன்சலிங்கில் நடந்தால் மாணவர்களின் நிலை என்னாவது?

கடந்த காலங்களில் கவுன்சலிங்கில் உடனுக்கு டன் கல்லூரி காலியிட நிலவரங்கள் தெரியும். இதனால், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி நேரடியாகக் கல்லூரியைத் தேர்வுசெய்தனர். இனி ஆன்லைன் வழியே கல்லூரி தேர்வு நடக்கும் என்பதால், எந்த விவரமும் மாணவர்களுக்குத் தெரியாது. ‘‘குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்’’ என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம். ``இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மாணவருக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிந்துகொண்டு பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது. ஆனால், ஐ.ஐ.டி-யில் ஆன்லைன் கவுன்சலிங் நடத்துவதைப் பார்த்து அண்ணா பல்கலைக்கழகமும் அப்படிக் கொண்டுவருகிறது.

ஐ.ஐ.டி-க்களில் மொத்தம் 10,988 இடங்கள் . இதில், பொதுப்பிரிவினருக்கு 5,394 இடங்கள் உள்ளன. பொதுவாக, ஐ.ஐ.டி கவுன்சலிங்கில் மும்பை ஐ.ஐ.டி-யில் சேரக் கடுமையான போட்டி இருக்கும். இங்கு சுமார் 400 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில், 2364-வது ரேங்க் பெற்ற மாணவனால் சேர முடிகிறது. 8,356-வது ரேங்க் பெற்ற மாணவருக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் இடம் கிடைக்கிறது. அதாவது, 5,000 மாணவர்கள் ஆன்லைன் வழியே தேர்வு செய்யும்போது கவனிக்காமல்விட்ட இடம் 8,356-வது இடத்தைப் பெற்ற மாணவனுக்குக் கிடைக்கிறது.

இதேபோன்ற நிலை அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் கலந்தாய்விலும் ஏற்படக்கூடும். தற்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 567 கல்லூரிகள் உள்ளன. இதில், மாணவர்களின் விருப்பமுள்ள 100 கல்லூரிகளிலும் பத்து பாடங்கள் இருக்கின்றன என்றால், அவர்கள் 1,000-க்கும் மேற்பட்ட வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில், எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் ஒதுக்கீடு செய்வது என்பது கணினிக்கு மட்டும்தான் தெரியும். இதனால், எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்காது. கிராமப்புற மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கல்லூரியை ஆன்லைன் வழியே எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது தெரியாது. வேறு யாரும் தவறாக ஆலோசனை வழங்கினால், மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

வெளிப்படைத்தன்மை என்பது ஆன்லைன் கவுன்சலிங்கில் முழுமையாகப் பாதிக்கப்படும். பொறியியல் கலந்தாய்வுக்கு உதவும் வகையில், 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அரசு சொல்கிறது. ஆனால், இந்த உதவி மையங்களில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயிற்சியும் வழங்கப்பட வில்லை. இவர்களால் எவ்வாறு வழிகாட்ட முடியும்? ஆன்லைன் வழியே கல்லூரித் தேர்வு என்பதால், குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் உள்ள நிர்வாகப் பிரிவில் மாணவர்கள் சென்று சேரவே வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே உள்ள நேரடிக் கலந்தாய்வு முறைதான் மாணவர்களுக்கு உதவும்” என்கிறார் நெடுஞ்செழியன்.

ஆன்லைன் கவுன்சலிங் குறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியரும், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் செயலாளருமான ரைமண்ட் உத்தரியராஜிடம் பேசினோம். ``இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் எவ்வாறு ஆன்லைன் கவுன்சலிங் நடத்துகின்றன என்பதை ஆய்வுசெய்து, அங்கு எதிர்கொள்ளும் பிரச்னை கள் அனைத்துக்கும் தீர்வுகாணும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வை வடிவமைத்திருக்கிறோம்.

மாணவர்கள், வீட்டிலிருந்தபடியே பொறியியல் கல்லூரியைத் தேர்வுசெய்துகொள்ளலாம் என்றாலும், கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்களை அமைத்திருக்கிறோம். விண்ணப்பிப்பது, சான்றிதழ்களைச் சரிபார்ப்பது, ஆன்லைன் கலந்தாய்வின்போது கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என மாணவர்கள் இந்த உதவி மையங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு மையத்திலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய விவரக் கையேடு வழங்கப்படும். மேலும், ஆன்லைன் கவுன்சலிங்கில் கல்லூரியை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த வீடியோ திரையிட்டுக் காண்பிக்கப்படும். இதன்மூலம், எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது எப்போது, பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்ட ஆண்டு, கல்விக் கட்டணம்... என்று கல்லூரி குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு கல்லூரியும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு செமஸ்டரில் பெற்ற தேர்ச்சி விவரங்களையும் வெளியிட உள்ளோம். கலந்தாய்வில் கலந்து கொள்ளும் முன்பே மாணவரின் ரேங்க் அடிப்படையில் எந்தெந்தக் கல்லூரிகளுக்கு வாய்ப்புள்ளது என்ற விவரங்களையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடவுள்ளோம்.

மற்ற கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் ஆன்லைன் கலந்தாய்வுகளில், அனைத்து மாணவர்களும் முதல் ரவுண்டிலேயே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வில் முதல் சுற்றில் ஒன்று முதல் 15,000 வரை ரேங்க் பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அடுத்த நிலையில், 15,001 ரேங்க் முதல் 40,000 ரேங்க் வரை உள்ளவர்கள் கலந்துகொள்வார்கள். இதுபோல் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு ஐந்து சுற்றுகளாக நடக்கும்.

ஆன்லைன் வழியாக விருப்பக் கல்லூரிகளையும், விரும்பும் பாடப்பிரிவையும் வரிசைப்படி தேர்வு செய்ய மூன்று நாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் எத்தனைக் கல்லூரிகளை வேண்டுமானாலும் விருப்பப்பட்டியலில் தெரிவிக்கலாம். மூன்றாவது நாள் மாலை 5 மணிக்கு, கல்லூரித் தேர்வு இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும். அதன் பிறகு மாற்ற முடியாது. அடுத்த நாள், மாணவர்கள் பெற்ற ரேங்க்கின் அடிப்படையில் தற்காலிக இடஒதுக்கீடு (கல்லூரி தேர்வுசெய்யப்பட்டது) குறித்த விவரம் இ-மெயிலில் தெரிவிக்கப்படும்.

தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப் பட்ட கல்லூரி குறித்து முடிவெடுக்க, இரண்டு நாள்கள் வாய்ப்பு வழங்கு கிறோம். இந்த நிலையில், மாணவர்களுக்கு ஐந்துவிதமான வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. முதல் வாய்ப்பு, தேர்வு செய்த கல்லூரி பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இரண்டாவது வாய்ப்பு, ஒதுக்கீடு வழங்கப்பட்ட கல்லூரிக்குப் பதிலாக ஏற்கெனவே விருப்பமுள்ள கல்லூரிகள் எனத் தெரிவுசெய்த பட்டியலில் ‘தேர்வு செய்த கல்லூரி ஓகேதான். ஆனால், வாய்ப்பு இருந்தால் வேறொன்றில் ஒதுக்கீடு செய்யுங்கள்’ என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்யலாம். மூன்றாவது, ‘தேர்வு செய்த கல்லூரி இடம் வேண்டாம். ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே ஒதுக்கீடு செய்யுங்கள்’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம். நான்காவது, ‘அடுத்த சுற்று கவுன்சலிங்கில் கலந்துகொள்கிறேன்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். ஐந்தாவது, ‘கலந்தாய்விலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இறுதியில் ஒதுக்கீட்டு ஆணை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

கவுன்சலிங்கின் ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும், காலியிடங்கள் குறித்த பட்டியல் தயார்செய்து வெளியிடுவோம். ஆகவே, மாணவர்கள் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் ஆன்லைன் வழியே தேர்வுசெய்யலாம்” என்கிறார் அவர்.

தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது வெற்றி. ஆனால், அது கிராமப்புற மாணவர்களுக்கு உதவுமா என்பது ஜூலை முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

- ஞா.சக்திவேல்முருகன்
படங்கள்: பா.காளிமுத்து, ப.பிரியங்கா

ரகசியம் அவசியம்!

பொ
றியியல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் தங்களின் யூஸர் நேம், பாஸ்வேர்டு, மொபைல் எண் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. ஒரு மாணவர் பதிவு செய்தபோது குறிப்பிட்ட மொபைல் எண் யாருக்காவது தெரிந்தால்கூட, தனியார் பொறியியல் கல்லூரிகளின் கவுன்சலிங்கில் குறுக்கீடு செய்ய முடியும் என்பதால், ரகசியம் காப்பது அவசியம். பல தனியார் கல்லூரிகள், மாணவர்களை மூளைச்சலவை செய்யும் ஏற்பாடுகளில் இப்போதே இறங்கிவிட்டன, கவனம்!

இன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து!

விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் மகன் / மகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோர் ஆன்லைன் வழியே விண்ணப்பித்த பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் சரிபார்க்க வந்து, நேரடிக் கலந்தாய்விலும் கலந்துகொள்ள வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால், சான்றிதழ் சரிபார்க்கும்போதே வட்டாட்சியரிடம் முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழைப் பெற்றுச் செல்ல வேண்டும்.