
ச.ஸ்ரீராம்
எல்லாமே பர்கர்தான்!
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கோர்ஸ்கி 28, 788 பிக் மேக் எனப்படும் பர்கர் சாப்பிட்டுள்ளார். இதற்காக 2016-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 2 நாள்களுக்குமுன், 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார். 1972-ம் ஆண்டிலிருந்து அவர், பர்கர் மட்டுமே சாப்பிட்டு வருகிறாராம். பர்கர் வாங்கியதற்கான அனைத்து ரசீதுகளையும் பத்திரப்படுத்திவைத்துள்ளார்.

200 கோடி வசூல் அள்ளிய அவெஞ்சர்ஸ்!
உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்போடு வெளியான ‘`அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்’’ திரைப்படம் முதல் வாரத்தில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்திருக்கும் இந்த சூப்பர் ஹீரோக்கள் படம் உலக அளவில் 857 மில்லியன் டாலர் வருமானத்தைக் குவித்துள்ளது. படம் சுமார்தான் என்று விமர்சனங்கள் இருந்தாலும் சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களுக்குப் படம் மாஸ்தான்.

புதினைப் பின்னுக்குத் தள்ளிய ஜின்பிங்!
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங். இந்த பட்டியலில் 9 வது இடத்தில் இந்தியப் பிரதமர் மோடி இருக்கிறார். முதல் 25 இடங்களுக்குள் ஒரே ஒரு இந்தியர் இவர் மட்டும் தான்.

இந்தியாவுக்குள் வரும் வால்மார்ட்!
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத் துறையில் நுழைய வால்மார்ட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் மூலமாக ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவுக்குள் நுழைகிறது வால்மார்ட்.


மலேசிய பிரதமர் 92 நாட் அவுட்!
மலேசியாவில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் நஜீப் ரசாக் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மகதீர் முகமது 92+ வயதில் மீண்டும் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டார். 1964-ம் ஆண்டிலிருந்து மலேசியாவில் 22 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர் தற்போதும் மீண்டும் பதவிக்கு வந்துள்ளார்.

தெரியுமா?
காவல்துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு, பிரிட்டன்.