சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா

என். சொக்கன்

வாட்டர் லெவல் மீட்டர்!

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஓடும் ஆறுகள், ஏரிகள் போன்றவற்றின் நீர்மட்டம் மழைநீரால் உயரும்போது, வெள்ளம் வழிந்து வெளியே வரக்கூடும். அதனால் மக்களுடைய உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு வரலாம்.

இதைத் தவிர்க்கவேண்டுமென்றால், ஆறுகள், ஏரிகளின் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். அவை ஓர் அபாய எல்லைக்குமேல் சென்றால் சட்டென்று நீரை வேறுபக்கம் திருப்பிவிடவேண்டும், அல்லது, மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்ப வேண்டும்.

இந்தியா

இதுவரை மனிதர்கள் செய்துகொண்டிருந்த இந்த வேலையை, இனி தொழில்நுட்பம் செய்யப்போகிறது. மும்பையில் ஐந்து நதிகள், இரண்டு ஏரிகளில் நீரோட்டத்தைக் கண்காணிக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. நீர்மட்டம் அபாயமான எல்லையைத் தாண்டும்போது, இவை அலுவலர்களைத்தானே தொடர்புகொண்டு எச்சரிக்கும், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்கலாம்.

சுற்றுலாத் தளங்கள் தனியார் வசம்!

இந்திய அரசு சமீபத்தில், ‘பாரம்பர்யமிக்க நம் சுற்றுலாத்தலங்களைத் தனியார் நிறுவனங்கள் கவனித்துக்கொள்ளலாம்’ என்று அறிவித்தது . இதன்படி, இந்தியாவின் பாரம்பர்யமிக்க இடங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளலாம்; அதன்பிறகு, அந்நிறுவனங்கள் தங்களுடைய சொந்தச்செலவில் அந்த இடங்களைச் சிறப்பாகப் பராமரிக்க வேண்டும், அங்கே வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டும், இதற்காக அவர்கள் சிறு கட்டணம் வசூலிக்கலாம், ஆனால், அந்தப் பணத்தை லாபமாக வைத்துக்கொள்ளக் கூடாது, அதையும் அந்த இடத்தின் பராமரிப்புக்கே செலவிட வேண்டும்.

இந்தியா

இந்தத் திட்டத்தின்படி, தில்லியில் உள்ள செங்கோட்டையைப் பராமரிக்கும் பொறுப்பை டால்மியா பாரத் குழுமம் ரூ25 கோடி தந்து ஏற்றுக்கொண்டது. இதேபோல் குதுப் மினார், ஹம்பி, அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பில் விடப்படும் என்று தெரிகிறது. அதேசமயம், தேசத்தின் முக்கியமான தலங்களையெல்லாம் இப்படித் தனியார்களிடம் ஒப்படைப்பது சரியில்லை என்கிற குரலும் எழுந்திருக்கிறது.

ஆளில்லா டிராக்டர்!

இந்தியா

முன்பெல்லாம் வயல்களில் மாடுகளை வைத்து உழுதுகொண்டிருந்தார்கள். பிறகு, டிராக்டர்கள் வந்து அந்த வேலையை எளிமையாக்கின. இப்போது, புகழ்பெற்ற மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் தானியங்கி டிராக்டர் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இதை வாங்கும் விவசாயி சில பொத்தான்களைத் தட்டினால் போதும், டிராக்டர் நிலத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப உழுதுவிடும். சாதாரண டிராக்டர்களை மனிதர்கள் இயக்கி உழுவதைவிட, இந்தத் தானியங்கி டிராக்டர்களின் துல்லியமும் செயல்திறனும் மிகச்சிறப்பாக இருக்குமாம்.

ஃபேஸ்புக்ல போஸ்டிங்...  திருடனுக்கு பூஸ்டிங்!

இப்போதெல்லாம் வெளியூர் போகிறவர்கள் நிச்சயம் ஃபேஸ்புக்கில் நுழைந்து, ‘நாங்க ஊருக்குப்போறோம்’ என்று போடுகிறார்கள்.

இப்படித்தான் ஹைதராபாதில் ஒரு குடும்பம் வெளிநாடு செல்கிற மகிழ்ச்சியில் அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது. இதைத் தெரிந்துகொண்ட ஒரு திருடன் அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்து, நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான்.

இந்தியா

அவன், அந்த நகைகளை விற்கச் சென்றபோது பிடிபட்டுவிட்டான். ‘அவங்க ஊருக்குப் போவது எப்படித் தெரியும்?’ என்று காவல்துறையினர் விசாரித்தபோது, ‘அந்த வீட்ல எல்லாரும் வெளிநாடு போறாங்கன்னு ஃபேஸ்புக்ல பார்த்தேன். உள்ளே நுழைஞ்சு திருடிட்டேன்’ என்றான்.

தெரியுமா?

மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயான ரயில் தடமே, இந்தியாவின் முதல் பசுமை தடமாகும்.