சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

தமிழ்நாடு

தமிழ்நாடு
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாடு

ஜெ.ரவி

‘அனுமதியின்றி பள்ளிச் சுற்றுலா கூடாது!’

பள்ளிக் கல்வித்துறை அனுமதியுடன்தான் மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என மெட்ரிக் பள்ளிகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சுற்றுலா செல்ல உள்ள இடம் மற்றும் நாள்கள் குறித்துப் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் விவாதித்து ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும்; நான்கு நாள்களுக்கு மேல் சுற்றுலா நீளக் கூடாது; பருவநிலை மற்றும் வானிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு சுற்றுலாவுக்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்; சுற்றுலாவுக்கு வரும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரிடமும் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட வேண்டும்; பத்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதமும், மாணவிகள் சுற்றுலாவில் பங்குபெற்றால் நிச்சயம் ஒரு ஆசிரியை உடன்செல்ல வேண்டும்; சுற்றுலாவின் நோக்கம் கல்வி சார்பானதாக இருக்க வேண்டும். பெற்றோர்களையோ, மாணவர்களையோ கண்டிப்பாகச் சுற்றுலாவுக்கு வரவேண்டும் என்று நிர்பந்தம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

தமிழ்நாடு

சோதனை, கெடுபிடி, அலைச்சல்... ‘நீட்’டால் அவதிக்குள்ளான மாணவர்கள்!

கடும் சோதனைகள், கெடுபிடிகளுக்கு இடையே, நீட் தேர்வு தமிழகத்தில் நடந்தது. மொத்தம் 1.07 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. பல நூறு கிலோ மீட்டர் பயணம், தேர்வு மையங்களில் நடந்த கடும் சோதனைகள், கெடுபிடி என மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகினர். டிசைன் போட்ட ஆடைகள், ஹேர்பின்கள், ஹேர் பேண்டுகள், காதணிகள், கடிகாரம், கயிறு என எதையும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. கேள்வித்தாள் குழப்பம், தேர்வு மையங்களில் நிலவிய சிக்கல் எனப்பெரும் அவதிக்குள்ளாகினர் மாணவர்கள்.

தமிழ்நாடு

வந்தன புதிய பாடப் புத்தகங்கள்!

தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் வெளியிடப்பட்டன. சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களைக்கொண்டு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டமும் பாடநூல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

‘சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த காய்கறிக் கண்காட்சி!’

நீலகிரி மாவட்டத்தில் தற்போதைய கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சி நடந்தது. காய்கறிகளைக் கொண்டு பல்வேறு உருவங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 500 கிலோ கத்திரிக்காய்களால் அமைக்கப்பட்ட நந்தி உருவமும், பூங்கா நுழைவாயிலில் காய்கறிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பார்பி கேர்ள் உருவமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.

தமிழ்நாடு

‘காவல்துறைக்கு வாங்கப்பட்ட 21 குதிரைகள்!’

சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணி, குடியரசு தின, சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பண்டிகைக் காலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் குதிரைகள் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னைக் காவல் குதிரைப்படையை மேம்படுத்துவதற்காகப் புதிதாக 21 குதிரைகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்துக்  தற்போது இதன் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

தெரியுமா?

‘லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களே, குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வுசெய்கின்றனர்.’